tamil pages 0f magudadheeban 
 

 திட்டு

யாரையாவது திட்ட வேணுமென்றால் திட்டுங்கள், ஆனால் தமிழில் திட்டுங்கள். திட்டினால் சில சமயம் சில தேவதைகள் ‘ ததாஸ்து சொல்லி விடுமாம். புரியலையா, நாம் சொன்னது பலிக்கக் கடவதாகுக எனறு அர்த்தம் ஆகிவிடுமாம்.

எங்கள் இராமநாதபுரம் பக்கம் “ போடா தப்பிலிப் பயலே “ என்று திட்டுவார்கள். தப்பே செய்யாத மாசிலாமணிப் பயலே, எவ்வளவு நல்ல திட்டு இது ? இன்னும் சிலர் அவன் கிடக்கிறான் வீணாப் போனவன் என்பார்கள். இதுவும் எங்கள் முகவைச் சொல் வழக்கில் ஒன்று. வீணாப் போனவனைப் பிரித்துப் பாருங்கள், வீணா + போல் + நவன் . வீணையை வைத்திருப்பவள் வீணா, அவளைப் போல் நவன் புதுமை ஆனவன் என்றும் பொருள்.

தேவடியாப் பயலே என்றால் தேவனுக்கு அடியவரின் திருக்குழந்தை , sonofabitch அல்ல. நெல்லைப் பகுதியிலே இன்றுகூடக் குழந்தைகளைத் திட்டும் போது நாசமத்துப் போக (நாசம் அற்றுப்போக) என்றுதானே திட்டுகிறார்கள் ! ஏண்டா சோமாரி, எனச் சென்னைப் பயக்க வயக்கச் சொல்லுக்குச் சொல் மாரி - சொற்பொழிவாளன் என்றும் பொருள் கொள்ளலாம். அறிவில்லாதவனே என்றால் உங்களுக்கே தெரியும், அறிவில் ஆதவன் போல் பிரகாசிப்பவன் என்று.

கலைமகள், அலைமகள், மலைமகள் என மூன்று தேவியரையும் ஒன்று சேர்த்தால்தானே மூதேவியே வரும். பூச்சாண்டி பார் என இனிமேல் நீங்கள் முருகப் பெம்மானையே கைகாட்டலாம், திருநீற்றுப் பூச்சு ஆண்டி அவன்தானே. முருகப் பெம்மான் என்றதும் எனக்கு இந்தச் சமயத்தில் கந்தர் அலங்காரத்தில் இருந்து ஒரு ஒன்றே முக்கால் வரி ஞாபகத்திற்கு வருகிறது.

‘மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதாரை யும்அங்கு வாழவைப்பான். . .’

எனவே வைகிறீர்களா, திட்டுகிறீர்களா, தயை கூர்ந்து தமிழில் மங்களகரமாகத் திட்டுங்கள், முருகப் பெம்மான் உங்களை வாழ வைக்கட்டும். இற்றைக் காலத்திலே ஆங்கிலக் கலப்பு பேச்சிலும், சொல்லிலும், செயலிலும், வழக்கிலும் அதிகரித்து விட்ட நிலையில், பாருங்களேன், எனக்குக் கூட எழுத்துருக்களை இப்போது அடித்துக் கொண்டிருக்கும் போது படக் என்று ஆங்கிலம்தான் வந்து விழுகிறது, அட்லீஸ்ட். திட்டும் போதாவது தமிழில் திட்டுங்கள், ப்ளீஸ். ஆங்கிலம் கலவாதே மடயா மடயா என்று யாரும் என்னைத் திட்டினால் அதையும் நல்லபடியாகவே அர்த்தம் சொல்லலாம். மடயன் என்றால் இளமையானவன் என்றும் பொருள் வரும்.

“பொய்வந்த நெஞ்சில் புகலறி யா மடப் பூங்குயிலே . . .”

என்கிறார் அபிராமிப் பட்டர்.

தமிழைக் கடல் என்று சொல்வார்கள், கடலில் காவிரி வையை தாமிரவருணி மட்டும்தான் கலக்க வேண்டுமா, கொஞ்சம் தேம்ஸ் நதியும் கலப்பதிலே என்ன தப்பு ? தேம்ஸ் மட்டுமே கலந்தால் அது தப்புதான். திட்டைப் பற்றி விலாவாரியாக ஏன் சொன்னேன் என்கிறீர்களா, என் ஆசை எல்லாம் திட்டு திட்டாக நம் தமிழ்க் கடலில் அங்கங்கே தீவாகிப் போன தமிழர்களை எல்லாம் ஏதேனும் ஒரு வகையிலாவது ஒன்றிணைக்க வேண்டும் என்பதுதான். அதை இந்த வலைத்தளம் செய்யுமா ?

கடலில் வலை விழும் ஆனால் வலைக்குள்ளும் கடலே விழும்.

வலைத்தளம் தனித்துப் போன அனைத்துத் திட்டுக்களையும் ஒன்று சேரப்பிடிக்கும் நாள் வரவை நயன விழி பூத்து அன்புடன் எதிர்பார்க்கும்,

ம கு ட தீ ப ன் .