tamil pages 0f magudadheeban 
 

எங்கள் தலைமை அலுவலகத்திலே நடந்து கொண்டிருந்தது ஒரு பார்ட்டி.

மாற்றுதலாகிச் செல்பவரை ஆகா ஓகோ எனப் புகழ்ந்து கொண்டிருந்தனர் அவரை கொஞ்ச காலம் முன் திட்டியவர்கள். இந்திரர்களும், சந்திரர்களும் என் ஒருகாதில் நுழைந்து மறுகாதின் வழியாகச் சென்று கொண்டிருந்தனர். கடவுள் இரண்டு காதுகளைப் படைத்ததே ஒன்றில் வாங்கி இன்னொன்றில் விடத்தானே. ஸ்.கா.கா. வந்தது. ( ஏன் SKC என்றால்தான் புரியுமா?)
கேக். என்ன ஸவீட் என்று கேக்காமல் வாங்கி த் தொலைத்து விட்டேன். எனக்குக் கேக் என்றால் கொஞ்சம் எற்றோ மற்று எற்றோ மற்று எற்று. புரியாதவர்கள் கொஞ்சம் அவ்வையார் படியுங்கள், இல்லை ஏதாவது ஒரு காவிய புதனில் அவ்வையார் படமாவது பாருங்கள். எனவே பக்கத்திலே இருந்த பெண்மணியிடம் கேக்கை நீட்டினேன்.
ஒன்று பேசாமல் வாங்க வேண்டும். ஆயிரம் கேள்விகள். ஏன் வேண்டாம், எதுக்கு வேண்டாம் என்ன காரணத்துக்கு வேண்டாம். இப்பத்தான் வேண்டாமா இல்லை முன்பிருந்தே அப்படியா—என்ற மாதிரியில் ஆயிரம் கேள்விகள். ஒரு கேள்வி கேட்கவே எம்பி எம்பி இலஞ்சம் வாங்கும் இந்தக் காலத்தில் இத்தனை கேள்விகள் தேவையா ?
‘கேக்கில் முட்டை போட்டிருப்பார்கள் . . ‘
‘ஏன் சார் சாப்பிடுறதுக்கு என்னவாம், நான்னேஏஏஏ சாப்பிடுகிறேன். . ! ‘
- அந்த பெண்மணி ஒரு வெஜிடேரியன்.
முட்டைதான் இப்போது சைவம் ஆயிற்றே எனச் சப்பைக் கட்டு விளக்கம் வேறு. சேவலின் சேர்க்கை இல்லாமல் வருகிறது. மஞ்சள் கரு இல்லை ( என்று சொல்கிறார்கள். நான் ஒன்றும் உடைத்துப் பார்த்தது இல்லை). ஊசி போட்டு வருகிறது. விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
ஆயிரம் கேள்விகளுக்கு ஆயிரம் விளக்கங்கள். என்னைச் சாப்பிடச் சொல்லியா, இல்லை, தான் சாப்பிடுவதை நியாயப் படுத்தியா தெரியவில்லை. எல்லா வற்றுக்கும் மேலாக ஜகத்குருவே சொல்லி விட்டாராம். ஜகத்குரு பாடே இப்போது திண்டாட்டமாக இருக்கும் போது அவர் பேச்சு ஒரு பொருட்டா என்று தோன்றுகிறது.
தன்னைச் சார்ந்த ஜகம் தன் வயிற்றுக்கு முட்ட சாப்பிடும் போது அதை நியாயப் படுத்த வேண்டும் என்று சொல்லியிருப்பாரோ என்னவோ? சைவமா இல்லை அசைவமா முட்ட, என்பதல்ல என் கேள்வி. எனக்கு உகந்தது இல்லை அவ்வளவுதானே தவிர சைவ அசைவப் பிரச்சினைக்கு நான் வர வில்லை.
சர்க்கரை வியாதிக்காரனுக்கு வேண்டுமானால் இன்சுலின் மருந்தாய் இருக்கலாம். அவன் இன்சுலின் ஏற்றிக் கொள்கிறான் என்று நான் ஏற்றிக் கொண்டால் அது தற்கொலை. ஒருத்தனுக்கு விஷம் இன்னொருத்தனுக்கு அமுதம். நான் அந்த ஒருத்தன் அவ்வளவே.
விளக்கம் கொடுத்தாலும் வினாக்கள் (வீணாக்கள்) விட்டபாடில்லை. எனவே மேலும் விளக்கம். விளக்கம் விளக்கத்திற்கு மட்டுமே. அல்லாமல் ஆத்திகர்தம் மனதைப் புண் படுத்தும் நோக்குடன் அல்ல.
