நியூஸ்
இந்தப் பேப்பர்க்காரனுக்கு எப்பப் பார்த்தாலும் ஏதாவது உலகில் நடந்துகொண்டே
இருக்கவேண்டும். இல்லையேல் ஏதாவது ஒரு வேதாளம் சாபம் போட்டுவிடும், தலை
வெடித்துவிடும். சென்ஷேசன் சென்ஷேசன் இது அவசியம் இருக்கவேண்டும்.கொஞ்ச நாள்
வீரப்பன் அவன் கேசட் கடத்தல் இத்யாதி இத்யாதி,
அவனைச் அவனது சந்தனக் கோட்டை வரை சந்திந்து மீண்ட சிலரின் பிரதாபங்கள்,
சிறைஅடைப்புகள், அப்புறம் மாதாமாதம் ஏதாவது ஒரு குட்டிச் சாமியார் அல்லது குட்டி
வைத்திருந்த ஏதாவது ஒரு சாமியார் நிச்சயம் மாட்டுவார், அதுவும் இல்லை என்றால்
அந்தக்காலத்திலே சில அதிகாரிகளுக்கு இனிய தேவதைச்சொப்பனமாகவும் இப்போது சிம்ம
சொப்பனமாகவும் விளங்கும் ஏதோ ஒரு துஷ்ட லட்சுமி, கொஞ்ச நாளைக்குக் கஞ்சாக் கேஸில்
நஞ்சுபோன (பொண) ஒரு ஷெரிஜா பானு இப்படி இப்படி ஏதாவது சேதி கிடைத்துக் கொண்டேதான்
இருக்கிறது.
செய்திகளுக்குப் பஞ்சம் வரும் காலத்தில் த்ரிஷா இன்டர்நெட்டில் குளிப்பாள், நான்
இல்லை அது என அறிக்கை விடுவாள். விரிஞ்ச முக சினேகா தெரிஞ்சமுக நாக்ரவியை (விவ)
காரமாகப் பேசுவார். இப்படி எத்தனை எத்தனை செய்திகள். தங்கத் தமிழனுக்கு காலையில்
காப்பியோடு அவ்வளவையும் உள்ளே உறிஞ்ச வேண்டும். அப்பத்தான் அவனுக்கும் தலை
வெடிக்காது.
உலகம் உள்ளவரை மனிதர்கள் இருப்பார்கள். மனிதர்கள் உள்ளவரை செய்திகளும்
இருக்கும்.செய்திக்குப் பஞ்சம் வரும் போது எங்காவது பூகம்பம் வரும் புயல் வரும்
ஆழிப் பேரலைவரும். துக்கத்தைச் சொல்லுவதை விட அதை எப்படி ஆ ஊ என்று சொல்வது
என்பதிலேதான் பத்திரிகைக்கும், தொலைக்காட்சிக்கும் போட்டி.
சரி, எந்தச் சேதியும் இல்லை என்றால் . . ? அட இருக்கவே இருக்குது சானியாவின்
குட்டைப் பாவாடை. அவர் அதை எப்படிக் கட்டிக்கொண்டு, போட்டுக்கொண்டு ஆடுகிறாரோ
தெரியாது, ஆனால் அதைக் கட்டம் கட்டி கடைசிப் பக்கத்தில் போட்டே ஒருவாரம்
ஓட்டிவிடுவார்கள் நாளிதழை. அதுவும் இல்லை என்றால் மரியா ஷரபோவா குனியும் போது ஒரு
போட்டோ யாரும் எடுக்க மாட்டார்களா என்ன, போட்டுவிட்டால் போயிற்று..! சானியா சானியா
.. நாப்கின் விளம்பரத்தில் இருந்து கார் விளம்பரம் வரைக்கும் எல்லாவற்றிற்கும்
இவர்தான் தீனியா ? பாவம் மகேஷ் பூபதியும், பயஸும். அவர்களுக்கு பத்து நியூஸ்
என்றால், மகேஷ், உங்களுக்கு ஒன்றுதான், ஆடி என்ன (நி)யூஸ் ?
பக்கத்துவீட்டுப் பழனிச்சாமி பால்காவடி எடுத்தால் அது சேதியா?
தெருக்கோடிச் சின்னச்சாமி தீச் சட்டி எடுத்தால் அது நியூஸா? ஒரு விஜயகுமார்
எடுத்தால்தான் அது நியூஸ்.
கற்பைப் பற்றி வள்ளுவப் பெருமான் முதல் பாரதி வரை எல்லோரும்தான் சொன்னார்கள்,
யாராவது வாய் திறந்திருப்பார்களா? ஒரு குஷ்பு மேடம் சொல்லும் போதுதானே அது
செய்தியாகிறது? எத்தனை மறுப்புக்ள் எத்தனை ஆமாம்கள் ?
பொய் சொல்பவர்கள் எல்லாம் அவ்வையாரைப் பொறுத்தவரை கற்பிழந்தவர்களே. அவர் சொன்ன
இலக்கணப் படி பார்த்தால், இராம பிரான் ஒரு கற்புக் கரசன்,
‘ இந்தப் பிறவிக்கு இங்கு இரு மாதரைச்
சிந்தையாலும் தொடேன் . . . ‘
என்பதற்காகவா ? இல்லை, இராமனுக்கு ஒரு இல், ஒரு வில், ஒரு சொல் . . என்பார்களே
அதற்காகவா ?
‘ கற்பு எனப் படுவது சொல் திறம்பாமை ‘
சொன்னார் அவ்வையார். அவர் கண்ணோட்டப்படி பார்த்தால் அரிச்சந்திரனையும், இராமனையும்
தவிர எல்லோரும் ஒருவகையில் எதாவது ஒரு சூழ்நிலையில், தர்ம புத்திரன் உட்பட, பொய்
சொன்ன காரணத்தால் கற்பிழந்தவர்களே! ஆகா, எப்படிச் சொல்லப் போயிற்று எங்களைக்
கற்பிலிகள் என்று எல்லோரும் அவ்வையாருக்கு எதிராக யாராவது சண்டைக்குப் போனார்களா?
இலக்கியத்தில் இருந்து அவ்வையார் பாடல்களை நீக்குங்கள் என்று யாராவது கோஷம்
போட்டார்களா? அவ்வையார் தெரு என்று எங்குமே இருக்கக் கூடாது என்று எங்காவது தார்
பூசி அழித்தார்களா?
ஓ ! எங்கே போச்சு உங்களுக்குக் கோவில் கட்டிய அந்தக் காலம், குஷ்பு மேடம்? It was
Roses Roses All the Way . . அந்தக் காலம் எல்லாம் மாறிப் போச்சு. தமிழ் நாடு வந்து
தமிழ்ப் படம் பண்ணித் தமிழும் படித்து . . ம் ம் . . கொஞ்சம் திருக்குறளும்
படித்திருந்தால் வம்பு வந்திருக்காது.
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
குஷ்பு நியூஸ் கூட சூடு ஆறிப் போச்சு. வாசக அன்பர்களைச் சுண்டி இழுக்கிற மாதிரி
சேதிக்கா பஞ்சம். உங்கள் வீட்டில் யாராவது காணோம் என்றால்பேப்பரில் சேதியாக வருமா?
எப்படி வரும், நீங்களாக ஏதாவது காசு கொடுத்து விளம்பரம் செய்தால்தான் ஆயிற்று.
ஆனால் போன வாரம் பார்த்தேன் இரவீணா டாண்டன் வீட்டுச் செல்ல நாய் காணாமல் போய்
விட்டது என்று பேப்பரிலே செய்தி வந்திருந்தது, அதுவும் கட்டம் கட்டி. அந்தப் பக்கம்
கடைசி வரை வேறு செய்தி கிடைக்காமல் போய்இருக்கும் யாரும் எதுவும் விளம்பரம்
கொடுக்காமல் அந்த இடம் காலியாக இருந்திருக்கும் என்று அந்தப் பூர்வ ஜென்மப்
புண்ணியம் பண்ணிஇருந்த நாய் மேட்டர் போட்டுவிட்டார்களாக்கும் என்று சரியாகப்
படிக்காமல் விட்டுவிட்டேன்.
இன்றைக்குத்தான் (24-01-2006) தெரிந்தது, அதே பேப்பரில் ஒரு வாரம் கழித்து அதே
நியூஸின் தொடர்ச்சி. வரி விடாமல் படித்தேன். இரவீணா டாண்டன் சோகமாக இருந்தது,
இராம்போ என்ற அந்த நாய் ( சில்வர் ஸ்டாலோன், நல்ல வேளை ஆங்கிலப் பேப்பரில் இது
வந்நிருந்தால் கோபித்துக் கொண்டிருப்பார் ) கடற் கரையில் காணாமல் போனது, ஒரு
சிறுவன் பப்பி எனப் பெயர் வைத்து இன்னொருவரிடம் விற்றது, பப்பி என்று கூப்பிட அது
திரும்பாமல் இருந்தது, சந்தேகப் பட்டவர் இரவீணாவுக்குப் போன் போட, அப்புறம் . .?
அப்புறம் என்ன, பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ ? இன்று காலை இது போன்ற நிறைய
விஷயங்கள் படித்து என்பொது அறிவை வளர்த்துக் கொண்டேன்.
எங்கள் தெருவிலும் நிருபமா என்ற ஒரு பெட்டை நாய் இருந்தது. தெருவில் யாராவது
புதிதாக வந்தாற் போதும் சும்மா வாள் வாள் என்று கத்தித் தீர்த்துவிடும். கொஞ்ச
நாளாக சத்தம் இல்லை காணாமல் போய்விட்டது. நாலு நாள் கழித்துப் பக்கத்துக்
கொல்லையிலே ஒரே நாற்றம், செத்துக் கிடந்தது. யாரோ எதையோ வைத்துக் குத்தி
இருந்தார்கள். வாள் வாள் என்று கத்திக் காட்டிக் கொடுத்ததால் வாள் கொண்டு தாக்கி
விட்டார்களா பாவிகள் ? அந்த வீட்டுக்காரப் பையன் மதன் அதை நல்லடக்கம் செய்வித்தான்.
இவ்வளவு நடந்திருக்கிறது எங்கள் தெருவில், எந்த நிருபனாவது வந்து எங்கள்
நிருபமாவைப் பற்றி செய்தி போட்டார்களா, இல்லையே.
அரசியல்வாதிகள் சிலசமயம் ஒருவரை ஒருவர் நாயே என்று ஆக்ரோஷமாகத் திட்டிக் கொண்டாற்
கூட திட்டு வாங்கியவர் இனிக் கவலைப் படவேண்டாம். செத்தவுடன் சித்திரகுப்தனிடம்
கொஞ்சம் இலஞ்சம் கொடுத்தாற் போயிற்று, சாதா நாயாகப் பிறப்பதைவிட இரவீணா வீட்டு
இராம்போ நாயாய் பிறந்து பேப்பரில் பேர் வாங்கலாம்.
உலகம் மாறவே இல்லை. அன்று எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறது. 1973-ம் ஆண்டு
கல்லூரிப் படிப்பை முடித்த போது, நொந்து போய் எழுதினேன்.
‘ நறுக்கினார் ஆப்பிளை நடிகையே எனும் சேதி
நல்லதோர் செய்திஆகும்
நடிகையின் வீட்டிலே நாய் செத்த செய்திதான்
நாட்டுக்குத் துக்கம் ஆகும் . . !’
விக்கிரமாதித்தன் சிம்மாசனத்தில் எத்தனை படிகளோ அத்தனை ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
உலகம் மாறவே இல்லை. நான் சொன்ன உலகம்- உலகம் என்பது தமிழர் மாட்டே!
கவிதை என்பது எல்லாக் காலத்துக்கும் பொருந்த வேண்டும். அதுதான் காலம் கடந்த கவிதை
என்று எங்கோ படித்தேன். அட்டே, என் கவிதை இன்றும் பொருந்துகிறதே என்று சந்தோஷம்
எனக்கு.
கடைசியாக ஒன்று. இது மாதிரிச் செய்திகளைத்தான் தமிழர்கள் விரும்புகிறார்களா, இல்லை,
வேறு எதுவும் இல்லாததால் கிடைப்பதைப் படித்துத் தொலைக்கிறார்களா? தப்பு
படிப்பவர்மீதா, தருபவர்மீதா?
- மகுடதீபன் முகவை
சிந்தனைகள்
- 1 .ஆகா பாடலாம்
- 2. மெல்லத் தமிழ் - 1
- 3. மெல்லத் தமிழ் - 2
- 4. மெல்லத் தமிழ் - 3
- 5. பொற் கொடி
- 6. முக்திப் பால்
- 7. உலகப் பொது மறை
- 8. கோணல் பார்வை
- 9. மனோ சக்தி
- 10.முப் பால்
- 11.நான் யார்?
- 12.நியூஸ்
- 13.பண்-பாடு
- 14.பிப்ரவரி-14
- 15.ஐந்தாம் தமிழ்
- 16.திட்டு
- 17.இயற்கை
- 18.ஏன் மறந்தோம்
- 19. குறளில் ஏழு
- 20. பிறந்தநாள்
- 21. வையுங்கள்
- 22. கவிதை
- 23. பெரிது பெரிது
- 24. ஐந்தாம் தமிழ்
- 25 .நடராசர்
- 26. கழுதை
- 27. பேசன் ப்ளஸ்
- 28. முட்டை
- 29. முதுகு தரிசனம்
- 30. பெரிது பெரிது
- 31. 50 ரூபாய்
- 32. நாதம்
- 33. மாடக்குழி
- 34. அபிராமி கோவில்
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .