மாபாருக்கு மார்க்கோ போலோ வந்தபோது பதிமூன்றாம் நூற்றாண்டு. பாண்டி நாட்டைச்
சுந்தர பாண்டியன் ஆண்டு கொண்டிருந்தான். மார்க்கோ போலா மக்கள் வாழ்க்கை பற்றி
எழுதுகிறான் ம்க்கள் எல்லாம் அரை நிர்வாணமாக இடுப்பிலே சிறு துணி மட்டும் கட்டிக்
கொண்டு அலைந்து கொண்டிருந்தனர் அரை நிருவாணமாக என்று.
அவன் கூற்றுப் படி பாலியல் குற்றங்கள் ஒன்றும் பெரிதாய் எடுத்துக் கொள்ளப் பட
வில்லை. வக்கிரமும் பாலியல் ஆர்வமும் அளவுக்கு அதிகம் வளர்ந்து போனதெல்லாம்
பொத்திப் பொத்தி வைத்த காலங்களுக்குப் பின்னாடிதான்.
பெர்ட்னன்ட் ரஸ்ஸல் எழுதுகிறான், என்ன, விக்டோரியா மகா ராணி காலத்தில் பெண்கள் ஆடை
அணிவதே கால்ப் பாதம் வரை. எனவே அந்தக் காலத்தைத் சேர்ந்த ஆங்கிலேயனுக்கு பெண்ணின்
கணுக்கால் தெரிந்தாலே அவனுக்குப் பால் உணர்வு எழப் போதுமானதாக இருந்தது. ஆனால்
இப்போதோ குட்டைக் கவுன் அணிந்தாலும் ஆங்கிலேயனுக்குச் சலனம் வருவதில்லை என்கிறான்.
தமிழனுக்கு ஏன் இந்தியர்களுக்கே முதன் முதலில் ஆடை அணியகப் கற்றுக் கொடுத்தது
இஸ்லாமியர்களே. பெண்கள் ஜாக்கட் அணியும் பழக்கமும் ஆண்கள் சட்டை அணியும் முறையும்
முஸ்லும்கள் நமக்குத் தந்த கொடை. அந்தக் காலத்திலே இருந்தது எல்லாம் மிஞ்சி
மிஞ்சிப் போனால் முலைக் கச்சு அவ்வளவே, அதுவும் அரச குல மற்றும் உயர்குலப்
பெண்களிடம் மட்டுமே.
நம் கடவுள் வடிவங்களும் இதற்கு விதி விலக்கு அல்ல. நாயக்கர் காலத்துக்கு முந்தி
கோவிற் சிலைகளில் ஜாக்கெட் இருந்தால் தயைகூர்ந்து கண்டு பிடியுங்களேன், பார்ப்போம்.
காலம் என்பது மனிதர்களிடம் மட்டும் அல்ல, கடவுள் உருவங்களில் கூட மாற்றங்களை
ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.
சில கடவுள்கள் தோல் ஆடைகளைக் களைந்து வீசி விட்டுப் பட்டுப் பீதாம்பரத்திற்கு இராஜ
கோலத்திற்கு மாறினர். முழுக்கைச் சட்டை அணிந்து கொண்டு வீதி உலா வந்தனர். சில
பெண்கடவுள்கள் ஜாக்கெட் அணியும் பண்பாட்டைத் துவக்கினர். சொல்லப் போனால் மனிதன்
தன்னைப் போல தெய்வங்களை அலங்கரிக்க ஆரம்பித்தான் என்பதுதான் நிஜம்.
மனிதனின் உணவுப் பழக்கமும் பலவாறாக மாறியது. கஞ்சியைக் குடித்தவன் களியைத் தின்றவன்
சோற்றை உண்டவன் விதவிதமாகச் சமைத்து உண்ண ஆரம்பித்தது கடவுள் முன்பு படைக்கும்
படையல்களிலும் பிரதிபலித்தது.
