நீங்களும் வையுங்கள்
ரோட்டிலே நடந்து கொண்டிருந்தேன். மழைபெய்த தண்ணீர் கட்டிக்கிடந்தது. ஓரம்தான் சேன்றேன் என்றாலும், வேகமாக வந்த ஆட்டோ தண்ணீர்ச் சேற்றில் சளாக் என்று ஏறி வாரி இறைக்க, தவ்வி ஒதுங்கினேன் என்றாலும், என் சட்டை பேண்ட் எல்லாம் சேறு.
பக்கம் வந்த பெரியவர் கேட்டார்.
' என்ன தம்பி, அபிஷேகம் பண்ணிட்டுப் போயிட்டானா ஆட்டோக் காரன் ?'
நான் என் பேண்ட் சட்டை பாழானதற்கு வருத்தப் படவே இல்லை. நான் வருத்தப் பட்டது எல்லாம் அந்தப் பெரியவரின் வார்த்தைப் பிரயோகம் கண்டுதான். அது என்ன, வேறு வார்த்தை எதுவும் கிடைக்க வில்லையா என்ன. அபிஷேகம் ! கடவுளுக்குச் செய்யப் படும் நீராட்டு, மங்கல முழுக்காட்டு இந்த வார்த்தை, இப்படி அசிங்கமாகச் சேற்றைப் பூசிக் கொண்டது ஏன்?
மட்டுமா, இன்னும் எத்தனை எத்தனை வார்த்தைகள், எத்தனை எத்தனை ஆன்மீகச் சொற்கள் இப்படித் தவறான, அசிங்கமான, அருவருக்கத் தக்க பலபல பொருள்களில் பயன் படுகின்றன என்பதை எண்ணிப் பார்க்கையில் வேதனைதான் வருகிறது.
தீர்த்தங்கர ர்களின் பேரைச் சொன்னாலே பாவம் தீர்ந்துவிடும் என்கின்றனர் சமணர்கள். நம் சிவ பெம்மானுக்கே தீர்த்தன் என்ற பெயர் உண்டு.
' ஆர்த்த பிறவித் துயர்கெட நின்று ஆடும்
தீர்த்தன்'
என்று பாடுகிறது மணிவாசகம். பிறவிப் பாவத்தைத் தீர்ப்பதால் அவன் தீர்த்தன். பாவத்தை நீக்கும் தீர்த்தமான கங்கையை அணிந்தவன் என்பதாலும் அவன் தீர்த்தன். நமது பாரத பூமியிலே எத்தனையோ தீர்த்தங்கள் உள்ளன. தீர்த்த்தில் ஆடிய பின்புதான் மூர்த்தியை வணங்க வேண்டும் என்பது நமது சாத்திரம்.
அப்படிப் பட்ட தீர்த்தம் என்ற சொல்லை எப்படி எல்லாம் பயன் படுத்துகிறார்கள் என்று உங்களுக்கே தெரியும். Simple Harmonic Motion-ல் சாலையின் அகலத்தை அளந்த படியே நடக்கும் சில Citizenகளைச் சிலர்,
' என்னப்பா, தீர்த்தமாடி விட்டு வருகிறாயா?''
என்று கேட்கும் போது எனக்கு நெஞ்சு வலிக்கத்தான் செய்கிறது, இந்தப் பாழும் மக்களுக்கு இந்த ஆன்மீகச் சொற்கள் மட்டும் ஏன் இவ்வளவு இளப்பமாகப் போய் விட்டன என்று.
அத்தோடு நின்றதா, இன்னும் எத்தனையோ பட்டியலே இட முடியும் என்னால்.
மேலதிகாரியிடம் திட்டு வாங்கி விட்டு ' இன்று சரியான அர்ச்சனை' என்கிறார்கள்.
யாரிடமாவது ஏமாந்து போய்விட்டு, ' நாமத்தைச் சாத்தி விட்டுப் போய்விட்டான் பாவி' என்றும் சொல்கிறார்கள்.
அடுத்தவனை நன்றாக நையப் புடைத்து விட்டுச் 'செமப் பூசை போட்டேன் இன்றைக்கு ' என்று பெருமையாக வேறு சொல்லிக் கொள்கிறார்கள்.
ஆமாம் தெரியாமல்தான் கேட்கிறேன், இந்த திட்டு, ஏமாற்று, உதை எல்லா வற்றிற்கும் பொருள் முறையே அர்ச்சனை, நாம ம், பூசை என்று எவனய்யா கண்டு பிடித்தான், முதலில் அவனைக் கண்டு பிடித்துச் சொல்லுங்கள், அவனுக்கு நாலு பூசை போட வேண்டும்.
ஒரு காரியம் சரியாக அமையவில்லை, புஸ் வாணம் ஆகிவிட்டது இல்லை போட்ட பணத்தை எவனோ ஏப்பம் விட்டுவிட்டான் என்றால் நமது மக்கள் உடனே கேட்கும் வார்த்தை ' என்ன கோவிந்தாவா?'
வேறு வார்த்தை எதுவும் இல்லை என்கிறீர்களா, யார் சொன்னது, இருக்கவே இருக்கிறது அரோகராவா.
சில ஆசாமிகள் இருப்பார்கள். ஒருதடவை சொன்னால் பொறுக்க மாட்டார்கள்.திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். நை நை என நச்சரித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களை வர்ணிக்க வேண்டும் என்றால் எங்கள் மக்களுக்கு வார்த்தை, ஆன்மீக அகராதியில் இல்லாமலா போய்விடும்? இருக்கவே இருக்கிறது, நம நம. நல்ல வேளை தமிழில் இரட்டைக் கிளவி வந்து இத்தோடு இரண்டு போதும் எனகெ கட்டுப் பஆடு செய்த்தது. இல்லையேல் நம நம என ஆயிரத்து எட்டு போற்றிகள் சொல்லி இருப்பார்கள்.
நான் பிறந்த ஊர்ப் பக்கம் இன்னும் ஒரு வார்த்தைப் பிரயோகம் உண்டு. பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டால்,
' ஓம்கா போட்டுட்டானா' என்பார்கள்.
'சேர்ந்தாலும் சேர்ந்திருக்கான், சரியான சிவலிங்கமாகச் சேர்ந்திருக்கான் ' என்று ஒன்றுக்கும் உதவாத சோம்பேறியைத் திட்டும் போதும், 'அவன் நல்ல நாளிலேயே தில்லை நாயகம், இன்னிக்குக் கேட்கவா வேணும்?'
என்றெல்லாம் சொல்லும் போதும் மறைமுகமாக நீங்கள் யாரைத் திட்டுகிறீர்கள், எம் பெருமான் நடத்தரையனை அல்லவா?
'வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்த சென்னியும் தந்த இறைவனை'
ஏ, மக்கா, வாழ்த்த ஒன்றும் வேண்டாம், திட்டாமலாவது இருக்கலாமே!
இன்னொரு பழமொழி தொன்று தொட்டுத் தமிழ்நாடு பூரா வழங்கு கிறது.
'பிச்சை எடுத்தான் பெருமாளு, அதப் புடுங்குனான் அனுமாரு.'
சிவனாவது பிச்சை எடுத்தான். அவனுக்குப் பிச்சாடன ன் என்றே ஒரு பேரும் உண்டு. திரு மூர்த்தமும் உண்டு, ஆனால் பெருமாள் எங்கே பிட்சை எடுத்தான். மிஞ்சி மிஞ்சிப் போனால் கண்ணனாக அவதரித்த போது, கர்ணனிடம் கவசகுண்டலப் பிச்சையும் , செய்த தர்ம்ப் பிச்சையும் கேட்டிருப்பான், இல்லையேல் வாமனாக வந்திருந்து மாவலியிடம் மூன்றடி மண் கேட்டிருப்பான். அது சரி அதை எல்லாம் அனுமன் எப்போது பிடுங்கினான்?
இதைவிட இன்னொரு கொடுமை தெருவிலே கண்டேன். ஆந்திரா கோஷ்டி என நினைக்கிறேன், இராமர் தன் பின்னே இலக்குவன் சீதை தொடரத் உடல் பூரா குருவி நீலம் பூசி வீடு வீடாகப் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பின்னே வாயை உப்பலாக வைத்துக் கொண்டு அநுமார் தொடர்ந்தார். தெருவிலே பக்கிகள் கூட்டம் ஆர்ப்பரித்ததில் அன்றைக்கு ஹீரோ அநுமார்தான்.
சாயந்தர நேரம் காசைப் பிரிப்தில் ஏதோ தகராறு போல் இருக்கிறது, அனுமார் இராமனைத் தெலுங்கிலே ஏதோ திட்டியவாறு பையை இழுக்கப் பழமொழி இப்படித்தான் வந்த தோ?
ஆமாம் தெரியாமல்தான் கேட்கிறேன் , ஏசுநாதர் போல் இப்படி வேடம் போட்டு கையில் சிலுவை வைத்துக் கொண்டு யாரேனும் பிச்சை எடுக்க முடியுமா, இல்லை அதை யாரும் அனுமதிப்பார்களா?
இந்துக்களுக்கு இளப் பமாகத் தெரிவது இந்துமதக் கடவுள்கள்தான். இல்லை என்றால் இப்படிப் பொறுமையாக எல்லாவற்றையும் சகித்துக் கொண்டிருப்பார்களா?
போய்ச் சேர்ந்துவிட்டார் ஒரு தலைவர் அந்தக் காலத்தில் அவர் தேர்தலில் போட்டி இட்டபோது சுவரொட்டிகளில் அவர் முருக வேடம் தாங்க, தலைவி வள்ளி வேடம் பூண்டு ஒல்கி ஒசிந்து நிற்கத் தமிழ்நாடு என்ன அதற்குத் தடையா போட்டது, இசித்தல்லவா பார்த்தது? யார் கேட்டார்கள், யார் எதிர்த்தார்கள்? தேர்தலுக்கு முன்பு கேட்டிருந்தால் கட்சித் துரோகி, ஆட்சிக்கு வந்த பின்பு கேட்டிருந்தால் இராஜத் துரோகி, அவ்வளவுதானே!
திரைப் படங்களிலே சாதிப் பாத்திரங்களில் குழம்பினால் கொதித்து எழும் சமுதாயங்கள், சமயத்தை இழிவு செய்யும் போது மவுனிப்து ஏன்? ஒரு பதினைந்து வருடம் முன்பு என நினைக்கிறேன், குணா என்று ஒரு படம் வந்தது. பார்த்துத்தான் ஆக வேண்டும் என்பதற்காக அதை நான் பார்ர்க்கவில்லை என்றாலும், தொலைக் காட்சியில் சில சீன்களைக் காட்டிய போது மவுனமாய்ச் சீறினேன். வேறு என்னால் ஏதும் செய்ய முடியவில்லை.
படத்தால் தெய்வம் அந்த அளவுக்கு இழிவு படுத்தப் படுகிறது. எத்தனை தெய்விகப் பேரவைகள் , தெய்வ நெறிக் கழகங்கள், கட்டமைப்புகள் எதுவும் வாய் திறக்க வில்லை. குறைந்த பட்சம் செய்தித் தாளிலாவது ஏதாவது ஒரு வாசகர் குமுறுவார் எனப் பார்த்தால், அவருக்கும் பேனாவைத் தொட மனசில்லை போல் இருக்கிறத். ஒரு வேளை என்னைப் போல எல்லோரும் மவுனமாக மட்டும் சீறிக் கொண்டிருந்திருப்பார்கள் போலிருக்கிறது.
அப்படி என்ன அந்த சீன் என்று கேட்கிறீர்களா, வேறு ஒன்றுமில்லை. காதாநாயகன் கோவிலிலே வரிசையில் நிற்பார் இலட்டுப் பிரசாதம் வாங்க. கதா நாயகி பிரசாதம் தரும் சீன். பிண்ணணி இசையில் அபிராமி அந்தாதி ஒலிக்கிறது.
இடம் கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து
வடம் கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடம் கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல் அரவின்
படம் கொண்ட அல்குல் பனிமொழி வேதப் பரிபுரையே . . .
குணாப் படத்தில் அபிராமி அந்தாதி ஒலிக்கிறது பாராட்ட வேண்டியதுதான், ஆனால் 101 பாடல்களில் இதுதான் கிடைத்ததா? டைமிங் சொல்லி வைத்தாற்போல் பாடலின் இரண்டாம் அடியில் மூன்றாம் வார்த்தை வரும் போது, நாயகி சர் என ஒருசாய்த்துக் குனிய, காமிரா நெஞ்சை நோக்கிக் குவியும் போது, காட்சிமட்டும் தனியே நோக்கில் அசிங்கம் இலைதான், ஆனால் பாடலோடு சேர்த்தப் பார்க்கும் போது, நோகிறது மனசு.
நன்றாக நினைவிருக்கிறது எனக்கு. 1980. முதன்முதலாக சுஜாதா வரலாற்றுக் கதை ஒன்று எழுத ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார், குமுதத்தில். ஆங்கிலர் பாரத த்தை ஆக்கிரமித்து அரசாண்ட கால கட்டம். கதையின் நாயகியைப் பற்றி வர்ணிக்கும் போது நெஞ்சில் பூனைக்குட்டிகள் இரண்டு குதிக்கின்றன என்று எழுதி விட்டார், அவ்வளவுதான், கற்-பனைப் - பாத்திரம்தான் என்றாலும், கதாநாயகி ஒரு குறிப்பிட்ட இனம் சார்ந்த பெண் அல்லவா, கொதித்தது எழுந்தன சங்க அமைப்புகள், வெடித்துக் குமுறின சமுதாயச் சங்கங்கள்.
குமுதம் அலுவலகத்திற்கு மிரட்டல் கால்கள். அன்று பெட்டிக் கடை முதற் கொண்டு தொங்கிக் கிடந்த அத்தனை குமுதப் பத்திரிக்கைகளும் ஒட்டு மொத்தமாக வாங்கிக் கொள்முதல் செய்யப் பட்டு சென்னை வீதிகளில் கொட்டிக் குவிக்கப் பட்டு எரிக்கப் பட்டன. சுஜாதாவுக்கும் தொலைபேசி மிரட்டல். அரண்டு விட்டது அப்பாவிக் குமதம். நாலே வாரம் மட்டும் வந்திருந்த சுஜாதாவின் முதல் சரித்திரத் தொடர் நிறுத்தப்பட்டு, அப்புறம் ? அப்புறம் என்ன, இப்படி எல்லாம் கற்-பனைக் கதா நாயகியின் மானம் காத்தது அந்ச் சமூகம் என்பதுதான் சென்னையின் ஒரு வரலாற்றுப் பதிவு.
இப்போது என் ஆதங்கம் எல்லாம் என்ன, என்றால், அந்த ரோஷத்தில் கோடியில் ஒரு பங்கு கூட நம் ஆன்மீக வாதிகளுக்கு இல்லையே என்பது தான். ஒருவேளை அபிராமிக்கு பக்தர்களே இல்லையோ என்னவோ, அப்படியே இருந்தாலும் எல்லாம் 60-ம் கல்யாணம் மட்டும் அபிராமி கோவிலில் முடித்து விட்டு அக்கடா என்று சொரணையில்லாமல் இருப்போம் என்று எண்ணி விட்டார்கள் போல் இருக்கிறது. இவர்களுக்கு மட்டும் இல்லை இந்துக்கள் எல்லோருக்கும் சகிப்புத் தன்மை இருக்கும் அளவுக்குச் சொரணை இருப்பதில்லை, இருந்திருந்தால், நேற்றுக் கூட (14-3-2007), எங்கள் முகவை நகர் வண்டிக் காரத் தெருவிலே முனிசிபல் ஆபீஸ் முன்பு ஒரு மாப் பெரிய ப்ளெக்ஸ் பேனர் போர்ட், அதில் ஒரு அரசியல் புள்ளியின் அக்காமகன் இன்னமும் ரிலீஸ் ஆகாத சினிமாவின் நடிக்கும் பந்தாவோடு திருப்பதி திரு வேங்கடவன் வேடத்தில் சிரித்துக் கொண்டிருப்பாரா? இப்படி எல்லாம் நமது வெங்கடேசப் பெம்மானை அவதாரம் எடுக்க வைப்பது யார் என்றால் அவர்கள் நம்மவர்களே. இந்துக்களுக்கு இந்துக்களே எதிரிகள்.
ஜீசஸ் வேஷம் போட்டு இப்படி யாரும் விளம் பரம் செய்ய முடியுமா, முடிந்தால் சும்மா பார்த்துக் கொண்டிருக்குமா தேவ சபைகள் ? நம்மவர்க்கு மட்டும் ஏன் இல்லை இந்தச் சொரணை?
சர்வ சாதாரணமாகப் பார்க்கிறேன் நகரை வலம் வரும் போது, சிலருக்கு பிறந்த நாள் போஸ்டர். அடிப் பொடிகள் ( பாருங்கள் எனக்கும் கூட இப்படித் தவறான பிரயோகம் வந்து தொலைக்கிறது, என்ன செய்ய, நானும் தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் நாட்டில்தானே இருக்கிறேன் ?) சும்மா இருப்பார்களா, குதிரைகள் பூட்டிய இரதத்தில் கிருஸஷ்ணனுக்கும், அர்ச்சுன்னுக்கும் பதிலாகத் தங்கள் தலைவரையும், தங்கள் தலைவர் மகனையும் ப்ளக்ஸ் பேனரில் சூப்பர் இம்போஸ் செய்து கண்டு களிப்பார்கள். தலைவர் இதைப் பார்த்தால் களிப்பாரோ என்னவோ, ஏன் என்றால் அவருக்குத்தான், குங்கும ம் வைத்த தொண்டர்களை,
' என்ன இரத்தம், குண்டுக் காயமா, நெற்றியில் ?' என்றெல்லாம் விசாரிக்கவே நேரம் சரியாய் இருக்குமே.
தெய்வங்களை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டலாம், பேசலாம், ஏசலாம். தெய்வங்களுக்குக் கோபம் வர்ரே வராது. கடவுளைத் தூற்றிச் சாடிய பேர்எல்லாம் நன்றாக இருந்திருக்கிறார்கள். கடவுள் அவர்களைத் தண்டிப்பதில்லை. இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பதோ, இதற்காக அவர்களை எண்ணெய் கொப்பரையில் ஆழ்த்துவதோ கடவுளுக்கு வேலையும் இல்லை. மாறாக்க் கடவுள் அவர்களை என்ன செய்கிறார். நன்றாக வாழ வைக்கிறார். சகல சௌபாக்கியமும், ஆள் அம்பு, சேனை, பதவி, ஏற்றம் அத்துணையும் தந்து வாழ வைக்கிறார். ஏன் என்றால் அதுதான் கடவுன். ஏன் என்றால் அவர்,
வல்லாலார்க்கும் மாட்டார்க்கும வரம் அளிக்கும் வரம்
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதி
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடு
நர ர்களுக்கும் சுர்ர்களுக்கும் நலம் கொடுக்கும் நலம்
அவருக்குச் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் இட்டுச் சென்ற பேரைஎல்லாம் உயர்ந்த அந்தஸ்து கொடுத்து கோவில் வாசலில் , ந்ந்தி ஸ்தானமும், கருட ஸதானமும் தந்துதன்னைப் பார்த்துக் கொண்டே இருக்ககம்படி அல்லவா வைத்திருக்கிறார்.
்
சிந்தனைகள்
- 1 .ஆகா பாடலாம்
- 2. மெல்லத் தமிழ் - 1
- 3. மெல்லத் தமிழ் - 2
- 4. மெல்லத் தமிழ் - 3
- 5. பொற் கொடி
- 6. முக்திப் பால்
- 7. உலகப் பொது மறை
- 8. கோணல் பார்வை
- 9. மனோ சக்தி
- 10.முப் பால்
- 11.நான் யார்?
- 12.நியூஸ்
- 13.பண்-பாடு
- 14.பிப்ரவரி-14
- 15.ஐந்தாம் தமிழ்
- 16.திட்டு
- 17.இயற்கை
- 18.ஏன் மறந்தோம்
- 19. குறளில் ஏழு
- 20. பிறந்தநாள்
- 21. வையுங்கள்
- 22. கவிதை
- 23. பெரிது பெரிது
- 24. ஐந்தாம் தமிழ்
- 25 .நடராசர்
- 26. கழுதை
- 27. பேசன் ப்ளஸ்
- 28. முட்டை
- 29. முதுகு தரிசனம்
- 30. பெரிது பெரிது
- 31. 50 ரூபாய்
- 32. நாதம்
- 33. மாடக்குழி
- 34. அபிராமி கோவில்
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .