ப ண் - பா டு
இரயிலில் நீண்ட தூரப் பயணம் என்பது முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே ஜாலியான
விஷயம். நான் கீழ் தட்டுப் படுக்கைக்கு விருப்பம் தெரிவித்தாலும் எனக்குக்
கிடைப்பது என்னவோ உச்சிப் படுக்கைதான்.
சில சமயம் அபூர்வமாகக் கீழ்ப்படுக்கை கிடைப்பதுண்டு. அப்படிக் கிடைத்தாலும் பயணம்
செய்யும் போது பக்கத்துப் பயணியோடு நிச்சயமாக ஒரு வயதான தாயார் அவசியம் வருவார்
அல்லது ஒரு குண்டான மனைவி வருவார். அப்புறம் என்ன, விட்டுக் கொடுத்தல்தான் என்
இலட்சியம் ஆயிற்றே.
கீழ் பெர்த்துக்கும் எனக்கும் எப்பவுமே இராசி இல்லை. யாரும் விரும்பாத மேல் பெர்த்
எப்பவும் எனக்கு சாஸ்-வதம். அதில் தூங்கத் தனிப் பயிற்சி எடுக்க வேண்டும். நீங்கள்
சிறுவயதில் சிற்றூர்ப் புறங்களிலே பிறந்திருந்தால் உங்கள் ஊரில் சுண்ணாம்புக்
காளவாய் பார்த்திருப்பீர்கள். இப்போது உள்ள பசங்களுக்குத்தான் இது தெரியவில்லை.
செம் டிஸடம்பர் எமல்ஸன் என வந்து விட்டதால் யார் சுண்ணாம்பு அடிக்கிறார்கள் ?
அந்தச் சுண்ணாம்புக் காளவாய்க்குள் உட்கார்ந்து பார்த்தால் எப்படி வேகுமோ அப்படி
வேகும் அந்த மேல் பெர்த். காற்றாடி போட்டாலும் காற்று நமக்கு வராமல் கீழ்
படுக்கைக்கு ஏக போகமாய்ப் போகும். அப்போது பார்த்து கீழே சக பயணியின் தாயாருக்குக்
குளிர் எடுக்கும். உடனே அவர் பேனை ஆப் செய்ய நமக்கு வெளிக் காட்ட முடியாத கோபம் ஆன்
ஆகும். சிவனே என்று படுக்கலாம் என்றால் கக்கூஸ் போகும் இன்னொரு பயணியின் தலையில்
என் கால் இடிக்கும். அப்புறம் அர்ச்சனைதான்.
சிவனே என்று படுத்தேன் என்றேனே தேவைதான். சரி உடகாரலாம் என்றால் தலை இடிக்கும்.
அடிமைப் பெண் எம்ஜியாரை விட மோசம் போங்கள். தூங்க யத்தனித்தால் கொசுப்படை அப்பும்.
ஓங்காரமிடும். சிவன்-சுண்ணாம்புக் காளவாய்- ஓங்காரம்—வெப்பு—என வரிசையாக யோசிக்கும்
போது அடுத்த பொருத்தமான வார்த்தை எது என்று நீங்கள் யூகித்திருந்தால் பக்தி
இலக்கியத்தில் நீங்கள் பாஸ்.
அந்த அடுத்த வார்த்தை திருநாவுக்கரசர். மகேந்திர வர்ம பல்லவன் சமணர்களில் போதனையால்
திருநாவுக்கரசரை இப்படித்தால் சுண்ணாம்புக் காளவாயிலிலே வேகும்படி நீற்றினான்.
நாவுக்கரசருக்கு வெப்பம் தாக்கவில்லை. அவர் சிவனே என்றார். திரு வடி நீழலாய்
குளிர்ந்தது காளவாய்.
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டுறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணை அடி நீழலே
நானும் மேல் பெர்த்தின் வெப்பம் தாளாமல் மாசில் வீணையும் பாடிப் பார்த்தேன். வேர்வை
கொட்டியது கீழே . சக பயணி கீழே எதுவும் தப்பாக நினைக்காமல் இருக்க வேண்டும் கடவுளே.
படுத்துக் கொண்டிருக்கும் போது கற்பனை சிறகடிக்கும் எனக்கு. அன்றும் அடித்தது.
எனக்கு அப்போதுதான் புரிந்தது இந்த மேல் பெர்த்துக்கு ஏன் அப்பர் பெர்த் என்று
பெயர் வைத்திருக்கிறார்கள் என்று. இந்தக் கடைசிவரி உங்களுக்கு விளங்கிக் கொள்ள
ஏலவில்லை என்றால் பக்தி இலக்கியத்தில் நீங்கள் பெயில்.
பெயிலாகி அரியர்ஸ் வைத்திருப்பவர்கள் மேலே படிக்கலாம், கடைசி வரி என்னவென்று
விளங்கிக் கொள்ள. நேற்று ஞாயிற்றுக் கிழமை சன் தெலைக் காட்சியில் இரம்யாக்கி
(இராமகிருஷ்ணனை இராம்கி என்று சொல்லும் போது . . . ) தத்த தத்தத் தங்க வேட்டை.
மேசையில் கோப்பை நிறையத் தங்க நாணயங்களுடன் நடுவே இரம்யாக்கி. இருபுறமும்
போட்டியாளர்கள்.
இரம்யாக்கி கேட்டார். ‘ அப்பர் என்பது யாருடைய பேர் ? ‘
A) திரு ஞான சம்பந்தர்
B) திரு நாவுக் கரசர்
C) சுந்தரர்
D) மாணிக்க வாசகர்
முதற் போட்டியாளர் ஒரு நடுத்தர வயது பெண். அவருக்கு விடை தெரியவில்லை என்றாலும்
விடையைக் கேள்வி போலச் சொன்னார்.
‘ மாணிக்க வாசகர் . . ?’
இந்தப் பதிலைத் தப்பாகச் சொன்னவர் முதற் போட்டியாளர். ஒரு முஸ்லீம் பெண்மணி. எனவே
என்னதான் தப்பாகச் சொன்னாலும் பரவாயில்லை. ஆனால் இரண்டாவது போட்டியாளர் முறை வந்த
போது, அவர் ,
‘ சுந்தரர்ர்ர்ர்.... என இழுக்க நொந்தேன். அப்பருக்கு அன்று வந்த காளவாய்,
ஆனைக்கால் அடி, கடலில் ஆழ்த்தல் முதலிய எல்லாச் சோதனைகளையும் விட இன்றுதான் நிசமான
சோதனை.
இரண்டாவது போட்டியாளர் ஒரு இந்து. அதைவிடப் பணி ஓய்வு பெற்ற நரைத்த தலை. அதுதான்
எனக்குப் பொறுக்க முடியவில்லை. சின்னப் பையன்கள் என்றால் இந்தக்கால ப்
பாடத்திட்டங்களின் சாபக்கேடாய் தெரியாதிருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் எனக்கும் மூத்த
ஒரு தலைமுறை திணறியது எனக்கு சாடும் கோபத்தை உண்டு பண்ணியது. அதெப்படித் தெரியாது
போகலாம். நாலில் ஒன்றைத் தெரிந்தெடுக்கச் சொன்னதால் சுந்தர ர்ர்ர்ர்ர். வெறுமனே
கேட்டிருந்தால் UPPER என்று ஸபெல்லிங் சொல்லியிருப்பார்.
‘ ஒரு இனத்தை முழுவதுமாக அழிக்க வேண்டும் என்றால் முதலில் அதன் மொழியை அழி.
அப்புறம் அதன் பண்பாட்டை அழி ! ‘
சொன்னவன் எவன். ? அவன் வாய்க்குள் போட ஒருகிலோ சர்க்கரை
அடுத்தமாதம் கூடவே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதுதானே இப்போது நம் நாட்டில்
நடந்து கொண்டிருக்கிறது. எது எது தெரியவேண்டுமோ அது தெரியவில்லை. தெரியக்கூடாதது
எல்லாம் நிறையவே.
இளைய தலைமுறைக்கு இதெல்லாம் தெரியவில்லையே என்று நான் நிச்சயம் கவலைப் படப்
போவதில்லை. படுவது என் வேலையும் இல்லை. என் கவலை எல்லாம் இந்த மூமூத்த தலைமுறை
இப்படித் திரிகிறதே என்றுதான். யார் இவர்கள் ? பிறருக்குச் சொல்லித்தர
வேண்டியவர்கள். பாதை காட்ட வேண்டியவர்கள். கண்களைக் கட்டிக் கொண்டு அலைகிறார்கள்.
இன்னும் இரண்டு வருடத்தில் பணி ஓய்வு பெறப் போகும் அன்பர் என்னிடம் பேசிக்
கொண்டிருந்தார். எப்பப் பார்த்தாலும் தன் பேரனைப் பற்றியே பீற்றிக் கொண்டிருப்பார்.
‘ என் பேரன் சார், - அப்படிப் போடு போடு போடு தன்னாலே—என்று பாடினாத்தான்
தூங்கறான். இதுக்காவே ஒரு விஜய் ஹிட்ஸ் வாங்கி வைத்து இருக்கேன் ‘
செல்லப் பேரன் இந்தப் பாட்டுத்தான் போடு என்று கேட்டானாக்கும். அவன் இன்னும் பேசவே
ஆரம்பிக்கவில்லை, இவர் மகள் பேரனைச் சுமந்த போதே இந்தப் பாட்டை ஓயாமல்
கேட்டிருப்பாள். பாத்திரம் கழுவும் போது கூட—அப்படிப் போடு போடு—என்று
போட்டிருப்பள். அதனால்தான் பேரனையும் ஒருநாள் நட்சத்திரம் பார்த்துப் பூமியிலே
போட்டுவிட்டாள்.
அப்புறம் என்ன, குழந்தைக்குத் தாலாட்ட தொலைக்காட்சித் தாயார். ( கடைசி வார்த்தை
முதல் எழுத்தின் காலை எடுத்து வாசிக்கவும்.) சீராட்ட வீடியோச் செவிலி. அதனால்தான்
போடு போடு என்கிறான் பையன்.
என்ன செய்யலாம் ? பையன் கருவில் திரு உருவாக இருக்கும் போதே திருவாசகம், நா.தி.பி.
படிக்கலாம். நல்ல தமிழ் பண்ணோடு தேவாரம் கேட்கலாம். அடுத்தகட்டம். குழந்தை
பிறந்தவுடன் தாலாட்ட வேண்டுமானால் நம் இனிய தமிழ் பாடல்கள் எத்தனை உள்ளன
இலக்கியங்களில் அவற்றைப் பாடலாம் என்று சோன்னால் கேட்டுச் சிரித்தார் ஒருவர்.
‘ சார் எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள் ‘ இது வேகமான யுகம் அவசரமாயமான காலம். நம்
பழந் தமிழ்ப் பாடல்களுக்கு எல்லாம் வேகம் பத்தாது. இதற்கு இப்போதைய சினிமாப்
பாடல்கள்தான் சரிப் பட்டு வரும் ‘என்றார். இதற்கு எல்லோரும் ஒத்துக் கொள்ளும்
படியான காரணம் ஒன்றையும் சொன்னார்.
அந்தக் காலத் தூளி, தொட்டில் வடிவமைப்பு மிக எளிமை. ஒரு கயிறு ஒரு கிளை அல்லது
கொக்கி. ஒருசீலை. அவ்வளவே. தொட்டலின் உயரத்தின்குத் தக்கவாறு பக்கவாட்டில்
ஆட்டலாம். ஆட்டலாம் என்ன, பக்க வாட்டில்தான் தொட்டில் ஆடும். ஆங்கிலத்தில் இதை TO
and FRO motion என்று சொல்வார்கள். ஆனால் காலம் நவீனமாகி விட்டது. இப்போது தூளி
வடிவமைப்பு மாறி விட்டது. பெட்டி போல வந்துவிட்டது. மேலே என்றால் ஒரு ஸ்பிரிங்க்
வேறு மாட்டிக் கொள்கிறார்கள். அன்பர் என்னிடம் இதைத்தான் சொன்னார்.