மாவிளக்குப் படையல், தேன் தினைமா படையல் என்பவை அந்த அந்தத் தெய்வ வழிபாடுகள்
மனிதன் சமைத்து உண்ணப் பழகிய காலத்திற்கும் முந்தியவை என்றே காட்டுகின்றன. அந்தக்
காலத்துத் தமிழகத்தின் உயர்தரப் பண்டங்கள் ஆகிய அப்பம் பிட்டு அதிரசம் முறுக்கு
முதலியன கடவுள்களுக்குப் படைக்கின்ற பழக்கங்கள் இன்று மாறிப் போய் ஜிலேபி இலட்டு
சோன் பப்ப்டிஎன மாறிக் கொண்டு வருகிறது.
பிட்டுக்காக வேண்டி என் அப்பன் நடராசன் மண் சுமந்த கதை பிரசித்தம். இன்றோ சர்வ
சாதாரணமாக இனிப்புச் சேவும், பூந்தியும் தரும் பழக்கம் வட பாரதத்தில் இருந்து
நம்மையும் தொற்றிக் கொண்டது. சுண்டல் என்பது வெறும் கிண்டலுக்குமட்டுமே
அவ்வளவுதான். சுண்டலுக்கு இந்த பூந்தி ஒரு சப்ஸ்ட்டிடியூட் என்று நினைக்கிறேன்.
பிடித்தால் இலட்டு உதிர்த்தால் பூந்தி. முன்னதை ஒருவருக்குத்தான் கொடுக்கலாம்
பின்னதையோ எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் எண்ணி எண்ணிக் கொடுக்கலாம் என்பது ஒரு
வசதி. எப்படி ஆனாலும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்குச் சாமி பிரசாதம் என்றால்
ஒன்றும் செய்யாதா என்ன, இதுதான் சாக்கு என்று இது போதாது என்று பொங்கலும் பாயாசமும்
ஒரு பிடி பிடிக்கிறார்களே, சாமி என்ன, அருளோடு இன்சுலினையும் சேர்த்தா அனுப்புகிறது
?
சரி இப்போது வாகனத்துக்கு வருவோம்.
‘ என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க
எருது ஏறி ஏழையுடனே . . ‘
என்று திருஞான சம்பந்தர் பாடுவதில் இருந்து தெரிகிறது அவரை ஆட்கொள்ள இறைவன் வந்தது
எருதில் ஏறி என்று. சிவ பெருமான் வாகனம் ரிஷபம் என்பதற்கு எத்தனையோ பாடல்கள்.
சொன்னால் உங்களுக்குப் படிக்கப் பொறுமை இராது. எனவே இது போதும்.
குதிரை தமிழகத்திற்கு வந்தது அரபு நாடுகளில் இருந்து. துறைமுகங்களில் இருந்து
ஆயிரக்கணக்கான குதிரைகள் இறங்கின. எனவே குதிரை என்பது தமிழனின் வாகனம் ஆகிப் போனது.
மனிதனின் வாகனம் ஆகிவிட்டால் அடுத்து என்ன, ஆட்டோமேட்டிக்காக கடவுளும் உற்சவ
மூர்த்தியாகி குதிரைமேல் ஊர்வலம் ஆரம்பித்தார்.
பக்தர்களுக்கு ரிஷப வாகனம் ஏறிக் காட்டிஅளித்தவர் குதிரை ஏறி வர ஆரம்பித்தார்.
இங்கே ஒன்று. நான் ஒன்றும் திருவிழாவில் நடக்கும் காட்சிகளைச் சொல்ல வில்லை.
நிசமாகவே ஒருசிலர்க்குக் கிடைத்த தரிசனத்தைச் சொல்கிறேன்.
‘பெற்றி பிறர்கரிய பெம்மான் பெருந்துறையான்
கொற்றக் குதிரையின் மேல் வந்தென்னைக் கோதாட்டி. . ‘
என்று உருகுகிறார் மணிவாசகர்.
மாணிக்க வாசகர் காலத்தில் மனிதனின் புதிய வாகனம் குதிரை. எனவே அவருக்கு அவன்
குதிரையேறி அவருக்குக் காட்சி கொடுக்கிறான். ஆங்கிலேயன் காலத்தில் மனிதனின் வாகனமாக
இருந்தது சாரட்டு வண்டி. எனவேதான் வள்ளல்பிரான் இராமலிங்க சுவாமிக்கு,
‘ இரு பரி மா ஈர்க்கும் ஒருதிருத் தேர் ஊர்ந்து .... ‘
ஆட்கொள்ள வருகிறான். ஆமாம் வள்ளலாருக்கு இறைவன் இரண்டு குதிரைகள் பூட்டிய சாரட்டு
வண்டியில் வந்து, ‘ வருதி . . . ! ‘ என அழைத்தானாம்.
அது எப்படி ? எப்படி என்றால், இறைவன் முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழம்
பொருள்தான். ஆனால் பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியன் அல்லவா,
காலத்துக்கேற்பத் தன்னையும் மாற்றிக் கொண்டே இருப்பான்.
நான் இதுபற்றிப் பேசிக் கொண்டிருந்த போது கேலியாகக் கேட்டான் ஒருவன்.
‘வாகனம் இப்போது இன்னும் மாறி விட்டதே உங்கள் கடவுள் ஆட்டோவில் அதிவேகமாக வருவாரா
?’
வருவாரடா வருவார். ஆட்டோவிலும் வருவார். அதிவேகமாக
150cc டூ வீலரிலும் கூடப் பறந்தோடி வருவார். இப்போதெல்லாம் எத்தனை எத்தனை விதம்
விதமான டூ வீலர்கள், கம்பெனிக்குக் கம்பெனிக்கு எத்தனை போட்டிகள் ?
Discover DTS, Victor Plus, Splendor Plus, Passion Plus என்று எத்தனை இரகங்கள்.
தான் சொன்னதைக் குழந்தை மழலையாகச் சொன்னால் தந்தை கோபித்துக் கொள்வாரா என்ன ?
மணிவாசகர் ஒன்றும் கோபித்துக் கொள்ள மாட்டார் என்ற செல்லத்தில் உரிமையில் மாற்றிப்
பாடுகிறேன்.
‘ தேசன் சிவலோகன்
தில்லைச்சிற் றம்பலத்தன்
Passion plus ஏறி வரும்
பெம்மான் பெருந்துறையான்
ஆசையுடன் வந்தென்னை
ஆட்கொள்வான் . . . ‘
என்றெல்லாம் பாடித்தான் பாருங்களேன்.
-MAGUDADHEEBAN 9486 02034
சிந்தனைகள்
- 1 .ஆகா பாடலாம்
- 2. மெல்லத் தமிழ் - 1
- 3. மெல்லத் தமிழ் - 2
- 4. மெல்லத் தமிழ் - 3
- 5. பொற் கொடி
- 6. முக்திப் பால்
- 7. உலகப் பொது மறை
- 8. கோணல் பார்வை
- 9. மனோ சக்தி
- 10.முப் பால்
- 11.நான் யார்?
- 12.நியூஸ்
- 13.பண்-பாடு
- 14.பிப்ரவரி-14
- 15.ஐந்தாம் தமிழ்
- 16.திட்டு
- 17.இயற்கை
- 18.ஏன் மறந்தோம்
- 19. குறளில் ஏழு
- 20. பிறந்தநாள்
- 21. வையுங்கள்
- 22. கவிதை
- 23. பெரிது பெரிது
- 24. ஐந்தாம் தமிழ்
- 25 .நடராசர்
- 26. கழுதை
- 27. பேசன் ப்ளஸ்
- 28. முட்டை
- 29. முதுகு தரிசனம்
- 30. பெரிது பெரிது
- 31. 50 ரூபாய்
- 32. நாதம்
- 33. மாடக்குழி
- 34. அபிராமி கோவில்
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .