தேவை இன்னொரு
திரிபுர தகனம் . . .
ஏறத்தாழ 27 ஆண்டுகளுக்கு
முன்பு எழுதியது இது
சென்னை நுங்கம்பாக்க
JE ஹாஸ்டலில் ஒரு சிவராத்திரி அன்று பால்கனியில் தனியே அமர்ந்து
விடிய விடிய
எங்கள் வட்டாரத்தில் என் சோப்புக் குமிழிகள் கவிதைகளுக்குக் கிடைத்த வரவேற்பு இதற்கு இல்லை என்றாலும் அப்படியே மூலையில் போட்டுவிட்டேன்.
இந்தக் கவிதைகள் உருகி எழுதியவை. எனக்கு இது ஆரம்பம். இதை எழுதிய அடுத்த சில மாதங்களில் என் தேடுதலுக்கு விடை கிடைக்கக் காரணமானது இக் கவிதை.
எனவே சோப்புக் குமிழிகளைக் கண்மாய்க்குள் கடாசியது போல இல்லாமல் இது மூலையில் அப்படியே கேட்பாரற்று இருக்க இத்தனை வருடம் கழித்துப்
பத்திரமாக்க் கிடைத்தது.
கல்கி ஒருமுறை சொன்னது ஞாபகம் வந்தது.. எழுதியது நன்றாக இருக்கிறதா என்று பார்க்க ஒரு சோதனை.
எழுதியதைப் படிக்காமல் அப்படியே வை. ஒரு ஐந்து ஆண்டுகள் கழித்துப் படி. சுவையாக இருந்தால் அது நிச்சயம் நல்ல எழுத்து.
நானோ 5 ஆண்டு என்ன, 27 ஆண்டுக்குப் பின் படித்தேன், யாரோ எழுதியதை யாரோ படிப்பது போல
என் எழுத்தை ஒரு அன்னியனைப் போல வாசித்தேன்.

வாசிக்க வாசிக்க அதன் கூர் புரிந்தது. என் எழுத்தே எனக்கு Inspiration ஆனது. இன்னும் இது போல் எழுது எழுது என்றது.
27 ஆண்டுக்கு முன்பிருந்த நான் யார் இப்போது நான் யார் என வித்தியாசம் தெரிந்தது
தெய்வமாகத் தெரிந்தவன்
குருவாகி நின்றதும்
குருவாகி நின்றவன்
தந்தையாய் மாறியதும்
இப் பாடல் தந்த அடித் தளம் எனப் புரிந்தது.
சொல்லுக்குச் சக்தி உண்டு என்றும் அதனிலும் கவிக்கு இன்னும் அதிகம் என்றும் இன்னும் அப்பா அப்பா என அரற்ற வைத்தது.
என்முகம் எனக்கே மறந்தது. அதிலும் அவன் சாயலே தெரிந்தது. அதுவே கொஞ்சம் பெருமிதமாகவும் பட்டது
அனைத்தும் அவன் ஆடல் வல்லபம்.
எல்லாம் அவன் இறை அருட் சித்தம்.

இனிக் கவிதை படியுங்கள்.
இதுவா கவிதை, கவிதையிலும் சேர்த்தி இல்லாமல், உரைநடையிலும் சேர்த்தி
இல்லாமல், என்ன இது என அங்கலாய்ப்பவர்கள் நிச்சயம் மரபுக் கவிதைப்
பிரியர்களாகத்தான் இருப்பீர்கள்.
அப்படிப் பட்டவர்களுக்கென்று கொஞ்சம் இலக்கணச் சுத்தமான நடராஜர் பாடல்கள்.
போச்சடா அதுவும் போர் என்பவர்கள் 200 வருடம் கழித்து மீண்டும் பிறந்து படியுங்கள்
அதுவும் இல்லைஎனில்
தமிழ்நாட்டில் தோன்றி
தமிழ்நாட்டம் குன்றியமைக்கு நாணிப்
பரிகாரமாக உங்கள்
குழந்தைகளையாவது
தமிழ் படிக்க வையுங்கள்
BEST VIEWED IN OPERA BROWSER
வேட்டல்-1
நரம்பை உருவி யாழ் இசைக்க
இராவணன் அல்ல நான்.
இடைஞ்சல்களைப்
புத்திவால கொண்டு சுருட்டிப்
பூசிக்க வாலியும் அல்ல நான்.
கணநேரத்திலே கோடடை அளவு
கோவில் நிர்மாணித்து
கொலுவேற்ற மயன் இல்லை
நான் வெறும் மனிதன்
கட்டத் தெரிந்தது எனக்கு வெறும்
கற்பனைக் கோட்டை மட்டுமே
குடிஇருக்க இஷ்டம் எப்போது?
வேட்டல்-2
கங்கையைச் சடையில் மட்டும்
வைத்துக் கொள் - எங்கள்
கண்களிலே வேண்டாம். இதில்
கலந்து வருவது
கரிப்பு மட்டுமல்ல நினைவும் கூட.
நினைவையே கரைத்துக்
கசப்பாக வெளியிடும் கண்ணீருக்கு
உன்னை மட்டும்
கரைக்க முடியாமல் போனது ஏன்? நீ
கல்லாக நிற்பதனாலா?
வேட்டல்-3
தெய்வத்தைக் கல்லாகக் கண்டது அல்ல
கல்லையும் தெய்வமாக்க்
கண்டது எங்கள் நெறி.
அப் பெருமிதம் ரெம்பவே
உண்டு எமக்கு
இன்னும் கல்லாய் நின்றால் எப்படி?
பெருமிதத்தைக் காப்பாற்ற வேண்டியது
நின் கடன் அல்லவா?
வேட்டல்-4
சீறி வரும்
சிங்கப் பிரச்சினைகள்
சாதுவாகி விட
ஆன்ட்ரகிள்ஸ் இல்லை நான்
ஆதரவு இல்லாத அனாதை
அனாதையா,
நீ இருக்கும் போது எப்படி?
வேட்டல்-5
கற்பகத் தருவின்
அடி நின்று
புலியை நினைத்த
புத்திசாலி அல்ல நான்.
நினைவின் வலிவை
நிர்மூலம் ஆக்க மாட்டேன்
நினைவின் வலிவைப் பிரயோகித்துக்
கனவு மாளிகைகளை
நிசம் ஆக்க வரம் கொடு
ஏன் என்றால்
நான் நிற்பது
கற்பக மர நிழல் அல்ல.
அதை விட வலுவான நின்
அனிச்சக் கழல் அடி.
வேட்டல்-6
மழைக்கால ரோடுகளில்
லாரியில் இருந்து சொட்டும்
சில பெட்ரோல் துளிகள்
கண் சிமிட்டிப் போடும்
வண்ண வண்ணப் பரவல்கள்
நிரந்தரமானவையா?
ஆம் நிரந்தரமானவைதான்
வாழ்க்கை நிரந்தரமானது
என்று சொல்லும் பட்சத்தில்.
அந்த வாழ்க்கையின்
சின்னச் சின்ன வண்ண வண்ணச்
சந்தோசங்கள்
எங்களுக்கு அவசியம்தானா,
அத்தியாவசியம்தான்
ஏந்தி நிற்கிறோம் எங்கள்
இரு கைகளையும்
கும்பிட்டு மட்டும் அல்ல
கொடு என விரித்தும் கூட
போடுவது உன் இஷ்டம்
ஆனால் வள்ளல் என்று உன்னை
அழைக்கிறார்களே, அது நிசம் என்றால்
போடு.
வேட்டல்-7
நீ கல்லாகக் கிட
கிடப்பதால் என்ன பயன்?
உணவைச் சீரணிக்க வேண்டிக்
கல்லையும் விழுங்குகிறதே கோழி
அதற்கு வேண்டுமானால் இருக்கலாம்
எனக்கோ. . .
சொல்லாக வா . .
விழுங்க அல்ல,
விழுங்கி உமிழச்
சத்தியக் கனலாக வா
பல் இளிக்கும் பைசாசப் பயங்கரங்களைப்
பஸ்பமாக்கும் மந்திரமாக
வலிய எண்ணங்களைத் திரட்டி
ஜீவ களை த்தும்பும் தீத் துண்டமாக . . .
வேட்டல்-8
எல்லாம் கேள்விக் குறிகள்
ஆகிவிட்ட நிலையில்
எமைச் சூழ்ந்த
அடைப்புக் குறிகளை நீக்கி
பிரச்சினைகளுக்கு
முற்றுக் குறி வைத்த உனக்கு
பிரதி உபகாரமாக எம்மால்த்
தரமுடிந்தது வெறும்
ஆச்சரியக் குறிகளைத்தான்.
ஏன் என்றால்
நின் லீலைகளின் அர்த்தம் புரியாத்
தற்குறி தானே நான் ?
வேட்டல்-9
பேராசைக் காரன் அல்ல நான்
பாதம் மட்டும் காட்டு போதும்.
மால்கூடக் காணாமல்
மயங்கியதாயிற்றே அது
எம் மாத்திரம் நான்?
இருந்தாலும் பற்றி விட்டேன்
பன்றி உரு எடுத்துக் குடைந்து அல்ல
மான சீகமாக.
அடேயப்பா
எப்படி வருணிக்க இதை?
கம்பனே கை கொடேன் சற்று
பாதங்கள் இவை என்னில்
படிவங்கள் எப்படியோ?
வேட்டல்-10
நம்பிக்கையில் சுழல்கிறது உலகம்.
இரவில் படுக்கிறோம்
காலையில் எழுவோம் என்பதற்கு என்ன உறுதி?
மூச்சை இழுக்கிறோம்
அடுத்த மூச்சு
விட்டுத்தான் தீர வேண்டும்
என்று என்ன கட்டாயம்?
சென்ற ஊழி வரை
கடலுக்குள் கிடந்த இமயம்
இன்று தரையில் நிற்கிறது
எல்லாமே நம்பிக்கைதானே
பேருந்துப் பயணம் செய்யும்
60 பயணிகளின் நம்பிக்கையும்
ஓட்டுனரின் கை அசைவில்
அடைக்கலம்.
எம் நம்பிக்கையோ
உன் ஆடலில் அடைக்கலம்.
ஆடலின் அர்த்தம் காண
பரத முனி அல்ல நாங்கள்
பாமரர்கள் - எனவே
எங்கள் பா -மரம் என்ற
நம்பிக்கையை விரிக்கிறோம்
வேட்டல்-11
கோவென்று கதறலாம் போல் இருக்கிறது
கொட்டுவதற்குக் கண்கள் ரெடி
துடைக்கத்தான் விரல்கள் இல்லை.
என்ன வாயின எம் விரல்கள்?
தலையைப் பிய்த்துக் கொள்ளவே
பற்றவில்லை அந்தப் பத்தும்
உனக்கோ ஆயிரம் ஆயிரம் கைகளாமே
ஒன்றையாவது அனுப்பு
பிய்க்க இல்லை துடைக்க.
வேட்டல்-12
ரெம்பத்தான் வலிக்கிறது தலை
சுத்தியால் நாலு பொட்டிலும்
தட்டுவது போல
பிரச்சனைக் கூடைகளைத்
தலைசுமந்து விற்கச்
சம்மதம் தான் எமக்கு.
ஆனால் வாங்குவோர் இல்லையே
எனவே ஒட்டு மொத்தமாய்
உன்னிடமே விற்கிறோம்
ஆதரவுக் காசு தந்து
பெற்றுக் கொள்வாய் என்ற
நம்பிக்கையுடன்
எங்கேயோ படித்தேனே
நம்பினோர் கெடுவதில்லை
நான்கு மறை தீர்ப்பு - என . . .
நிசமா அது?
வேட்டல்-13
ஒளியை அல்லவா கேட்டோம்
நீ ஏன் இருட்டைத் தருகிறாய்
பரவாயில்லை
அந்த இருட்டே உன்
திருவடி நிழலாய் அமைந்து எங்களைக்
கிரகணிக்கும் பட்சத்தில்.
வேட்டல்-14
கழுத்தில் கிடப்பதைக்
கழற்றி எறிந்து விட
உன்னிடம் போல்
பாம்புகள் இல்லை இவை சிக்கல்கள்
விடுவிக்க உன்னால் மட்டுமே ஏலும்
ஏன் என்றால் இவைகளுக்கும்
உன்னைப் போலவே
ஆதி அந்தம் இரண்டும் கிடையாது.
வேட்டல்-15
சூரியனிடம் இருந்து
ஒளி எனக்கு வந்து விட்டதே
என் ஒளியும் சூரியனுக்குப் போகும்
என இறுமாந்து கொண்டதாம்
கண்ணாடித் துண்டு
உன் ஓங்காரத் தொனி கேட்டு
நான் புலம்பும் ஓலம் போல
வேட்டல்-16
எங்கள் மனசை மென்மை ஆக்கு
விலிய மென்மை
கடினமான கட்டிடங்கள்
கலகலத்துப் போகாமல்
தாங்கும் இடிதாங்கிக் கம்மியின் வலிய மென்மை
பாரமான இரயில் பெட்டியைத் தாங்கும்
ஸபிரிங்கின் வலிய மென்மை
அந்த வலிமை
ஆகாய மைதானத்தில்
சூரியப் பந்தை எட்டி உதைக்கும் அளவுக்கு
உடலால்தான் ஏலாது
மனதுக்கா முடியாது
விஸ்வ ரூபம் எடுக்க ?
வேட்டல்-17
வானத்தைப் பிராண்டும்
வசதிகளும் வேண்டாம்
தலையைப் பிராண்டும்
பிரச்சனைகளும் வேண்டாம்
பேப்பரைப் பேனாவால்
கடைசிவரைப்
பிராண்டிக் கொண்டிருந்தாலே போதும்
பறப்பதற்கு வேண்டாம் சிறகுகள்
பாய்வதற்கு வேண்டாம் சக்கரங்கள்
கடைசிவரை நடக்கக் காலிலே
சக்தி கொடு போதும்
என்னோடு வளருபவை
தேவைகளோடு சிக்கலும் கூட
தாளில் பேனாவால் தடவும் போது
மனதில் யாரோ இதமாகத் தடவுவது
போல் இல்லை?
அப்போது பிறப்பது கவிதை மட்டும் இல்லை
நிம்மதியும் கூட
ஆராய்ந்து பார்த்தால் தெரியாது என் இறைவா
அனுபவித்துப் பார்க்க வேண்டும்.
என் வட்டம் சிறியது
ஆனால் நானே இதில் இராஜா
வேட்டல்-18
படித்துப் படித்து என்ன கண்டோம்
குழப்பம் தவிர.
எவனோ குழப்புகிற
குட்டையில் வேண்டாம் எங்கள்
மூளைச் சலவை
ஊரான் குரலை உள்வாங்கி ஒலிக்க
இசைத் தட்டுக்களோ டேப்புகளோ அல்ல
நாங்கள் ஆள் இல்லாமல்
நாதம் எழுப்பும்
புல்லாங்குழல்கள்
இதன் ஒன்பது துளைக் குழலின்
திறப்பு விழா நீ ஊதிய
முதல் மூச்சால் நிகழ்ந்தது
காலா காலம்
சப்த லஹரிகளை
உண்டு பண்ண வேண்டி
வேட்டல்-19
சூரிய வெளியைப் பயங்கரமாக்க்
குவிக்கும் குழிஆடிப்
பிரதிபலிப்பான்களாக வேண்டாம்
வெறும் சுயம் பிரகாசியான
மின்மினியாக இருந்தாற் போதும்
என்க் கென்னவோ
கண்ணாடியின் இரவல் ஒளியை விட
மின்மினியின் பாஸபரஸென்ஸ்
பிடித்திருக்கிறது ரெம்பவே
வேட்டல்-20
பூமி சுழ்வதை நிறுத்தினால் . . ?
ஓ, வேண்டாம்
இயற்கைக்கு மாறான வரம் கேட்டு
அதிர்ச்சிகளைச் சந்திக்கத்
தயாராக இல்லை நாங்கள்
எங்கள் வரங்களிற் சில
வாய்விட்டுக் கேட்க முடியாதவை
மனசுக்குள் ஊமை அழுகையாய்
மட்டுமே ஒலிக்கக் கூடியவை
நிம்மதியை
அழுதால் மட்டுமே பெறமுடியும்
எழுதினால் அல்ல
காரணம் அவை வரங்கள் அல்ல
விவரங்கள்
அவற்றைஎலாம் வடிக்க
எழுத்துக்கு இல்லை
எண்ணத்திற்கு மட்டுமே
சக்தி உண்டு
எண்ணங்கள் செயலாகும்
என்கின்றனர் மனோத்த்துவ வாதிகள்
நிரூபிக்க வேண்டியது நீ
சம்மதம் தரவேண்டியது நாங்கள்
வேட்டல்-23
வேண்டாம் என்று சொன்னால்
விசித்திரமாகத் தோன்றும் உனக்கு
மக்களின் பல வசதி ஆசைகள்
வெறும் பைத்தியக் காரத்தனமாகவே
தோன்றுகிறது
கோவணாண்டியின்
அடுத்த அரைத்துண்டு ஆசை
பணக்காரனின் எந்த ஆசைக்கும்
சளைத்ததில்லை
ஃபேன் காற்றும்
ஃபோம் மெத்தையும் இன்றித்
தூக்கம் வராது என்று பீற்றும் ஆள்
கூட்ட நெரிசலில்
இராத்திரி இரயிலில்
நின்று கொண்டு தூங்குவது வேடிக்கைதான்
எனக்கென்னவோ கட்டாந் தரையில்
அப்படியே நீட்டி நிமிர்ந்தால்
அதுவே சொர்க்கமாகப் படுகிறது
சிக்கனத்திற்காக இல்லை
சிக்கலின்மைக்காகச்
சொல்கிறேன்
என் அகராதியைப் புரட்டினேன்
வசதிகள் என்ற வார்த்தைக்குச்
சிக்கல்கள் என அர்த்தம் போட்டிருந்தது.
வேட்டல்-24
360 டிகிரி சுற்றளவையும்
பாடுபட்டுச் சுற்றியாவது
நிமிட முள் மணிமுள்ளை
30 டிகிரி தூரம் அசைப்பது போல
ஆயிரம் விண்ணப்பங்களைப் படைக்கிறோம்
அதில் ஒன்றையாவது அசைவிப்பாய் எனும்
நம்பிக்கையுடன்
மணிமுள் நிமிட முள்ளோடு
சேர்ந்திருந்த நெரத்தைவிட
பிரிந்திருந்த நேரமே அதிகம்
நாங்களும் உன்னோடு அங்ஙனமே
அந்தக் கொஞ்ச நேர உரிமையிற்
கேட்கிறோம்
முப்பதாண்டுகளாக
மலரத்துடித்த இப்பூக்களை
மலர்விக்க வா தென்றலின் ஸ்பரிசமாக
வேட்டல்-25
நாதம் கேட்கிறது எனக்கு
கையிரண்டாலும் காது மடல்களை
இறுக க் கெட்டியாகப் பொத்திக்
கண்ணாடிக் கூண்டில் அமர்ந்தாலும்
கண கண என.
எங்கிருந்து வருகிறது இது?
அந்நாதத்திற்கு விடையாக
ஓகோ என உரத்து ஒலிதருகிறேனே
கிடைக்கிறதா உனக்கு?
ஒருவேளை என் ஊமை நினைவுகள்தான்
இந் நாதமோ இல்லை
இதயத்தில் நீ ஆடும் ஒலியோ ?
அல்ட்ராசோனிக்ஸ் அலைகளை
உண்டு பண்ணி
இருட்டில் வழிகாணுமாமே
வௌவ்வால் சாதி
நானும் அப்படித்தானோ
பாதை தெரியாமல்
பயணம் புரியாமல்
சிலந்தி வலைநூலால்
கோபுரச் சிறை விட்டு இறங்கிய
அமைச்சனைப் போல
இந்த ஓங்கார நாதம் ஒன்றே பிணையாய்
நானும் இறங்குகிறேன் துன்பச் சிறை விட்டு.
வேட்டல்-26
பள்ளிக் கல்லூரி நாட்கள்
எல்லாம்
எனக்கு விளையாட்டு என்றாலே
அலர்ஜி.
ஐந்து அடி தாண்ட
அச்சம் நடுக்கம்
இப்போதோ
உன் பேரைச் சொல்லிக் கொண்டே
எவரெஸ்டில் இருந்து
ஆண்டீஸ் சிகரம் வரை
தாவும் சக்தி பெறுகிறேன்
உன் பேரே இப்படி - என்றால்
தரிசனம். . ?
வேட்டல்-27
நடப்து நடக்கட்டும்
என விட்டு விட்டு
நட்சத்திரங்களின் மேல்
பழிபோட மாட்டேன் நான்
வாழ்க்கைக் கடலில்
பாதிவழி வந்து
தோல்வியைத் தழுவிய போது கூட
மனது அவ் விடங்களை
நன்நம்பிக்கை முனை என்றே அழைக்கிறது
பார்த்தலோமியோ டயஸ் போல.
வெற்றி கொள்ள அதே மனது
வாஸ்கோட காமாவாக
வடிவு கொண்டு வருகிறது
வெற்றி பேற
என்மேல் உன்
மனப் பூர்வ ஆசிகள்.
வேட்டல்-28
மந்தார மத்தாற் கடைந்தெடுத்த
ஆலகால நச்சை
நீ விழுங்கியதில்
எங்களுக்கு உள்ள நம்பிக்கை போல
எல்லாக் கஷ்டங்களையும் விழுங்கி விடு.
அந்த நம்பிக்கையில்
அகிலம் புரட்ட வேண்டாம் நாங்கள்
தூசைப் புரட்டினாற் போதும்
தூசுகளால் ஆனதுதானே உலகும் ?
வேட்டல்-29
தலையோடுகளோடு
தத்துவம் பேசிக் கொண்டிருக்கச்
சுடலை ஆண்டிகள் அல்ல நாங்கள்
நீ வனைந்த
சொரணையுள்ள தோண்டிகள்
இத் தோண்டியில் நிறைந்திருப்பது
இரத்தநீர் நிணநீர் மட்டுமா
இரண்டாயிரம் கோடி ஆசைகளும் கூட
இதில் சிரித்த ஆசைகளை விடச்
செத்த ஆசைகள் அதிகம்
செத்த ஆசைகளின் சாம்பலைத்
திருநீறாகப் பூசிக் கொண்டு
வேண்டுகிறோம்
சிலவற்றுக்கேனும்
நிஜம் எனபெ பெயரிடும் படிக்கு.
வேட்டல்-30
ஆறி விடுவதற்குத்
தோல் உரிக்கப் பட்ட
காயங்கள் அல்ல இவை
ஆத்மாவின் இரணங்கள்
இரணங்களின் ஆறுதலைத்
தரும் மருந்தே உன்
ஆறுதல்தான்
காலையில் யாம் குளிக்கும்
ஒவ்வொரு செம்பு நீரும்
உன்முடிக் கங்கையாய்
வருஷிக்கட்டும்
அதில் ஜொலிக்கட்டும் எங்கள்
உடலோடு உள்ளமும்
கழுவப் பட்ட எங்கள் ஆத்மாவின் தேஜஸில்
ஏ உலகமே உனக்கு
ஒளி கிடைக்கட்டும்
வேட்டல்-31
வேட்டைக் காரத் தொந்தரவுகளுக்கு அஞ்சி
பாலை மண்ணுக்குள் தலை புதைத்தலே
பாதுகாப்பு என்று
சந்தோஷிக்கும்
நீர்க் கோழிகள் அல்ல நாங்கள்
விழுகின்ற அன்ல் கங்குகளை
வீம்புக்காகவேனும் வழுங்கி விட்டு
அவஸ்தைப் படும் எங்கள்
ஆசுவாச மூச்சுக்களை
குளிர்விக்க என்று வருகிறாய் சொல் நீ
கண்களை மூடிக் கொண்டு
ஹேர்பின்னால் தேசப் படத்தில் தொட
தொட்ட இடத்தில் தலைநகரம்
உருவாக்கிக் காட்ட
விக்டோரியாக்கள் இல்லை
நாங்கள் வெறும் மனிதர்கள்
பிரம்மாண்டமான தலைநகரங்களை
உருவாக்க இயலாவிட்டாலும்
திறந்துள்ள எங்கள்
மனக் குடிசைகள்
என்றும் உன் வருகைக்காகவே
இவ் ஆனந்தப் பித்தியஹாரக் குடிலில்
என்று வரும் உன் வாசம் சொல்.
வேட்டல்-32
மாட்டின் வாலால் என்ன பிரயோஜனம்?
ஈ ஓட்டும்
அணில் வாலால் என்ன பிரயோஜனம்?
தாவும் போது சமநிலை தரும்
முப்பத்திரண்டு முதுகு எலும்புகளோடு
முப்பத்து மூன்றாகத் தொங்கும்
துன்ப வாலால் என்ன பிரயோஜனம் எமக்குத்
துயரம் தவிர?
பௌராணிகர்கள் இத் துன்பங்களைக்
கண்டிருந்தால்
வெட்ட வெட்ட முளைக்கும்
அசுரன் தலைக்கு
உதாரணம் காட்டி இருப்பார்கள்
அவைகளை நின்
பாதார விந்தங்களில் படைக்கிறோம்
சமர்ப்பணத்திற்காக அல்ல
சம்ஹாரத்திற்காக
எங்கள் துன்ப இராட்சதங்களுக்குத்
தேவை இன்னொரு திரிபுர தகனம்
காத்துக் கிடக்கிறோம்
கடுகி வருகிறாய் எப்போது சொல் . . .
-மகுடதீபன்
magudadeepan@rediffmail.com
9486102034