‘ சார் உங்கள் பழம் பாடல் களிலே விரைவு இல்லை. இந்தக் காலத்து சினிமாப் பாடல்கள்க்
கேளுங்கள். எவ்வளவு வேகமான இசை, அதுதான் தாலட்டச் சரி ‘ என்றார்.
சரியாய்ப் போச்சு போங்கள். எனக்கு என்ன சொல்லி இவருக்குப் புரிய வைக்க என்றே
தெரியவில்லை. புதிய தூளிகள் அதிவேகமாக மேலும், கீழும் குதித்து ஆடும் என்பது
உண்மைதான். அதற்கு அப்படிப் போடு போடு—முதலிய பாட்டுகள் இசைவாக உள்ளன என்தும்
மறுக்க இயலாத உண்மைதான். ஒன்றை மறந்து விடக்கூடாது. இந்தத் தூளிகள் மேலும் கீழும்
மட்டுமல்ல, பக்க வாட்டிலும் ஆடும் . எனவே அதற்குத் தகுந்த பாட்டும் படிக்கலாம்.
‘ மாணிக்கம் கட்டி
வயிரம் இடை கட்டி
ஆணிப்பொன் னால்செய்த
வண்ணச் சிறு தொட்டில்
பேணி யுனக்குப்
பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ . . .
வையம் அளந்தானே. . .’
என்று தொடங்கி பத்துப் பாட்டையும் படித்துத் தாலாட்ட நீங்கள் ஒன்றும் பெரியாழ்வாராக
இருந்தால் மட்டுமே முடியும் என்று சொன்னால் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
உங்களுக்குத் தெரியவில்லை. அவ்வளவுதான். ஆண்டாள் கோதைக்கு இப்பாக்கியம்
தந்தைவாயிலாக்க் கிட்டியது.
இப்படித் தாலாட்டிப் பாடும் தமிழ்க் குடும்பங்கள் இருந்தால் அவர்கள் உள்ள திசைக்கு
ஆயிரம் தெண்டனிட்டு வணங்கி மகிழ்வேன். பிறந்த குழந்தைகள் களிமண்கள். நீங்கள்
உருவாக்கும் வடிவமைப்புக்குக் காத்திருக்கின்றன். சாத்தானாகவும் உருவாக்கலாம்.
சரித்திர புருஷனாகவும் உருவாக்கலாம். இனி எல்லாம் உங்கள் கையில்.
இன்றையக் குழந்தைகள் கண்ணனாக உங்கள் வீட்டில் என்றுமே தவழ இயலும். நீங்கள்தான்
பெரியாழ்வாராகத் தயாராக இல்லை. தொலைக் காட்சியைப் பார்த்துக் கொண்டே தாலாட்டினால்
யசோதைக்கு எங்கே போவான் தொட்டிலில் படுத்துத் துயில் கொள்ளும் கண்ணன்?
இன்னொன்றையும் சொல்லவேண்டும். குதி குதி எனக் குதிக்க வைக்கும் வேகமான பாடல்கள்,
பழந் தமிழில் இல்லையாம், சொல்கிறார்கள். ஆர் சொன்னது? நீங்கள் படிக்க வில்லை
அவ்வளவே. எடுத்துக் காட்டாய் எத்தனையோ என்றாலும் இரண்டு மட்டும் இங்கே.
‘ பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப் பகல் வட்டத் திகிரியின் இரவாக
பத்தர்கிர தத்தைக் கடவிய
பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு இரட்சித் தருளுவ தொருநாளே . . .’
திருப்புகழ் பாடலின் ஒரு அடி மட்டுமே இது. வாய் விட்டுப் பாடிப் பாருங்கள். உள்ளே
உண்மையாகவே ஒரு புயல் இருக்கும். புயலின் கதிவேகம் இருக்கும். உங்கள் மாடர்ன்
தொட்டில் ஸ்பிரிங்க் இந்தப் பாடலின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் நிச்சயம்
திணறும். ஸ்பிரிங்க் செய்த கம்பெனிக்கு ஒரு ஷமேயில் அனுப்பிக் கூடவே இந்தப்
பாடலையும் ஒரு அட்டாச்மெண்ட்டாக அனுப்பி வடிவமைப்பை இன்னிம் அதிஅதி
விரைவாக்குங்கள். தாளாது.
இன்னொரு திருவாசகப் பாடல். பொருள் தெரிய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
வாய்விட்டுப் பாடிப் பாருங்கள். நியூட்டனின் முதல் விதியை நிரூபிக்கும்.
புரியாதவர்களுக்கு விளக்குகிறேன். பாடினால் நிறுத்த முடியால் சும்மா விடுவிடுவென்று
ஓடிக் கொண்டேஇருக்கும். எங்கே, சத்தம் போட்டுப் பாடுங்கள்.
‘ வான நாடரும் அறியொ ணாதநீ
மறைகள் ஈறுமுன் தொடரொ ணாதநீ
ஏனை நாடரும் தெரியொ ணாநீ
என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா
ஊனை நாடகம் ஆடுவித்தவா
உருகி யான்உனைப் பருக வைத்தவா
ஞான நாடகம் ஆடுவித்தவா . . .
வேண்டாம் கடைசி வரி சொல்லும் போதே மூச்சு முட்டுகிறது. மூச்சு விடாமல் பாடுவதற்கு
என்று ஏதாவதுஒருவகைப் பிராணாயாமம் பதஞ்சலி யோக சாத்திரத்தில் இருந்தால்
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
எனவே பண் பாடுங்கள். உங்கள் பண் பாடுகள் அழியாமல் இருக்கப் பண் பாடுங்கள். இந்தக்
கட்டுரையை நீங்கள் வாசிக்கும் இந்த நொடியில் -அப்படிப் போடு போடு போடு
தன்னாலே-ம(றை)றந்து போய் இருக்கலாம். கேட்தில்லையே இதை, என்ன சொல்கிறான் இவன் என
விழிக்கலாம் ஆனால் நான் சொன்ன மற்ற பாடல்கள் உங்களுக்கு வேண்டுமானால் புதிதாக
இருக்கலாம் ஆனால் வருங்காலத் தலைமுறைக்கு நிச்சயம் தெரிந்திருக்கும், நீங்கள்
படித்துக் கற்றுக் கொடுத்தால்.
வருங்கால உலகம் எங்கே என்றால் இனித் தைரியமாகக் கையை விரித்து இங்கே என்று
சொல்லுங்கள். நில்லுங்கள், எங்கே போகிறீர்கள், பிறக்கப் போகும் உங்கள் பேரனுக்குப்
பாடிக் காட்ட திருப் புகழ் வாங்கவா ?
வாழ்த்துக்களுடன்
மகுடதீபன் . . .
சிந்தனைகள்
- 1 .ஆகா பாடலாம்
- 2. மெல்லத் தமிழ் - 1
- 3. மெல்லத் தமிழ் - 2
- 4. மெல்லத் தமிழ் - 3
- 5. பொற் கொடி
- 6. முக்திப் பால்
- 7. உலகப் பொது மறை
- 8. கோணல் பார்வை
- 9. மனோ சக்தி
- 10.முப் பால்
- 11.நான் யார்?
- 12.நியூஸ்
- 13.பண்-பாடு
- 14.பிப்ரவரி-14
- 15.ஐந்தாம் தமிழ்
- 16.திட்டு
- 17.இயற்கை
- 18.ஏன் மறந்தோம்
- 19. குறளில் ஏழு
- 20. பிறந்தநாள்
- 21. வையுங்கள்
- 22. கவிதை
- 23. பெரிது பெரிது
- 24. ஐந்தாம் தமிழ்
- 25 .நடராசர்
- 26. கழுதை
- 27. பேசன் ப்ளஸ்
- 28. முட்டை
- 29. முதுகு தரிசனம்
- 30. பெரிது பெரிது
- 31. 50 ரூபாய்
- 32. நாதம்
- 33. மாடக்குழி
- 34. அபிராமி கோவில்
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .