tamil pages of magudadheeban 
 

நான் யார்?

காலையில் சீக்கிரமே எழுந்து இன்று அலுவலகம் விரைந்தேன். இன்று குடியரசு நாள் (26-01-2006) கோடி ஏற்றி எங்கள் மக்களிடம் ஏதாவது சேதி சொல்லவேண்டும், சும்மா நறுக்கேன்று மனசிலே தைக்கிறாற் போல. உச்சிபுளியில் ஏறி முகவை அடையச் சரியாக முக்கால் மணிநேரம். ஒவ்வொரு நாளும் இந்த முக்கால் மணிப்போது முத்தான பொழுது. பஸ்ஸில் நிம்மதியாக உட்கார்ந்து சிந்தனை செய்ய அருமையான நேரம்.



டூ வீலரில் போகும் போது இப்படிச்சிந்திக்க முடியாது. சிந்தனை சிறகடிக்குமுன் உடலுக்குள் இருக்கும் வேறு எதாவது வான் நோக்கி சிறகடித்துவிடக் கூடாதல்லவா, எனவே பஸ்தான் ரெம்பச் சௌகரியம். வண்டி ஓட்டும் மொறுப்பு இங்கே நம்மது இல்லை. எல்லாவற்றையும் ஓட்டுனர் பார்த்துக் கொள்வார். நாம் ஹாய்யாக சிந்திக்கலாம்.

வாழ்க்கையின் எல்லாப் பொறுப்பையும் இப்படித்தான் அவன் பார்த்துக் கொள்வான் என விட்டுப் பாருங்கள். எவ்வளவு ஆனந்தம் தெரியுமா? எனக்கும் அப்படித்தான். நடராசன் பார்த்துக் கொள்வான். அவன்தான் ஓட்டுனன்.

வண்டியை எங்கே கொண்டு போய்ச் சேர்ப்பிப்பது என்று அவனுக்குத் தெரியும். என் இலட்சியப் பாதை அவன் அறிவான். எனவேதான் அலட்டியமாக நான் செல்கிறேன்.. நான் அடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் அவனே தீர்மானிக்கிறான், பஸ்ஸில் சுகமாகத் தூங்கியவாறே செல்லும் பயணியைப் போல.

அது ஒரு அற்புதமான ஆனந்தம். எல்லாவற்றையும் இது என்னது இல்லை என்னது இல்லை என்று விட்டுவிடுங்கள், அந்த ஆனந்தம் புரியும். நிறையக் கவிஞர்கள் அப்படித்தான் இருந்தார்கள். பாரதியும் அவ்வாறே. வீட்டுக் கவலைக்குச் செல்லம்மா. வெளிவிவகாரக் கவலைக்கு குவளைக் கண்ணன். பாரதிக்கு என்ன, ஜம்மென்று ஒரே ஞான இரதம்தான். சத்திய லோகமும் போகலாம், சாயுச்சய லோகமும் போகலாம். அங்கு அவனை ஏதாவது ஒரு கந்தர்வி தின்பதற்காக அல்லாமல் தின்னப் படுவதற்காகவே அமைந்த தன் பற்களால் முத்தமிடுவாள். சவூதி அரேபியாவில் கண்ணுக்குக் கண் காதுக்குக் காது தண்டனையாமே. அதே போல் பாரதியும் தன் தண்டனையை நிறைவேற்றுவான். விளங்காதவர்கள் இந்தப் பத்தியைப் படித்த பின்னராவது பாரதியின் ‘ஞானரதம்’படிக்க க் கடவார்களாக.

எல்லாவற்றையும் பாத்ரூமில் கழற்றி விட்டு விட்டவனைப் பாருங்கள்,

எவ்வளவு சுதந்திரமாகப இருக்கிறான் என்று. அதனால்தான், அந்த ஆனந்தத்தில்தான் நிறையப்பேர் பாத்ரூமில் பாடுகிறார்கள். விட்டு விட்டதால் வந்த மனோநிலை இது.

நம்மது என்று இந்த உலகில் என்ன இருக்கிறது? நண்பர் இரகுவீர் தயாள் ( www.tripul.tripod.com) cmd ksifஒரு மின்அஞ்சல் அனுப்பி இருந்தார். அதில் இருந்த இணைப்பில் இருந்தது இந்தப்படம். படத்தைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியதை சொல்லுகிறேன்.

வேறு ஒன்றும் இல்லை படத்தில். இது நம் சூரிய குடும்பம் அவ்வளவுதான்.பெரிதாக இருப்பதுதான் நம் நட்சத்திர நாயகன் சூரியன். நம் பூமி எங்கே என்கிறீர்களா ? அடியிலே இத்துனூண்டு புள்ளியாக அம்புக் குறி இட்டுக் காட்டப் பட்டு உள்ளது. இடப்புறம் பெரிதாக இருப்பவை குருவும் சனியும்.

இவ்வளவுதானா நம்ம பூமி.? இந்த இத்தனூண்டு புள்ளியில்தான் நாம் ஆடாத ஆட்டம்எல்லாம் ஆடிக் கொண்டிருக்கிறோம். . விர் என்று சுழன்று கொண்டிருக்கும் பூமிப் பந்தின் பக்கவாட்டில் நாம் அப்பிக் கொண்டிருக்கிறோம்.

தென் அமெரிக்காவின் அடிப்பகுதியில் எவனோ தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறான். கிரீன் லாந்தின் வடபகுதியில் மட்டும் வேறு எவனோ நின்று கொண்டிருக்கிறான். ஒரு பொருள் வேகமாகச் சுழன்றால் வெளிப் பகுதியில் உள்ளவை வெளியே வீசப்படும் என்பதுதானே நியதி. எது நம்மை இப்படி ஒட்டவைத்துள்ளது.? கிறுகிறுஎன வட்டம் போட்டவாறே, சூரியனை ஒவ்வொரு ஆண்டும் சுற்றி வந்து, அண்ட வெளியில் சூரியனோடு எங்கே பயணிக்கிறோம்?

பூமி உருண்டை என்றான் புரூனோ. மேற்கத்திய நாட்டார் இதைக் கேட்டதும் என்ன செய்தார்கள் தெரியுமா, அவனைச் சிலுவையிலே அறைந்து, வேதாகமத்திற்றகு எதிராக எப்படிச் சொல்லப் போயிற்று என்று எரித்தார்கள்.

என்னை எரித்தாலும் பூமி சுற்றிக் கொண்டுதான் இருக்கும் என்று சொன்ன படியே உயிரை விட்டான் புரூனோ . கலிலியோவோ தன் கண்டு பிடிப்பை வெளியே சொல்லவே பயந்தான். புரூனோவுக்கு நேர்ந்த கதி தனக்கும் வந்து விடுமோ என அஞ்சிச் சாகும் வரை பூமி உருண்டை என்ற தன் கண்டு பிடிப்பை மறைத்தே வைத்திருந்தான்.

இந்த அறிவியல் அறிஞர்களின் காலம் 15 ம் . . 16 -ம் நூற்றாண்டு. ஆனால் நம்மவர்கள் பூமி உருண்டை என்று எப்போதோ சொல்லிவிட்டார்கள். குப்தர்கள் காலத்திலேயே ஆரிய பட்டர் வானவியலில் துல்லியமாகக் கணிப்புகள் கணித்திருந்தார்.

‘ உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்
ஓர்ந்து அளந்ததோர் பாஸ்கரன் மாட்டியும் . . . ‘

என்று பாரதி பாடுகிறானே, அந்த பாஸ்கராச்சாரியார் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? அட, தெரிந்து என்னதான் ஆகப் போகிறது என்று கேட்பவர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள். தெரிந்த ஒருசிலரையும் பழம் பஞ்சாங்கங்கள் என்று கூறி மூலையிலே உட்கார வைத்து விடுகிறார்கள். அவர்களும் எதையும் பேசமுடியாமல், சொல்லமுடியாமல் பாவமாய் உட்கார்ந்து விடுகாறார்கள். அவர்களைப் பற்றிக் கவலைப்பட இந்த உலகத்திற்கு எங்கே நேரம் ? அவர்கள் உயிரோடு இருக்கும் போதே பெற வேண்டியதைப் பெற வேண்டும் என்ற அக்கரை யார்க்கும் இல்லை.. பாவம் அவர்கள், அவர்களைப் பற்றிக் கவலைப் படுவது அவர்கள் வீட்டுக் கூரைக் கனைக்குரல் பல்லி மட்டுமே.. ச்சுச்..ச்சுச்.. ச்சுச்..

நண்பர் இரகுவீர் தயாள் கூட நேற்றுச் சொல்லிக் கொண்டிருந்தார், வேதாந்ந தேசிகரின் சமஸ்கிருதப் பாடலிலே கூடச் சில குறிப்புகள் வருகிறது என்று.

அவரின் காலமும் 13-ம் நூற்றாண்டு. எப்படித் தெரிந்தது எல்லார்க்கும் ?

இவ்வளவு எதற்கு, இன்றைக்கு ச் சற்றேறக் குறைய 1900 ஆண்டுகளுக்கு முன்பே மணிவாசகர் ரெம்பச் சர்வ சாதாரணமாகப் பாடுகிறார்.

‘ அண்டப் பகுதியில் உண்டை பிறக்கம்
அளப்பரும் தன்மை வளப்பரும் காட்டி
ஒன்றனுக்கு ஒன்று நின்னு எழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இல்நுழை கதிரின் துன்அணுப் புரைய . . . ‘

(திருஅண்டப் பகுதி)

மாணிக்க வாசகருக்கு அண்டப்பகுதி தெரிந்திருந்தது. அதில் உருண்டையான கோள்கள் பிறந்தது தெரிந்திருந்தது. அவைகளின்( milky way) எண்ணிக்கை 101 கோடிக்கு மேல் என்றும் தெரிந்திருந்தது. கூரை வீட்டில் மேற்கூரை ஓட்டை. அதில் வரும் கதிர் ஒளியில் தூசுக்கள் மின்னி மிதக்குமே அதுபோல் மிதக்கின்றனவாம் இந்த அண்ட உண்டைகள் என்றெல்லாம் அவருக்குத் தெரிந்திருந்தது. நமக்குத்தான்

மணிவாசகரையும் தெரியாது வேதாந்த தேசிகரையும் தெரியாது.

விரிந்து கொண்டே யிருக்கும் இந்தப் பிரபஞ்சம் வெள்ளையன் கண்டதாய் பீற்றிக் கொள்கிறான். அவர்கள் Milky Way பற்றிச் சொல்லுமின்னரே நம்மவன் ஆகாச கங்கை பற்றிச் சொல்லிச்சென்றுவிட்டான். அவர்கள் Universeஐப் பற்றி யோசிப்பதற்கு முன்பே நம்மவனுக்கு அண்டம் பற்றித் தெரிந்திருந்தது. அவர்களிக்குத் தெரிந்திருந்தது எல்லாம் ஒரே ஒரு யுனிவர்ஸ்தான்.

ஆனால் நம்மவர்களோ எத்தனையோ அண்டங்கள் பேரண்டங்கள் பற்றி புரியாத்து எல்லாம் சர்வ சாதாரணமாகப் பாடிச் சென்றிருக்கிறார்கள்.

அண்டம், வெளி, பரவெளி, பரம்பர வெளி, பராபர வெளி, பெரு வெளி, பெரும்சுக வெளி, சிருட்டி அண்டங்கள், காவல் அண்டங்கள் எனப் பலப்பலவாறாக வள்ளல்பிரான் தன் அருட்பெரும்சோதி அகவலிலே சொல்லிக் கொண்டே போவது என்கு விளங்கவில்லை. விளங்கியவர்கள் சொல்லட்டும். இல்லையேல் இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டு கழித்து விஞ்ஞானம் கண்டுபிடிக்கட்டும். பொறுமை உள்ளவர்களும் ஆர்வலர்களும் அகவலில் தேடிப் பாருங்கள். படியுங்கள்.

அத்தோடு அருட்பா ஆறாம் திருமுறையில்,

நல்லார்சொல் யோகாந்தப் பதிகள் பல கோடி
நாட்டியதோர் போதாந்தப் பதிகள் பல கோடி
வல்லார்சொல் கலாந்தநிலைப் பதிகள்பல கோடி
வழுத்தும்ஒரு நாதாந்தப் பதிகள் பல கோடி
இல்லார்ந்த வேதாந்தப் பதிகள் பல கோடி
இலங்கும்ஒரு சித்தாந்தப் பதிகள் பல கோடி

என்ற பாடலில் வரும் வானிலே உள்ள அந்தப் பதி வெளிகள் எல்லாம் எங்குஎங்கே உள்ளது என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. தெரியாவிட்டால் இராகேஷ் சர்மாவையாவது கேட்டுச் சொல்லுங்கள், ஏன் என்றால் அவர்தானே சொன்னார்,

வானிலே இருந்து பார்க்கிற போது அழகாகத் தெரிவது எது என்று.

( இந்த இந்திரா காந்தி அம்மையாரின் வினாவிற்கு இராகேஷ் சர்மா சொன்ன விடை.. . . சாரே ஜகாங் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா ஹமாரா . . )

இந்த மாப்பேரண்ட மகா வெளியில் எலக்ட்ரான் மைக்ராஸ்கோப்பில் பார்த்தால்கூடத் தெரியாத சிறு புள்ளி நான்.அப்படி இருந்து கொண்டு எத்தனை ஆட்டம் எத்தனை பாட்டம்.இந்தக் கூட்டத்தில் நான் யார் ?

பயப்படாதீர்கள், நான் ஒன்றும் (பாருங்களேன் திரும்பவும் நான்)
நான் யார் நான் யார் உடலா, மனமா, ஆத்மாவா, உயிரா என்றெல்லாம் கேள்வி கேட்டு உயிரை எடுக்கப் போவதில்லை. மிண்டா வாதம், மாயாவாதம் பேசி அறுக்கப் போவதில்லை. சங்கர தத்துவம் பற்றி அத்துவித விளக்கமும் சொல்லப் போவதில்லை. என்றாலும் நான் யார் ?

நான் இந்தியத் தொலைத் தொடர்பின் அரசு அங்கமான BSNL-ல்
ஒரு துணைக் கோட்டப் பொறியாளன். எனக்குக் கீழே இரண்டு இளநிலைப் பொறியாளர்கள், எத்தனையோ டெக்னீசியன்கள், டெலி போன் மெக்கானிக் பட்டாளங்கள், ஆகா எத்தனை பேர்கள் எத்தனை உயர்ந்த பதவி. உள்ளே நுழைந்தால் எழுந்து நிற்கிறார்கள் சார் சார் என்று சொல்கிறார்கள் வணங்குகிறார்கள் என்று பார்க்கும் போது இந்த நான் என் தலைக்கு ஓர் அடிக்கு மேல் அகங்காரமாக ஏறி உட்கார்ந்து ஆர்ப்பாட்டம் பண்ணுகிறது. இவ்வளவு மரியாதையும் எந்த நானுக்கு ? நிஜமாலுமே எனக்கா என் பதவிக்கா.

என்னைப் பொறுத்த வரை இது வேஷம். BSNL என்ற நாடகத் தர்பாரில் எனக்குக் கொடுக்கப் பட்ட ஒரு சிறு வேஷம். இராஜா வேஷம் போட்டவனுக்கு நாடகம் முடியும் வரைதான் மரியாதை. வெளியே நடுரோட்டில் நடக்கும் போது இராஜா என்ற கர்வத்தோடு பட்டாக் கத்தி எடுத்து—யார்அங்கே இந்த இரதத்தைத் திருப்புங்கள்- என மீசை முறுக்கினால், கிறுக்கன் என்பார்கள்; உள்ளே போட்டுவிடுவார்கள். இதுதானே நிஜம். கட்டியிருக்கும் வேஷம் பொய்.

வழி எல்லாம் வணக்கங்கள். பார்த்தால் ‘ என்ன கவிஞரே நலமா ?’

என்கிறார்கள். ஆகா, நான் யார், ஒரு கவிஞனாக்கும்.!

கர்வத்தோடு பஸ் ஏறச் சென்றேன். ஓட்டுநர் எடுத்துவிட்டார். நடத்துநர் கத்தினார்.

‘ பொறுப்பா, டிக்கட் வருது . . !’

அவ்வளவுதானா நான்? சார் ஆக இருந்தவன் , கவிஞனாக இருந்தவன், கடைசியில் வெறும் ஒரு இஞ்ச் டிக்கட் ஆகிப் போனேன். கையிலே சாமான் மூடை இருந்ததால் பஸ்ஸை விட்டு இறங்கியதும் ஆட்டோவைக் கை தட்டினேன். பக்கத்து ஆள் டிரைவர் நின்ற இடம் நோக்கிக் கூவினான்.

‘ டேய், கிராக்கி வரும் போது எங்கடா போய்ட்டீங்க ?’

போச்சுடா சாமி. டிக்கட் ஆகிப் படபடத்துக் கொண்டிருந்தவன் கிராக்கி ஆகிப் போனேன். சாரில் இருந்து, கவிஞனாகி டிக்கட்.. டிக்கட்டில் இருந்து கிராக்கி.

கையில் அடிபட்டிருந்தது அன்று. நர்சிங்ஹோம் சென்றால் அங்கே ஒரு செவிலி,

‘ டீ, கேஸ் வந்துருக்கு, அட்டெண்ட் பண்ணேன் . . ‘

சார்-டிக்கட்-கிராக்கி- கடைசியில் கேஸ்- வெறும் கேஸ்தானா நான் ? கடவுளே எனக்குத்தான் இந்தப் பூலோகத்தில் எத்தனே பேர்கள். இதில் யார்நான்.?

வேண்டாமடா சாமி, இந்த ரீதியில் கேட்டுக் கொண்டே போனால் ஏதாவது ஒரு துறவி வருவார். வந்து ஒரு பிடி சாம்பலை எடுப்பார். இதுதான் நீ என்பார்.

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாளொடு மந்தனம் கொண்டார்
இடப்பக்கப் புறம்எதிர் நோகுதே என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே. . .

(திரு மந்திரம்)



-மகுடதீபன் முகவை