சொன்னதையே மீண்டும் சொல்கிறேன். நான் சொல்வது உலகத்தார் எல்லார்க்கும் அல்ல ஏதோ ஒருவனுக்கு அவ்வளவே. அந்த ஒருவன் நீங்களாக இருக்கும் பட்சத்தில் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. என்னைப் பொறுத்த வரையில் சைவ அசைவப் பிரச்சினைக்குள் சிக்க விரும்பவில்லை.
என் விடை எல்லாம் இதுதான். என் அப்பனுக்கு உகந்தது எல்லாம் எனக்கு உகந்தது அவ்வளவுதான். இறைவனுக்கு உகந்தது மட்டுமே மனிதனுக்கு உகந்ததாக முடியும் என்பது என் வாதம். ஒன்றுமில்லை, தலைவர் ஒருவர் எங்கள் மாவட்டம் வரிவிருந்தார். அவர் வருமுன்பே இங்கே ஏற்பாடெல்லாம் ஏக தடபுடல். தலைவருக்கு என்ன என்ன பிடிக்கும் என்ன உணவு பிடிக்கும் என்று குழம்பிப் போய் ஒரு மினி ஹோட்டலே ரெடி. கடைசியில் அவர் கேட்டது வெறும் சுக்குமல்லிக் காப்பி. அவ்வளவு கொக்கோ கோலாக்கள், டொரினோக்கள், பேண்ட்டாக்கள் எல்லாம் சூடாகிப் போக அந்த மக்கள் தொடர்பு அதிகாரி அன்று சுக்குமல்லிக் காப்பி வரும் வரை சூடாகிப் போனார். தலைவருக்குப் பிடித்த வாறே அறைக்கு வண்ணம் தீட்டி தலைவருக்குப் பிடித்தவாறே கம்பளம் விரித்து தலைவருக்குப் பிடித்த கலரில் தொண்டர் படைச் சீர்உடை அணிந்து வர அந்த மக்கள் தொடர்பு அதிகாரி க்கு தலைவர் இரவு உறங்கச்சென்ற பின்னர் கூடச் சிவராத்திரிதான். காலையில் எழுந்தவுடன் அவர் என்ன சோப்புப் போடுவார் எதில் பல் தேய்ப்பார் என்ன பேப்பர் படிப்பார் எனத் தெரிய வேணுமே . குட்டிப் பெட்டிக்கடை ஒன்றை வராண்டாவில் வைத்துக்கொண்டு தலை துவட்டும் டவலோடு விடிய விடியக் காத்திருந்தார்.
ஒரு சாதாரணமான தலைவனுக்கே இவ்வளவு என்றால் தலைவனுக்கெல்லாம் தலைவனான எங்கள் நடத்தரயனுக்கு எது எது பிடிக்கும் என்று தெரிய வேண்டாமா ? அவனுக்குப் பிடித்ததை எல்லாம் நாம் செய்ய வேண்டாமா ? பிடிக்காததை எல்லாம் தவிர்க்க வேண்டாமா ?
நண்பர் வீட்டிலே ஐப்பசி மாதம் தினம் தினமும் இரண்டு வேளை கறி.மதியம் தினம் தினம் மீன் குழம்பு. தவறாமல் வாக்கிங் முடிந்த கையோடு பிளாஸ்டிக் பாலிதீன் பை நிறையச் சதைகளோடு வருவார். தினம் தினம் வீட்டுக்கு யாரோ விருந்தினர் வருகிறார்போல என நினைத்தால் அவர் கார்த்திகை மாதம் முதல் மாலை போடப் போகிறாராம். எதற்காக இல்லை யாரை ஏமாற்ற இந்த மாலை ?
ஏன் கடவுள் கறி சாப்பிடலையா என்று கேட்கிறார்கள். கண்ணப்ப நாயனாரை உதாரணம் காட்டுகிறார்கள். சிறுத் தொண்டரை வம்புக்கு இழுக்கிறார்கள். கண்ணப்பனே சாப்பிட்டதால் சாப்பிடுகிறோம் என்கிறார்கள். கண்ணப்பன் கண்ணைத் தோண்டி அப்பினான்.
நீங்கள் அப்புவீர்களா, வெறும் தூசு விழுந்தாலே பயந்து போய் டாக்டரிடம் போவீர்கள். சத்திரியனாகிய இராமன் கறி சாப்பிட்டதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது ? இராமன் குகனிடம் கறி சாப்பிட்ட சரித்திரம் தெரிந்த உங்களுக்கு அவன் ஒரு சொல்லும் ஒரு வில்லும் ஒரு இல்லும் ஏன் தெரிவதில்லை ?
