பெரிது
மலையினும் மாணப் பெரிது, கடலினும் மாணப் பெரிது, ஞாலத்தின் மாணப் பெரிது என்பதற்கு
திரு வள்ளுவர் வேணுமானால் வெவ்வேறு விளக்கங்கள் சொல்ல லாம், அவ்வையார் சொல்வது என்ன
தெரியுமா?
பெரியது கேட்கின் நெடிவடி வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகனோ கரியமால் உந்தியிற் பிறந்தோன்
கரியமாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி அங்கையில் அடக்கம்
குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்
இறைவனோ தொண்டர்தம் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே !
பாடல் கரடு முரடாக இருக்கிறதே விளங்கவில்லையே என்று யாரும் விழிக்க வேண்டாம். கடைசி
இரண்டடி விளங்கிக் கொண்டாற் போதும். கட வுள் என்றாலே எல்லாவற்றையும் கடந்து உள்ளே
உள்ளத்துள் இருப்பவன் என்று அர்த்தம். அதுவும் திருத் தொண்டர் உள்ளம் என்றால்
சொல்லவும் வேண்டுமோ ?
வியாச பகவான் புராணங்களை எழுதினார். மொத்தம் 18 புராணங்கள். ஆனால் இன்றுவரை யாரும்
அதில் எதையும் பெரிய - என்ற அடைமொழி சேர்த்துச் சொல்வார் இல்லை. ஆனால் இறைவனின்
அடியவர் பெருமை பேசும் திருத் தொண்டர வரலாற்றைக் கவியாக வடிந்தார் ஒரு அமைச்சர்.
அவர்தான் குலோத்துங்கனுக்கு மந்திரியாக இருந்த சேக்கிழார். அதுவே தொண்டர்தம் பெருமை
சொன்ன காரணத்தால் பெரிய புராணம் ஆயிற்று.
இறைவனோ மிகப் பெரியவன். அவனை 'அலகில் சோதியன் . . . '
என்பார்கள். இந்த அலகு என்ற சொல்லை Unit என்பார்கள் ஆங்கிலத்தில். மைல், கி.மீ.
என்பது எல்லாம் ஒருவகை யூனிட். மனிதனுக்கு எல்லாம் ஐந்தரை அடி உயரம், ஆறடி உயரம்
எனச் சொல்லலாம். கடவுளுக்குச் சொல்ல முடியுமா? கடவுள் இத்தனை அடி நீளம் இத்தனை
அகலம் என்று யாராலும் அளந்து சொல்ல முடியுமா? Unitகளிலேயே பெரிய Unit, Light years.
அந்த யூனிட்டை வைத்தும் கூட பிரபஞ்சத்தின் எல்லையை அளக்க முடியவில்லை.
எனவேதான் முடியாமல் மூச்சு வாங்கிப் போய் expanding universe என்று சொல்லி விட்டு
முற்றுப் புள்ளி வைத்து விடுகிறார்கள். இந்த expanding universe concept எல்லாம்
இப்பத்தானே, ஆனால் 1200-ஆண்டுகளுக்கு ஒரு மதி மந்திரி இதை எல்லாம் பாடி
இருக்கிறார், அதுவும் நம் செந்தமிழில் என்றால் உங்களுக்கு வேணுமானால் ஆச்சரியமாக
இருக்கலாம், எனக்கொன்றும் ஆச்சர்யமில்லை. உங்களுக்கு இது எல்லாம் தெரியாமற்
போனதுதான் எனக்கு ஆச்சர்யம்.
அண்டப் பகுதியில் உண்டை பிறக்கம்
அளப்ப அரும் தன்மை வளப்பெரும் காடசி
ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன . . .
ரெம்பவும் சிம்பிளாகச் சொல்லி விட்டார், மேற்பட . Greater than 100, 00 00 00 00.
விரிந்தன என்றால் expanding universe . ஆர் சொன்னார் அவருக்கு ? யார் அவர், என்றால்
அவர்தான் மணிவாசகர்.
இவ்வளவு பெரிய அறிவியல் நுணுக்கமும், விஞ்ஞான விளக்கமும், அவர் காலத்தில் எப்படித்
தெரிந்தது நிச்சயமாக, அரிமர்த்தன பாண்டியன் இராக்கெட் விட்டிருக்க வாய்ப்பு இல்லை.
பின் எப்படி என்றால் அதுதான் மெய்ஞானம், சகல விஞ்ஞானமும் அதற்குள் அடக்கம்.
இரண்டில் பெரிது எது என்று நீங்களே சொல்லுங்கள்.
நாம் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் சிறிதாக, ஏன் வாமனாக க் கூட வரத்
தயாராக இருக்கிறார், வரவேற்கத்தான் நாம் தயாராக இல்லை. சிறியதாக வடிவம் எடுத்தாலும்
இவ்வளவு பெரிய expanding universeஐ அளக்க அவருக்கு ஒரே ஒரு அடி போதும். விஸ்வ ரூபம்
எடுததாரே ஆமாகில் இந்த விரியும் பிரபஞ்சம் எல்லாம் எம்மாத்திரம்?
இதைத்தான் எம் கோதை பாடுகிறாள்.
' பொல்லாக் குறள் உருவாய்ப்
பொற்கையில் நீர் ஏற்று
எல்லா உலகும்
அளந்துகொண்ட எம்பெருமான் . . .'
இந்தக் கோதையை ஏன் இங்கே நுழைக்கிறேன் என்றால், காரணம் இருக்கிறது. கோதை மானுடப்
பிறவி அல்ல. தாயின் வயிற்றில் தங்கிப் பிறப்பதே மானுடப்பிறவி. கோதை பிறந்தாள் என்று
சொல்வதே தவறு, திருமா மகளே ஓராயிரம் கோடி சூரியப் பிரகாசத்தோடு பூமியில்
தோன்றினாள், உதித்தாள் என்றே கொள்ள வேண்டும்.
திருமகள் தோன்றியது மட்டுமா, மடியில் உட்கார்ந்து விளையாட ஒருத்தர் என்ன தவம் பண்ணி
இருக்க வேண்டும், எவ்வளவு பாக்கியம் செய்திருக்க வேண்டும், எவ்வளவு புண்ணியம்
புரிந்திருக்க வேண்டும், எல்லோர்க்கும் அது வாய்க்குமா, வாய்த்தது ஒரே ஒருவருக்கு.
யார் அவர்?
குமர குருபரர் மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழை அரங்கேற்றிய போது, திருமலை மன்னன்
மடியில் இறைவியே குழந்தை வடிவில் அமர்ந்து கேட்டாளாம் என்பார்கள். இந்த மன்ன ன்
சும்மாவா, அடியார்க்கு அடியன் ஆயிற்றே, யாராவது மன்னனின் படத்தை மிதித்தால் அது
எவ்வளவு பெரிய இராஜத் துரோகம், எவ்வளவு பெரிய அரச அவ மரியாதை ? அரசன் சும்மாவா
இருப்பான், சிரச்சேதம் செய்துவிட மாட்டானா என்ன ?
திருமலை மன்ன ன் என்ன செய்தான், தன் தேவிகளோடு தன் வடிவத்தை அங்கயற்கண் அம்மை
திருக் கோவிலில் தாயின் சந்நிதிக்கு எதிரில் தரையில், தந் தரையில், எல்லா
பக்தர்களின் காலும், எல்லா அடியவர்களின் திருப் பாத த் துகள்களும், தன் தலையில்,
தன் உடலில் படுமாறு, புடைப்புச் சிற்பமாக அல்லவோ செதுக்கி வைத்தான். எனவேதான்
பிள்ளைத் தமிழ் கேட்க வந்த எம்பிராட்டி இவன் மடியைத் தேர்ந்தெடுத்தாள்.
ஆனால் ஒன்று, கயற்கண்ணி அமர்ந்தது வெறும் நூறு பாடல் அரங்கேறும் கால அவகாசத்தில்
மட்டுமே. இவன் புண்ணியப் பலன் இவ்வளவே. இது இப்படி இருக்க, எம் திருமாமகள்
இருக்கிறாளே, இவள் சின்னஞ்சிறு குழந்தைப் பருவம் தொட்டு மணப் பருவம் வரை ஒருவரிடம்
வளர்ந்தாள் என்றால் அந்தக் கொடுப்பினை வேறுயாருக்கும் கிடைக்கவில்லை. அவர்தான்
பட்டர்பிரான் என்று பாண்டிப்பிரானால் போற்றப்பட்ட விஷ்ணு சித்தர்.
எத்தனை ஆழ்வார்கள் இருந்தாலும், இந்த ஒரு கொடுப்பினைக்காகவே இவர் பெரியாழ்வார்
என்றும் அழைக்கப் பட்டார். மட்டுமா, இறைவனுக்கே வாழ்த்துச் சொல்லி பல்லாண்டு
பல்லாண்டு என்று பாடியவர் அல்லவா.
'நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும்
அத்தாணிச் சேவகமும்
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு
காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந் தென்னை
வெள்ளுயி ராக்கவல்ல
பையிடை நாகப் பகைக் கொடி யானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே . . '
எனப் பெரும் ஆளுக்கே பல்லாண்டு சொன்னதால்தான் இவர் பெரியாழ்வார் என்பர்.
ஆண்டாள் இலக்குமியின அம்சம் என்பதைவிட இலக்குமியே பெரியாழ்வாருக்குப் பூமியிற்
கிடைத்தாள் குழநதை வடிவில். இந்த ஆண்டாள் பிறந்தது நம் தமிழை வளப் படுத்தவே. சும்மா
வத வத என்று பக்கம் பக்கமாகப் பாடல்கள் என்று அல்லாமல், நச் என்று உளம் தைத்து
உருக்கும் பாடல்கள், வேங்கடவனை, மாலிரும் சோலை நம்பியை, அரங்கனை அவள பாடிய
பாடல்களைப் பாடிப் பாருங்கள் கற்பூரம் நாறும் கமலப்பூ நாறும்.
எனக்குத் தெரிந்த அளவில் மிகப் பெரிய வாக்கியம், மிகப் பெரிய சொற்றொடர் ஒன்று
படித்தேன். எம் கோதை நாச்சியின் கதையைப் பாவையின் ஏற்றத்தை ஒரே வாக்கியத்தில்
சொல்லி இருந்தார்கள், என்ன, அது கொஞ்சம் மணிப் பிரவாளம் கலந்து இருந்தது. இருந்தால்
என்னவாம், So நான் அங்கு வந்து promise செஞ்சேன் பட் அவன் வந்ததும் எஸ்கேப்
ஆய்ட்டேன் - என்ற மாதிரி நீங்கள் பேசும் ஆங்கில மணிப்பிரவாளத்திற்கு அது எவ்வளவோ
மேல். எம் அன்பர் இகு அவர்கள் தம் Blog-ல் அதை PDF Format-ல் வழங்கி இருக்கிறார்.
ஆர்வம் உள்ளோர் படிக்கலாம்.
இதே போல் இராமாயணத்தை ஒரே வாக்கியத்தில் யாராவது சொல்லியிருந்தால் தெரிவியுங்கள்.
அப்புறம் ஒரே வாக்கியம் கொண்ட மிகப் பெரிய பாடல் எது? எனக்குத் தெரிந்த வரை பட்
டினத்து அடிகள் பாடி இருக்கிறார் மனிதன் கருக்கொண்டு பிறப்பதில் இருந்து, வளர்ந்து
விளையாடிக்க குறும்புகள் செய்து, வாலிபன் ஆகி, பெண்களைச் சைட் அடித்து மணம்
புரிந்து, பின் குழந்தை பெற்று, நோய் வாய்ப் பட்டு நொந்து அசிங்கமாய் இறந்து நாறும்
வரை ஒரே வாக்கியமாய் ஒரே பாடலில் சொல்லி இருக்கிறார். அதுதான் எனக்குத் தெரிந்த வரை
மிக மிக அதிக நீளமான வாக்கியம் கொண்ட பாடல். அதையும் மிஞ்சி வேறு எதுவும் இருந்தால்
சொல்லுங்கள், திருத்திக் கொள்கிறேன். இதோ அந்தப் பாடலின் அடியும், முடியும் . .
ஒரு மட மாது ஒருவனும் ஆகி
இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணிதம் மீதிற் கலந்து
... ... ... ... .... ... .... .... .....
... ... ... ... .... ... .... .... .....
சிறகிட மூடி அழல் கொடு போக
ஓர்பிடி நீறும் இலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே.
- ம கு ட தீ ப ன் .. மு க வை
சிந்தனைகள்
- 1 .ஆகா பாடலாம்
- 2. மெல்லத் தமிழ் - 1
- 3. மெல்லத் தமிழ் - 2
- 4. மெல்லத் தமிழ் - 3
- 5. பொற் கொடி
- 6. முக்திப் பால்
- 7. உலகப் பொது மறை
- 8. கோணல் பார்வை
- 9. மனோ சக்தி
- 10.முப் பால்
- 11.நான் யார்?
- 12.நியூஸ்
- 13.பண்-பாடு
- 14.பிப்ரவரி-14
- 15.ஐந்தாம் தமிழ்
- 16.திட்டு
- 17.இயற்கை
- 18.ஏன் மறந்தோம்
- 19. குறளில் ஏழு
- 20. பிறந்தநாள்
- 21. வையுங்கள்
- 22. கவிதை
- 23. பெரிது பெரிது
- 24. ஐந்தாம் தமிழ்
- 25 .நடராசர்
- 26. கழுதை
- 27. பேசன் ப்ளஸ்
- 28. முட்டை
- 29. முதுகு தரிசனம்
- 30. பெரிது பெரிது
- 31. 50 ரூபாய்
- 32. நாதம்
- 33. மாடக்குழி
- 34. அபிராமி கோவில்
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .