Welcome to Sethu Boomi..!

சேது பூமி

 

திருப் புல்லாணி

 

இப்போதுள்ள தேவிப் பட்டினம் தொட்டுச சேதுக்கரை வரை
ஒரே காடாக இருந்தது ஒருகாலத்தில்.
காடு என்றால் ஒரே தர்ப்பைக் காடு.
தர்பாரண்யம் என்றே பேர் அதற்கு.
அது இராமாயணக் காலம்.

அப்போlதெல்லாம் இந்ப் பகுதியில் ஊர் ஏது? வெறும் காடுதான்.
உத்திர கோச மங்கையில் ஒரு கோவிலும், இங்கே உள்ள திருப் புல்லாணிக் கோவில் மட்டுமே இப் பகுதிக் கோவில்கள். இராமேச்வரத்தில் கூட ஏதும் இல்லை என்றால் இதன் பழமையைப் பற்றித் தெரிந்து கொள்ளக் காலத்தின் வெகு பின்னே பயணிக்க வேண்டும் நீங்கள்

ஸ்ரீராம பிரானின் தந்தை தசரதன் கூட இங்கே வந்து இந்தத் திருக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஆதி ஜெகந்நாதப் பெருமாளை வணங்கித்தான் வரம் பெற்றதாகக் கூறப் படும் செய்திளை வெகு காலப் புராணம் என்று ஒதுக்க முடியவில்லை. காரணம் அரசமரம் மற்றும் ஓரிதழ்தாமரை மூலிகை.
ஒன்று இங்கே தல விருட்சம், இன்னொன்று கோவிலுக்குள் காணப் படும் அந்த அபூர்வ மூலிகை.

அந்த இரண்டின் குணங்கள் என்ன, என்று யாராவது சித்த வைத்தியரிடம் போய் தெரிந்து கொள்ளுங்கள், தசரதன் வருகைக் காரணம் புரிந்திருக்கும். தசரதனோ பத்துத் திசைளிலும் தேர் செலுத்தும் வல்லமை பெற்றவன். அயோத்தி எங்கோ இருந்தாலும், இடையே ஆரண்யம் இருந்தாலும், வானச் சாலையில் வரத் தடை ஒன்றும் இல்லையே.




மூர்த்தி



ஸ்ரீராம வள்ளலுக்கு இந்தப் பகுதியின் தொந்தம் அவர் பிறப்பதற்கு முன்பே ஏற்பட்டுவிட்டது.எனவே இது இராமாயணத்தோடு சம்பந்தப் பட்ட இடம். இராமாயணத்தின் கதைப் போக்கைத் தீர்மானித்த இடம். இராம பிரானுக்கு ஸ்ரீ ஆதி ஜகந்நாதர் திருக் காட்சி அளித்து வில் ஈந்த இடம்.

மரவுரி தரித்த எம் பெருமான் வெறும் புல் அணையே தலை அணையாய்க் கொண்டு
அறிதுயிலில் ஆழ்ந்து தியானித்த இடம்.
இங்கேதான் கடலைப் பந்தனம் செய்ய வேண்டும் அணைகட்ட வேண்டும் அதன் வழியாய் இலங்கை செல்ல வேண்டும் என்று தீர்மானத்திற்கு வந்த இடம்.

அட்டே நாம் ஸ்ரீராம்பிரான் காலத்தில் பிறக்கவில்லையே என்று வருத்தப் பட்டதுண்டா நீங்கள்.?

அட்டா, அவரோடு பேசித் தொட்டுப் பழகவில்லையே என்று ஆதங்கப் படுபவரா நீங்கள்?

வாருங்கள் இங்கே திருப் புல்லாணி வாருங்கள். அவரைத் தொடா விட்டால் என்ன, அவர் பாதம் தொட்டு பாக்கியம் அடைந்த மண்துகள்கள் எத்தனை உண்டு இங்கே.
உருண்டு புரளுங்கள் ஆசை தீருங்கள்.


பாதம் பட்டால் எங்கே மனுஷியாய் விடுவோமோ எனப் பயந்து பாறைகள் கூட உதிர்ந்து மண் ஆகி அவர் காலடி தீண்டப் பட்டதால் மாறாமல் உங்களுக்காக்க் காத்திருக்கின்றன.
இந்தத் தருணத்தில் பரதாழ்வாருக்குத்தான் நன்றி சொல்லுகிறேன் நான்.
அவர் மட்டும் அப்படிச் செய்யாதிருந்தால் அந்தப் பாக்கியம் பாதுகைக்கல்லவா போய் இருந்திருக்கும். இம் மண்ணுக்கு வாய்த்திருக்காதே.
இராம்பிரான் சிந்திந்த இடம் இது.
நாமும் இங்கே வந்து சிந்திப்போம்.
பிரச்சினைகள் எல்லாமே நிச்சயமாய்ச் சிந்திப் - போம்.

இராம்பிரானுக்குத் தீர்வு கிடைத்த இடம் இது.
அவரின் எண்ண அலைகள் உலவும் இடம் இது.
அவரது மன அதிர்வுகள் சூழும் இடம் இது. இங்கே வந்து சற்றே அமர்ந்து பாருங்கள். உங்களுக்கும் தீர்வு கிடைக்கும்.

ஆயிரம் கேள்விகளோடு வந்த PAUL BRUNTONக்குத்
திருவண்ணாமலையில் கேட்டுக் கிடைக்க வில்லையாம் தீர்வு

அந்த இடத்தில் மவுனமானச் சற்றே அமர்ந்தவுடன்,
இரமண அலைகள் அவரை அமைதிப் படுத்த
மனம் நிலைப்பெற்று த் தீர்வு கிடைத்த அற்புத்த்தை
அவன் வர்ணிக்கும் போது,
ஆகா, இது இந்த இடம், திருப் புல்அணை எனப் பேர் தாங்கிய இத்தலம்
அந்த ஆதி முழுமுதலே வந்து மூன்று நாட்கள் அறிதுயில் தியானம்
அமர்ந்த இடம் அல்லவா?
இதன் அற்புதம் பற்றச் சொல்லித் தெரிதல் எல்லாம் சும்மா
நேரில் வந்து அதிசயித்தலே அம்ம ம்மா!

இங்கு வந்து

குழந்தைச் செல்வம் வேண்டி வந்தவர் எத்தனை பேர்?
குழப்பம் தீரக் கும்பிட்டுச் சென்றவர் எத்தனைபேர்?
வேலை தேடி வந்தவர் எத்தனை பேர்?
விவாகம் கூட வேண்டுமென்று அழுதவர் எத்தனை பேர்?

அத்துனை பேருக்கும் அருளும் அப் பத்மாஸனித் தெய்வம் அபயம் அபயம் என்று காட்டுவது உங்களுக் கென்று புரிய வில்லையா?
என் தங்கைக்கு வயது முதிரக் கண்டு
இத் திருமுன் யான் விக்கி நின்று
வேண்டிய பின்புதானே கூடி வந்தது விவாகம்
என்று நானே சாட்சியாகி நிற்கிறேன்.

என்னமாய் அவசர யுகம் ஆகி விட்டது இக்காலம்?
எங்கும் பரபரவென்று அல்லவா இயங்குகிறது இக்காலம்?

படபடவென்று வருகிறது பஸ். திமுதிமுவென்று கோவிலுக்குள் நுழைகிறது கூட்டம்.
சுற்றுலாக் கூட்டம்.
எல்லாம் வெறும் வெற்றுலாக் கூட்டம்.
பக்தர்களையும் யாத்ரிகர்களையும் பார்க்க ஏலவில்லை.
பஸ் டிரைவர் பாம் பாம் என்று ஒலிக்கக்
கடவுளுக்கே ஹாய்' சொல்லிவிட்டுப் பறக்கிறது கூட்டம்.
வேடிக்கை ஒரு பக்கம் வேதனை ஒருபக்கம்.


சொல்லுகிறேனே என்று கோபித்துக் கொள்ளாதீர்கள்.
எம் பெருமான் ஸ்ரீராமச் சந்திர மூர்த்தி கிடந்த திருக் கோலத்தில்
யுகம் யுகமாய் உங்களுக் கென்றே பள்ளி கொண்டு அருளக் காத்திருக்கையில்,
வெறும் அஞ்சு நொடிப் பொழுது கும்பிட்டதாய் பாவனை காட்டி
அப்படி எங்கே ஓடுகிறீர்கள் நீங்கள்?
எதை வெட்டி முறிக்கப் போகிறீர்கள் நீங்கள்?
பொருட்காட்சி சாலையில் கூட நிதானமாய் நேரம் செலவழித்து வேடிக்கை பார்க்கும் நீங்கள் அர்க்கப் பரக்க அர்ச்சனை முடித்து, கடவுளுக்கு டாட்டா சொல்லாத குறையாகப் பறப்பது எதை எட்டிப் பிடிக்க?
362 நாட்கள் மாய்ந்து மாய்ந்து சம்பாதிக்கிறீர்கள் வயிற்றுக்கு.
ஒரு 3 நாட்கள் உங்கள நெஞ்சுக்கும் ஆன்மாவுக்கும் சம்பாரிக்கலாகாதா?

தயை கூர்ந்து முதலில் இதைத் தவிருங்கள்.
முகவையிலே விடியற்காலம் வேன் பிடித்து,
காலை தேவிப் பட்டினத்தில் வேகவேகமாய் ஒன்பதாங் கல் சுற்றி,
சேதுக் கரையில் தலைமீது அவசரக் கோலமாய் தண்ணீர் தெளித்து,
அய்யய்யோ மணி பன்னிரண்டாகப் போகுதே
நடை சாத்தி விடுவார்களே என டிரைவரைப் பரபரத்தி,

, இதுதான் தர்ப்ப ஸயனமா, அரச மரமா?'

என மதிய சாப்பாடே கவனமாய்ச் சுற்றி
இராமேச்சுவரம் பார்த்து முடித்த கையோடு
இரவு ரிசர்வேசன் செய்த பஸ் போய்விடக் கூடாதே
என்ற கவலை யோடு இறைவனைப் பார்த்துவிட்டு
ஒரே ஓட்டமாய் ஓடினால் எப்படி வருவான் இறைவன்.?

நம் சாத்திரம் என்ன சொல்கிறது. ஒவ்வொரு திருத் தலத்திலும் குறைந்த பட்சம் மூன்று நாட்களாவது தங்குங்கள். மூன்று நாளும் ஆறு காலமும் கோவிலில் குடி கொள்ளுங்கள். ஓசை வரா மவுனக் குரலில் உருகி வேண்டுங்கள். கண்ணில் நீர் வாரக் கரையுங்கள். என்பெலாம் நெக்கு நெக்கி இளகுங்கள்.
பின்பு பாருங்கள். ஐந்து பேராக்க் கோவிலுக்கு வந்த நீங்கள் ஆறு பேராகத் திரும்பிச் செல்வீர்கள். அந்த ஆறாம் ஆள் நிச்சயம் எங்கள் ஸ்ரீராமன் என்றால், அட, ஐயம் என்ன உங்களுக்கு?

வா என்றால் வரக் காத்திருக்கிறான் இறைவன்.
கூப்பிடத்தான் மனம் இல்லை உங்களுக்கு.



தீர்த்தம்
 




இந்தக் கோவில் இருந்த பக்கத்தில்
ஒருகாலத்தில் அதாவது ஸ்ரீராமச் சந்திரமூர்த்தி இங்கே வருகை தந்த போதே
இந்தக் தீர்தத்ம் இருந்திருக்கிறது. தீர்த்தம் மட்டும் இல்லை அதைச் சுற்றி ஏராளமான மரங்கள் இருந்திருக்கின்றன. இந்தப் பகுதி இப்போது சக்கர தீர்த்தம் என்று அழைக்கப் படுகிறது.
உள்ளூர் வாசிகள் ஒருசிலர் தெளிவான இனிக்கும் இளநீர் போன்ற தண்ணீர் எனப் பொருள் படும் படுச் சர்க்கரை தீர்த்தம் என்று சொல்லுவது தவறு.
இது ஸ்ரீசுதர்ஸனரே வந்து நீராடிய பெருமை உடைத்து. ஆகவே சக்கர தீர்த்தம், அல்லாமல் சக்கரை தீர்த்தம் அல்ல.

வரலாற்றிலோ, புராணத்திலோ, இல்லை செவி வழிச் செய்தியாகவோ சொல்லாத ஒரு
சேதியை இப்போது சொல்லப் போகிறேன்..
சக்கர தீர்த்தம் சுற்றி நிறைய மரங்கள் நின்ற்தைச் சொன்னேன்.
மரங்கள் இருந்தன. தீர்த்தம் இருந்தது. மிகமிகமிக என்று எத்தனை அடைமொழி வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள், அது பொருந்தும். அவ்வளவு ஆதி பழைமையான அந்தக் குமரிக் கண்ட காலத்து கோவிலான ஸ்ரீ ஆதி ஜகந்நாதர் கோவில் இருந்தது.
இத்தனையும் இருக்கும் போது ரிஷிகள் இல்லாமலா?

இருந்தார்கள்.
ஒன்றல்ல இரண்டல்ல ஏழு பேர்.
இருந்தார்கள் என்று நான் எழுதியது கூட ஒரு வகையில் தவறுதான்
ஏன் என்றால் இருக்கிறார்கள்
இன்னும் இருப்பார்கள்
காலாகாலமாய் யுகம் தாண்டி ஊழிகடந்து
இறைவன் ஆணைப் படி
இறப்பு பிறப்பு எல்லாம் வென்று
ஏல வில்லையே என்று ஆற்றாது அரற்றி வருவோர்க் கெல்லாம்
இறங்கி அருள் பொழியும் பொருட்டு.



எங்கே உங்களை ஒரு கேள்வி கேட்கப் போகிறேன்,
இனிமேல் சப்த ரிஷிக்கள் எங்கே இருக்கிறார்கள்
என்று யாரும் கேட்டால், ஏ மண்ணின் மைந்தர்களே,
வான் நோக்கிக் கை காட்டாமல் மார்தட்டிப் பெருமையாகச்
சொல்லுங்கள்..
இங்கே இங்கே இந்தச் சக்கர தீர்த்தக் கரையில் என்று கை காட்டுங்கள்.

இந்தத் தீர்த்த நீர் மருத்துவக் குணம் கொண்டது இப்போதுதான் கடந்த
1994-வரைச் சிதைந்து கிடந்த தீர்த்தம் தூர் வாரப் பட்டு அகலப் படுத்தப் பட்டு
ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டு.பெரிதாக்க் கட்டப் பட்டிருக்கிறது என்றால்
அதற்குக் காரணம் அப்போதிருந்த மாவட்ட ஆட்சியாளர் எம்பெருமான் பேர் கொண்ட
திரு. கிருஷ்ணன் அவர்களை நினைவு கூறாது இருக்க முடியவில்லை.

1994க்கு முன்பிருந்தே இந்தக் குளத்தைக் கவனித்து வந்திருக்கிறேன்.
கோடைக் காலங்களில் குங்கும்ம் கரைத்தாற் போல் தண்ணீர் அவ்வளவு
சிவப்பாக இருக்கும்.
வற்றும் போது ஒரே அலர் வீசும். அடுத்த அடுத்த நாட்களில் மழை கொட்டும்
என்று சொல்கிறார்கள்.
அன்பர் இரகுவீர் தயாள் ( please see his site http://www.thirupul.blogspot.com ) சொன்னது.
அவர் சிறு பிள்ளையாக இருந்த போது வட மாநிலங்களில் இருந்து
இலாட சந்நியாசிகள் என்று சொல்லப் படும் ஒரு வகைத் துறவிகள் இதற் கென்றே
வருவார்களாம்.
சரியான சித்திரை மாதம் பார்த்து இந்தக் குளம் வற்றும் தருணம்
முழங்கால் சகதியில் இறங்கி அச் செந்நிற உப்பு எடுத்துச் செல்வார்களாம்.
இந்தப் பகுதி எல்லாம் உப்பங்கழிகள்.
உப்பு கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் முப்பு தெரியுமா, உங்களுக்கு?
முப்பு - சித்தர்கள் இதன் பின்னே இதைச் செய்யத்தான்
இதைத் தேடித்தான் இது விளையும் இடம் எங்கே எங்கே என்று
அலைகிறார்கள்.
முப்பு - இது காயசித்தி வல்லபம் தருவது.
முப்பு - இது மரணம் நீக்குவது
முப்பு - ஏம சித்தி வல்லது.
தெளிந்த உயர்ந்த ஞானிக்கோ உடல் பூரா முப்பு. அவன் உதிரமே முப்பு.
இந்த முப்பு தரும் சக்தி உள் முகமாய் இறைவனாலும் அருளப் படும்.
வெளியே பூமியிலும் விளையும், அதுவும் குறிப்பாக மீன மேட மாதங்களில்.
காரணமில்லாமல் இந்தச் சித்தர் குறிப்புகளை நான் இங்கே சொல்ல வில்லை.
இதை எல்லாம் ஆராயும் நோக்கமும் எனக்கில்லை. தகுதியும் இல்லை.
இந்தத் தீர்த்த நீர் பிணிதீர்க்கும் மருத்துவக் குணம் கொண்டது
என்பதை உங்கள் மனத்தில் பதிய வைக்க வேண்டும் என்பதற்காகவே
இவ்வளவு விளக்கம் சொன்னேன்.

தீர்த்தத்தில் நீராடும் போது ஒன்று மட்டும் உறுதியாய் எண்ணிக் கொள்ளுங்கள்.
ஸ்ரீ சுதர்சனரே நீராடிய தீர்த்தம் இது. பின் உம் பாவ வினைகள் அறுபடக் கேட்கவா வேண்டும்.
சக்கரத்தால் அறுக்கவியலாத்து வேறு எது உலகில்.
அறிந்தோ அறியாமலோ நீராடும் போது இன்னொன்றும் நிகழ்கிறது.
உங்களுக்குத் தெரியாது போனாலும் பரவாயில்லை.
நீங்கள் உணரா விட்டாலும் கவலையில்லை.
வேண்டினாலும் சரி வேண்டாவிட்டாலும் சரி, உங்களைச் சுற்றி ஏழு பெரிய
நீர் வீழ்ச்சி பொழிநது கொண்டே இருக்கும் .
சுற்றி உள்ள சப்த ரிஷிக்களின்
நயன அருள் நீர் வீழ்ச்சியைத்தான் சொல்கிறேனே தவிர வேறில்லை.
சொன்னதை எல்லாம் உணர்ந்து சொல்லப் போனால் ஒரு மாதிரியான
(RECEPTIVE MOOD) வாங்கும் தன்மையோடு நீராடினால் பலன் அதிகம்.
உணர்ந்து ஆடினால் அக அழுக்கு நீங்கும்.
இல்லை எனில்
உடல் அழுக்கு நிச்சயம் போகும். அது உறுதி.


மஹா விருட்சம்



விருட்சம் என்று வெறுமே சொல்ல வேண்டியதுதானே அது என்ன மஹா,
என்றால் அது தேவையான அடை மொழிதான்.

மரங்களிலே நான் எந்தமரமாக இருக்கிறேன்
என்று ஸ்ரீகிருஷ்ணபிரான் சொன்னாரோ
அந்த மரம்தான் இங்கே தல விருட்சம்.

இன்னும் புரியாதவர்கள் ஒன்று கீதை படியுங்கள், இல்லை இல்லை
மாட்டவே மாட்டேன் என அடம் பிடிப்பவரகள்
புறப்பட்டு வந்து பாருங்கள் புல்லணை ஊரில். . .

ஆக பொதுவாக நான் பார்த்த வரைக்கும் கேட்ட வரைக்கும்
இந்த மரம் நிமிர்ந்து கம்பீரமாய் மேல் நோக்கியே வளருமே அன்றித்
தலை குனியாது. பக்கவாட்டிலும் கிளை பணியாது.
அதனால்தான் அதோட பேர் அப்படி.

இந்த மரம் ஒரு அதிசய மரம். இங்கே உள்ள மூர்த்தங்களைப்
போலவே இந்த மரமும் பக்தர்களுக்கு அருள வேண்டும் என்கிற
ஒரே காரணத்துக்காகவோ என்னவோ கிளைகளை மேல்நோக்கி
விடாமல் பக்க வாட்டிலேயே விடுகிறது.
பக்தர்கள்தான் பாராமுகம் காட்டுகிறார்கள்.

அதுவோ அருள் கனம் தாளாமல் தாழத் தாழச் சாய்ந்து
தரைபடக் கிளையே வேர்விடுகிறது என்றால்
இது அதிசய மரம்தானே.
இப்படித் தாய் மரம் மட்டும் நடுவில் இற்று விடக்
கிளை மட்டும் இன்னொரு தாய் ஆகச் சுற்றிச் சுற்றி
வளர்ந்து கொண்டே இருக்கிறது, எவ்வளவு காலமாய் என்னில்,
யுகம் யுகமாய் என்று சொன்னால் அது ஆச்சரியம்தானே.

ஆமா, இராம்பிரான் இங்கு வந்த போது அது இருந்தது,
இன்றும் தளதள என்று இருக்கிறது, இன்னும் இருக்கும்,
இருந்து கொண்டே இருக்கும்.
தன் மருத்துவக் குணங்களை மக்களுக்கு தலைசாய்த்துத்
தலைசாய்த்து வழங்கிக் கொண்டே இருக்கும்.

கடைசியாக ஒரு பாடல் இத் தலவிருட்சம் பற்றி.

' இருமலொடு தந்தவாயு குருடு  செவிடும் சொல் ஊமை
               இவை கண் முதல் எந்த ரோக வினை யாவும்
ஒருநொடியில் அஞ்சி ஓடும் வறுமையொடு செஞ்சி தனி
               உபரியின் அடந்த பாவம் அது தானும்
மருமலர் பிறந்த கோதை மருவி வளரும் புல்லாணி
               வளர் அரசு கண்ட பேரை அணுகாதே. . .!'



ஒரு தடவை வந்து பாருங்கள்,
தசரதனுக்குக் கிடைத்தது உங்களுக்கும் கிடைக்கும்.
ஒரு தடவை மூன்று நாள் தங்கி அவசரம் மறந்து ஊர்ஊலகு மறந்து
நீங்களும் இராமரும் மட்டுமே இங்கு நிஜம் என உணர்ந்து,
இயற்கையின் நியதி மீறாமல் உளம் உருக வேண்டுங்கள்

பதுமாசனித் தாயாரிடம் கேட்டுப் பாருங்கள்.
பலிக்கக் காண்பீர்கள்.
அப்புறம், அப்புறம் என்ன, மனித மனம்தானே, மறந்து விடுவீர்கள்.

வாராதோர்க்கு வலியுறுத்தவும்,
மறந்தோர்க்கு மனதில் நினைவுறுத்தவுமே இக் கட்டுரை.
எனவே மறவாது வாருங்கள். அப்புறம் வந்து கொண்டே இருப்பீர்கள்.
 



தலப் பெருமைகள்



1. வைணவத் திருப் பதிகள் 108-ல் இதுவும் ஒன்று.
2. தசரதன் வணங்கிய தலம்
3. சக்கரத்தாழ்வார் ஆடிய தீர்த்தம்.
4. சப்த ரிஷிகளின் உறையுள்.
5. இது சரணாகதித் தலம். வீடணனால் இப்பேர் வந்தது.
6. திருமங்கை மன்னனால் பாடல் பெற்ற தலம்.
(மொத்தம் இருபது பாசுரங்கள்)
7. வைணவப் பதிகளில் அதிகம் பாடப் பட்ட தலமும் இதுவே.
(புல்லாணி மாலை, புல்லாணி அந்தாதி என எத்தனையோ.. .
பாடல் வேண்டுவோர் பார்க்க www.thiruppul.blogspot.com )

8. சக்கர தீர்த்தம் அன்றி ஏமதீர்த்தம், அகத்திய தீர்த்தம்,
இரணிய தீர்த்தம் என்றெல்லாம் சொல்கிறார்கள்.
எங்கே எங்கே என்று வந்து கேட்டுக் கொள்ளுங்கள்.
9. ஸ்ரீராம்பிரான் இரண்டாம் முறையும் வந்து இருந்த இடம்.
 



கோவிலும் கொஞ்சம் வாஸ்தும் . . .



பகவான் இருக்கிற இடத்துக்கு எதற்கு வாஸ்து என்றாலும்
சுற்றி இருப்பவர்களுக்கு அது அவசியமாய்ப் படுகிறது.


சின்னஞ் சிறு அளவில் தீர்த்தம் கோவில் எதிரே இருந்தவரை
(1994) இங்குள்ள கோவில் அர்ச்சகர் மற்றும் பணியாளர் நிலைமை,
குளம் மிகப் பெரிதாக அமைக்கப் பட்டதும் நன்கு உயர்ந்தது கண்கூடு.
மட்டுமில்லை, இந்தச் சக்கரதீர்த்தம் வீட்டுக்கு கிழக்கே அமையப் பெற்றவர்களும்,
வடக்கே அமையப் பெற்றவர்களும் வடகிழக்கு மூலையில்
அமையப் பெற்றவர்களும் வாழ்வில் உலகியல் நிலையும், நிதி நிலையும்
சீர் பெற்று உயர்ந்திருப்பதும் நிதர்சனம்.

சும்மா சிவப்பாய்க் காய்ந்து கிடந்து அலர் வீசிய குளம்
கோவிலின் அகலத்துக்குக் (கிழக்கே) பெரிதாகக் கட்டப் பட்ட
உடனேயே ஓ என்று வெறுமே கிடந்த கோவில் இன்று
ஓஹோ என்று இருக்கிறது ( வெறும் சுற்றுலாப் பயணிகளின் வருகை,
வேடிக்கை பார்க்க வந்தவர்களின் வருகை என்று பக்தர்களின்
வருகையாய் மாறும்?)

மழைநீர் சேமிப்புக்கு, வழிவகையும் ஆயிற்று.
நிலந்தடி நீர் ( சில பகுதிகள் மட்டும்) நன்னீரும் ஆயிற்று.
மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வா, கிரக தோஷ அச்சமா,
தொலைக்கட்சி ஊடகக் கைங்கர்யமா, காலத்தின் மாற்றமா,
எப்படியோ வாஸது உன்னதமாக வேலைசெய்யத் துவங்கி விட்டது.

'எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...'

திரும்பவும் சொல்கிறேன், மூன்று நாட்கள் தொடர்ந்து தங்கினால்
பெம்மாள் அருளோடு வாஸதும் தன் பங்குக்கு உங்களை மேலே ஏற்றும்
என்றெல்லாம்

அளக்கின்றனர் வாஸது வல்லுநர்கள்.
நிசமா பொய்யா என்று ஒருதரம் பரிசோதித்துத்தான் பாருங்களேன்...

 

சேதுக்கரை-இராமர் பாலம்

புதிதாக ஒன்றும் சொல்லப் போவதில்லை நான்.
சேது என்றாலே பாலம் என்று பொருள்.
இப் பாலம் துவங்கும் கரைதான் சேதுக் கரை.
திருப் புல்லணையில் எம் பெருமான் ஸ்ரீராம்பிரான் ஸ்ரீ சேது அணையை எங்கே எப்படி எவ்வாறு கட்ட வேண்டும் என்று தீர்மானித்து இங்கே ஆரம்பித்தார்.

 குழப்புகிறீர்களே, இராமேச்வரம் பற்றிய கட்டுரையில் சேது பாலம் இருப்பது தனுஷ்கோடிக்கும் தலை மன்னாருக்கும் என்று சொல்லி ஸாட்டிலைட் படம் எல்லாம் காட்டி விட்டு இங்கே என்று சொல்கிறீர்களே எப்படி என நீங்களும் குழம்புவதை அனுமானிக்க முடிகிறது என்னால்

 இஙகுதான் இராமபிரான் வானுக்கும் பூமிக்குமாய் வில்லை வளைத்து ஆக்ரோஷமாக சமுத்திர ராஜனை நோக்கிச் செலுத்த யத்தனித்தார்.

நீங்கள் நினைப்பது போல பத்தடி அகலத்தில் ஒரே சீராக இலங்கை வரை நேர் செங்குத்தாக அப்பாலம் இருக்க வில்லை.

பாலத்தின் அடி அகலம் பற்றி எண்ணும் போது மகாப் பிரமிப்பாக இருக்கிறது. அடி அகலம் 143 நாட்டிக் கி.மீ. வரை அடியில் நீள்கிறது. குத்து மதிப்பாக இப்போதைய நாகப் பட்டினம் வரை அதன் வேர் இருக்கிறது. இந்தப் பக்கம் தனுஸ்கோடி தாண்டியும் போகிறது. இது இன்றைய நிலைமை.

 நேற்று இருந்த கடல் அமைப்பு இன்றில்லை. 1964க்கு முன் இருந்த தனுஸ்கோடி இன்று கடலுக்குள். சிலப்பதிகாரத்தில் கோவலன் மாதவி கானல் வரி பாடிய இடம் எல்லாம் இப்போது கடலுக்குள். மாமல்லபுரத்தில் உள்ள சில பல்லவர் காலக் கோவில்களும் இற்றைக்குக் கடலுக்குள்.
நம் கண் எதிரே நம் தாத்தாக்கள் வழிபட்ட சேது மாதவர் கோவிலும், சேது மாதவ தீர்த்தமும் இன்று அழிவுக்குள்.
இதுவோ மூன்று யுகம் கடந்த சின்னம். இதில் எவ்வளவு சின்னப் பின்னம் ஆய்இருக்கும்.? எவ்வளவு மிச்சம் இருக்கும். ஸாட்டிலைட் காட்டும் ADAMS BRIDGE-ம் சேது பாலமே. சேதுக் கரையில் இருப்பதும் சேது பாலமே..

சேது பாலம் என்ற ஒன்றே இல்லை என்று அமைச்சர் வேண்டுமானால் அறிக்கை விட்ட்டும் . வெறும் அறிக்கைகளும் தாள்களும் சரித்திரங்கள் அல்ல. இது யுகத்தையும் கடந்தது, உங்கள் யூகத்தையும் கடந்தது.

சேதுக் கரையில் நின்று எங்கே இராமர் பாலம் என்று கேட்டால் ஏறத்தாழ, இல்லை, தாழத் தாழ 800 மீட்டர் தள்ளித் தள்ளிக் காட்டுவேன் நான்.

 

பாலம் நோக்கி ஒரு பயணம். . .

1988-ல் நானும் எங்கள் டெக்னீசியன் திருப்புல்லாணி முத்தையாவும் ஒரு சிறு படகை அணுகினோம்.

சேதுப் பாலம் உள்ளே இருப்பது இப்பகுதி மக்களுக்குத் தெரிந்த கதை. முதன் முதலான கடல்ப் பயணம் ஒரு சுகமான ஆத்மாநுபவம். அது கொஞ்சம் த்ரில்லிங்கான பயணமும் கூட. சுகம் ஜாலி எல்லாம் அந்த 800 மீட்டர் வரைதான்.

குனிந்து எட்டிப் பார்க்க சரியான உச்சி வெய்யிலில் தெளிவான கடல்நீர் அடியில் தரை தெரிந்தது. இந்தத் தரை எங்களை வாவா என்று அழைத்தது. நான் குமுதன் தூக்கிய பாறை, நளன் நடந்த பாறை, ஸ்ரீராம்பிரான் காலடிபட்ட பாறை என அந்தத் தரை எங்களை அழைப்பது போலத் தெரிந்தது.

எழுந்திருந்து நின்றதும் நிற்க முடியாமல் படக் ஆட்டம் போட்டது. ஒன்று நாங்களாக்க் குதிக்க வேண்டும் இல்லை ஆடியே விழுந்து விடுவோம் என்ற நிலை. இருந்தாலும் ஆர்வமிகுதியால் தொப் எனக் குதித்து விட்டோம்.

குதித்த பின்புதான் தெரிந்தது, ஆகா மாட்டிக் கொண்டோம் என்று. சுற்றிலும் கடல். நெஞ்சுக்கு மேலே தண்ணீர் மட்டம். 800 மீ. தள்ளி அல்லவா வந்து விட்டோம். நல்லவேளை கடல் அலை எதுவும் வந்து பயமுறுத்தவில்லை.

கடின பாறையில் மென்மையான மணல். காலை மெல்லத் தூக்கினால் மல்லாத்தி விடும் போல் தெரிந்தது..தூக்காமல் சில அடி ரோபோ நடப்பதுபோல் நடந்தோம்.

'சும்மா நடந்து போங்க சார். 100 அடி அகலத்துக்கு இந்தப் பாலம் போகிறது'

என்றார் படகோட்டி படகின்மேல் இருந்து.

 உனக்கென்ன மேலே நின்றாய் ஓ படகோட்டி . . . !

நான் பார்த்தேன் இல்லை அக்கடல்நீரிலும் வேர்த்தேன். சுற்றிலும் கடல். water water everywhere. பிடித்துக் கொள்ள ஆதாரம் ஏதுமில்லை. பற்றுக் கோடும் ஏதும் இல்லை .ஓ ராமா ராமா உன் நாமம் மட்டுமே ஆதாரம்.

எல்லா வற்றையும் விட்டு விட்டு இங்கே வந்து அத்தாயமாகத் தனித்து நின்று பாருங்கள். இது ஸ்ரீராமர் மிதித்த பாறை அதில் நானும் நிற்க என்ன பாக்கியம் செய்தேன் என்று எண்ணத் தோன்றும். ஜென்ம்மே சாபல்யம் அடைந்தாற்போலத் தோன்றும்.

வாய் இராமா இராமா என்றாலும் படகோட்டி சொன்னது, நெஞ்சைப் பயமுறுத்தியது. என்ன, நூறடி அகலத்துக்குப் பாலமா? ஒரு வேளை நான் நிற்கும் இடம் நூறாவது அடி என்றால் அடுத்த அடி ? மாட்டேன் மாட்டேன் நான் நடக்க மாட்டேன் என நின்ற இடத்திலேயே நடை பழகினேன்.

எனக்கு நீச்சல் தெரியாமல் போனதை எண்ணி நொந்தேன். நடந்தால் கால் தூக்கியது. அப்படியே மிதந்து விடுவேன் போல்த் தெரிய இறுக்கமாகக் கால் ஊன்றினேன். பாலத்தில் நின்றபடியே படகோட்டியைப் பேட்டி கண்டேன். கேள்விகள் கேட்டேன். நூறடி அகலத்துக்கு இப்பாலம். சரி இதன் நீளம் ?

 சும்மா இலங்கை வரை போகிறது சார் தைரியமாக நடந்து பாருங்கள் ஒன்றும் செய்யாது. . .'

என்ற  படகோட்டி ஜாம்பவான் போல் உற்சாகமும் ஊக்கமும் ஊட்டினார். திரும்பவும் எனக்கு

, எனக்கோ உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்த லாலா. என்று பாடத் தோன்றியது.

நிஜமா எனப் படகோட்டியிடம் உறுதி செய்தால் சிரித்தபடி அவர் சொல்கிறார்.

 'சார் தினம் தினம் நாங்கள் இந்தப் பகுதி வழியாகத் தானே மீன்பிடிக்கச் செல்கிறோம், எங்களுக்குத் தெரியாத்தா?'

 ம்ம்ம.. . இவருக்குத் தெரிந்து என்ன பயன் ? படகோட்டியா, பேப்பரில் அறிக்கை விடுகிறார், "மினிஸ்டர் அல்லவோ விடுகிறார்.

ஆசை தீரும் மட்டும் சீராமன் பாதம் பட்ட பாறை தொட்டுக் கொஞ்சம் பா - தம்பட்டம் அடித்தேன். இனி எல்லோரிடமும் போய்த் தம்பட்டம் அடிக்கலாம்

 இராம பிரானையே தொட்டுப் பார்த்தேன் என்று கூடக் கதைக்கலாம். இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம் போல் இருந்தது. போகப் போக்க் கடல் மட்டம் ஏறும் என்றதும் சரி சரி போகலாம் என்று படகில ஏறும் போதுதான் பிரச்சனையே ஆரம்பம் ஆயிற்று.

கையை உயரேதூக்கினால்தான் படகின் விளிம்பைக் கஷ்டப் பட்டுத் தொட முடிந்தது. கீழே எந்த ஆதாரமும் இல்லை. படியா இருக்கிறது படிப்படியாய் மேலே ஏற? குதி குதித்து எழும்பிப் பார்த்தாலும் உடல் ஒத்துழைக்காமல் மீண்டும் கடலுக்குள் அமிழ்ந்தது.

கைப் பலம் காணவில்லை. பள்ளி நாட்களில் FULL UPs சரியாக எடுக்காமல் விட்டது எவ்வளவு தவறு என உணர்ந்தேன். படகோட்டி கைநீட்டினாலும் கால் கீழே ஏதாவது ஆதாரம் தேடித் தவித்தது.

பேசாமல் மனத்துக்குள் அனுமனை உன்னித்து, ஜெய் ஆஞ்ச நேயா, என்றவாறே உன்னிக் குதித்தேன் படகு விளிம்பைப் பிடித்தபடி. சமுத்திர ராஜனும் தன பங்குக்கு என்னை மேலே தூக்கிவிடவே நான் படகுக்குள் மீண்டது எனக்கே பெரிய ஆச்சர்யம்.

உண்மையில் இந்த மெலிந்த கைகளுக்கு பலம் தந்தது அன்று ஸ்ரீமத் ஆஞ்சநேயரே அல்லாமல் வேறில்லை. இந்த நிகழ்ச்சிக்கு அப்புறம் யாராவது என்னிடம் வந்து இராமாயணம் ஒரு கட்டுக் கதை பாலம் பொய் என்றால் எனக்கு என்ன தோணும் தெரியுமா?

இவர்களை எல்லாம் படகில் ஏற்றி இங்கேபோய் இறக்கிவிட்டு படகை 200மீ தள்ளி நிறுத்தி, அடே இப்போது சொல்லுங்கடா இராமர் பாலம் நிஜமா இல்லை பொய்யாய - என்று கேட்கத் தோன்றும்

 

 

இதுவும் ஒரு குமரிக் கணட எச்சம். .

 

கடந்து போன 25 டிசம்பர் 2005. அன்று வழக்கம் போல நீத்தார்கடன் இயற்றிக் கொண்டிருந்த சில அந்தண இளைஞர்கள்  பாக்கியம் செய்தவர்கள்.

கடல் திடீர் எனக் காணாது போக உள் வாங்கிய நீர் எங்கோ போக, ரெம்பச் சுவாரசியமாக கடலின் அடிப் பரப்பையும் பாலச் சுவடுகளையும் கண்டு அதிசயித்து இறங்கி உள்ளே உள்ளே நடக்க அலை திரும்பி வேகமாக வருவதைக் கண்டு அலறிப் புடைத்து அலைதாக்க உருண்டோடிக் கரை சேர்ந்தது யார் செய்த புண்ணியமோ என்றாலும், அமிழ்ந்த சேதுபாலத்தின் எச்சங்களைக் கண்ணாற் கண்ட அவர்கள் நிச்சயம் பாக்கியம் செய்தவர்கள்.

அந்த நாக பட்டினச் சோகத்திற்குப் பின் இந்தப் பகுதியில் அலைகளால் சில கற்சிலைகள் அடித்து வரப் பட்டன, சில உடைந்தும், சில உடையாமலும். சிதைந்த சிலைகளைக் கடலிற் போடுவது சிற்பிகள் வழக்கம் என்கிறார்கள் சில அறியாத பேர்கள்.

ஆனால் இவை யாவும் அமிழ்ந்துபட்ட குமரிக் கண்டக் காலச் சிலைகள் என்று யாரே அறிவார்? எது எப்படியோ கடந்த ஆழிப் பேரலைகளின் போது சேது பூமி சேதம் இல்லாமல் காக்கப் பட்டதன் காரணம் இலங்கை மட்டும் இல்லை, குறிப்பாக, இந்தச் சேது பாலத் தொடர்களும் திட்டுகளும் தான் என்றால் இப்பகுதியைக் காத்தது ஸ்ரீராம பிரான் அன்றி வேறு யார்?

எங்கெங்கோ போய் அயோத்தி அயோத்தி என்று இராமர் கோவில் கட்டுகிறார்களே, எத்தனை சண்டைக்கும், சர்ச்சைக்கும் இடையில் ?

ஏன, இங்கே வந்து கடலுக்குள் பெரிய பில்லர் எழுப்பிக் கட்டுங்களேன், நிச்சயம் யாரும் பாபர் பாலம் என்று வரமாட்டார்கள். விவேகானந்தர் பாறைக்குப் போவது போலப் படகுப் போக்கு வரத்தும் நடக்கும். மக்களுக்கும் உண்மை தெரியும்.

தெரிந்து என்ன ஆகப் போகிறது, பாலத்தின் புனிதம் தான் கெடும், சுற்றுலாப் பயணிகளின் வருகையால். இந்தச் சேதுக் கரைக்கும், திருப் புல்லணைக்கும் இடையில் ஒரு ஓடை செல்கிறது.

திருமங்கை ஆழ்வார் இதைப் 'பொன்னன் கழிக் காயல் . . .' - எனகிறார்.

இங்கே பாதி மண்ணில் புதையுண்டு தாடி மீசையுடன் மரவுரி தரித்த ஆள் உயரக் கற்சிலை, வில்லேந்தி பாதி மண்ணில் புதையுண்டு கிடப்பதாகவும், சிறு வயது முதலே அதைப் பார்த்து வருவதாகவும் இப்போது ஒரு ஆறேழு ஆண்டுகளுக்கு முன் போய்ப் பார்த்த போது கோரை மண்டி இடம் இனம் காணவில்லை என்றும், மண்மூடி உப்பங்கழிகள் ஆகி விட்டதென்றும் சொல்கிறார் என்னுடன் பணிபுரியும் நணபர் இரகுவீர் தயாள் அவர்கள்.

 அக் காயல் பகுதி மக்கள் அக்காலத்தில் அதைச் சிலையான் சாமி என வழிபட்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

திருப் புல்லணையில் அறிதுயில் கொண்டருளும் ஸ்ரீராம வள்ளற்கே தெய்வச்சிலையார் என்ற பேர் உண்டு,

சிலை என்றால் வில் 'கோடிய வரிச்சிலை இராமன் ' என்கிறாள் கூனி.

சிலைக்கு அர்த்தம் நக்க்குத்தான் தெரியவில்லை. தெரிந்திருந்தால் அது மண்மூடி உப்பங்கழியாய்ப் போய் இருக்காது.

அது சரி, அது இராமர் சிலையா, இல்லை அதுவும் குமரிக் கண்டத்ததா, யாரே அறிவார்?

 

-மகுடதீபன் 9486102034
 magudadeepan@rediffmail.com