317 நாட்களும் நான் அலுவலகத்தில் பென்சில் இரப்பர் பேப்பர் திருடுவேன், குடித்து விட்டுத்தான் வருவேன் சண்டை போடுவேன் அப்ப அப்பக் கை அரித்தால் தடவ இலஞ்சக் கிரீம் வாங்குவேன் ஆபீஸ் சொத்தை அபகரிப்பேன் ஆபீஸ் கணக்கில் காரில் முறைகேடு செய்வேன் மீதி 48 நாட்கள் மட்டும் படு சுத்தம் விரதம் என்றால் எந்த நியாயமான மேலதிகாரி அதை ஏற்றுக் கொள்வார் ? அதைவிட இன்னொன்று. அதிகாரியே அப்படி என்றால் ஆரிடம் சொல்லி நான் அழ ?
அஞ்சு தடவை தொழுதாலும் அய்யப்பன் கோவில் போனாலும் நெஞ்சில் சிலுவைக் குறியிட்டு நிதம் மன்னிப்பே கேட்டாலும் நைஞ்சு போகும் அவ்வளவு நடையாத் திரைகள் நடந்தாலும் செஞ்ச பாவம் தீர்ந்திடுமா சீக்கு வராமற் போய் விடுமா
என்பது ஆபீஸில் சிலரைப் பார்த்து கடுப்பிலே நான் எழுதியது.
முட்டையிலே ஆரம்பித்தது எங்கோ போய்விட்டது. முட்டை சைவம் என்றால் சைவக் கடவுள்கள் என்று சொல்லப் படுகிற எல்லாக் கடவுள்களுக்கும் முட்டையைப் படைக்க முடியுமா ? இல்லை ஏதோ பாலாபிஷேகம் பஞ்சாமிர்த அபிஷேகம் என்று ஏதேதோ பண்ணுகிறார்களே அது போல முட்டாபிஷேகம் எதுவும் பண்ணிணால் என்ன என்றால் என்னை நாத்திகப் பயலே என்கிறார்கள்.
என்னைக் கேட்டால் கடவுளுக்குப் பட்டாபிஷேகம் தண்ணீர் அபிஷேகம் தவிர எல்லாம் தேவை அற்றது என்பேன். உங்கள் உடம்பிலே பஞ்சாமிர்தத்தைக் கொட்டிப் பூசிப் பாருங்களேன்.
அப்புறமா சின்ன இராசாவே சித்தெறும்பு என்னைக் கடிச்சுதாம் . . . எனப் பாட்டுப் பாடலாம். உங்களுக்கு மட்டும் பிசுபிசு என்றிருக்கும் கடவுளுக்கு மட்டும் குளுகுளு என்றிருக்குமாக்கும் ?
விட்ட விடியற்காலம் எல்லார் தூக்கத்தையும் கெடுத்து எங்கள் நெஞ்சுக் குழி அதிர்ந்து அடைக்கும் அவ்வளவு உச்சத் தொனியில் சரணம் அய்யப்பா என ஸ்பீக்கரிலே அலறினால்தான் அய்யப்பனுக்குக் காது கேட்குமா ? உங்கள் தொல்லை எல்லாம் பொறுக்க மாட்டாமல் தானே அவர் மலைதாண்டிப் போய் காட்டுக்குள் போய் யோக நிட்டையில் அமர்ந்தார் ?
அதையும் கெடுக்கிறீர்களே பாவி மக்கா ! கடவுள் கொட்டு முழக்கு ஆரவாரம் எதையும் விரும்பவில்லை என்று எத்தனை பேர் வந்து சொன்னாலும் திருந்தவே மாட்டீர்களா?
ஊரில் உள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே தேரிலே வடத்தைக் கட்டிச் செம்பை வைத்து இழுக்கிறீர் ஆரினாலும் அறியொ ணாத ஆதி சித்த நாதனைப் பேதையான மனிதர் பண்ணும் பிரளி பாரும் பாருமே இது வெறும் வாக்கியம் அல்ல சிவ வாக்கியம். சொன்னவர் ஒன்றும் நாத்திகர் அல்ல . பெரிய சித்தரான சிவ வாக்கியர். - மனசு கஷ்டப் பட்டால் மன்னிப்புடன்
மகுட தீபன் . . . . . . . . . .