முப்பால்
மேலே உள்ள வரிகள் யாருக்காவது விளங்கினால் அவர்களுக்கு ஆயிரம் கங்ராட்ஸ்.
விளங்காதவர்கள் ஏதேனும் மருந்துக் கடைக் காரரிடம் காட்டி நிச்சயம் இது ஏதோ டாக்டர்
எழுதிக்கொடுத்த மருந்து அல்ல என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு மேலே படியுங்கள்.
சத்தியமாக இது எகிப்துப் பிரமிடுகளில் உள்ள எழுத்தும் அல்ல.
ஆர்வம் உள்ள சிலர் ஏதேனும் கோவில் கல்வெட்டுகளில் இதுபோல் பார்த்திருக்கிறேனே
என்று இழுத்தால், அப்படி யூகித்து விட்டவர்களுக்கு ஒரு சபாஷ், நீங்கள் தமிழைக் கரை
கண்டு விட்டீர்கள், என்ன, அந்தக் கரை ஒரு 2000 ஆண்டுகளுக்கு முந்தி, அவ்வளவே.
வேறு ஒன்றும் இல்லை. ஒரு காலக் கப்பல் அதிசயமான விண்வெளி ஓடம் உங்களைப் பின்னோக்கி
இட்டுச் சென்று கானப் பேர் எயில் கடந்த உக்கிரப் பெரு வழுதியைப் பேட்டி காண
வைக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்களேன். அவனிடம் இதைக் காட்டுங்கள். கண்டிப்பாக
அவன் இதை வாசித்து விடுவான்,
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
இப்போது எல்லோர்க்கும் புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன். இதுதான் தமிழ் பிராமி
எழுத்து. கி.மு. மூன்றாம் நூற்றாண்டு தொட்டு, ஐந்து ஆறாம் நூற்றாண்டு வரை இந்த
பிராமி எழுத்துக்கள்தான் நம் தமிழ் என்றால் நம்புங்கள் சாமி.
பிள்ளையார்பட்டிக் கோவிலிலும், நார்த்தா மலைக் கல்வெட்டுக்கலிலும் இவை
காணப்படுகின்றன. அதற்கு அப்புறம்தான் வட்டெழுத்துக் காலமே வருகிறது ( கருத்து உபயம்
– டாக்டர் முஸ்தபா கமால். சேதுநாட்டு வரலாற்று ஆசிரியர் முகவை ).
ஆக, நமது திருவள்ளுவர் இந்த எழுத்தில் எழுதி இருக்க வாய்ப்பு நூறு சதம் உண்டு
என்பது எளியேனின் எண்ணம். இதில் நான் சொல்ல வந்தது என்ன என்றால் பாடபேதம் இல்லாத
நூல் திருக்குறள். கம்ப இராமாயணத்திலே பாடபேதம் இல்லாத பாடல்களே, ஏன் அடிகளே இல்லை
என்று சொல்லும் அளவுக்கு பாடபேதம் பிரசித்தம். பாரதியார் பாட்டுக்களுக்குக் கூட,
பாடபேதம் உண்டு என்றால் என்ன சொல்ல ?
அதே போன்றுதான் சொற்சிதைவு, கிடைக்காமல் போன வரிகள், சொற்கள், பாடல்கள் ஏராளம்.
உத்திர கோச மங்கை வரை வந்து பாடிய மணிவாசகர் இராமேச்சுரம் பற்றி எப்பாடலும் பாட
வில்லையா, அல்லது பாடியது கிடைக்க வில்லையா என்பது ஒரு தீராத கேள்வி. அருணகிரியார்
பத்தாயிரத்திற்கு மேல் பாடியதாகச் சொல்வார்கள், ஆனால் கிடைப்பதோ வெறும் 1356 .
அவ்வளவு தூரம் போவானேன், நமது வள்ளலார் எழுதிய சீவ காருண்ய ஒழுக்கமே அவர் ஏழு
பகுதிகளாக எழுதியதாகச் சொல்கிறார்கள ஆனால் கையில் கிடைப்பதோ வெறும் மூன்று
மட்டுமே.
இப்படி எல்லாமே சொல்மாறிப் பாடபேதங்களாய் அல்லது சிதைவு பட்ட பாடல்களாய்க்
குறைவுபட்ட கவிதைகளாய்க் கிடைக்கத் திருக்குறள் மட்டுமே நமக்கு முழுமையாகக்
கிடைக்கிறது. காரணம் எழுத்துக்கள் சிதையலாம் காலப்போக்கில் உருமாறலாம் ஆனால்
உச்சரிப்பு மாறுமோ மாறவே மாறாது. பிராமி எழுத்து வட்டெழுத்து ஆனது பின்னர்
திருத்தி அமைக்கப் பட்டது.
வீரமா முனிவர் வந்து சில மாற்றங்களைச் செய்தார். புதியதாக – ஈ – ஏ முதலியன உருமாறின
( பார்க்க – படம் ) பெரியார் காலத்தில் – னை – லை – ணை – ஆகியவை மாற்றம் கண்டன.
யாரோ ஒருவன் பழைமையை விரும்பிப் புதுக்கவிதை ஒன்று எழுதினான்,
ஆனை கம்பீரமாகத் துதிக்கையைத் தூக்கிக் கொண்டிருந்தது.
எழுத்துச் சீர்திருத்தம் வந்தபின்
தொங்கப் போட்டுக் கொண்டது . . .
என்று ஆனை என்ற சொல்லின் – னை--- எழுத்தைக் கிண்டலடித்தான்.
இலையிலோ இல்லை மடலிலோ எழுதினால் வாடும் வரைதான் நிலைக்கும்.
சுவடிகள் என்றால் போகிப் பண்டிகைக்கு முதல்நாள் வரை.
பேப்பர்கள் எனறால் பேரீச்சம்பழம் வாங்கும் வரை.
பிளாப்பி என்றால் ஜீரோ டிராக் பேட் ஆகும் வரை அல்லது ரீட் எர்ரர் வரும்வரை.
சிடி என்றால் உங்கள் வீட்டுப் பாப்பா முகம் பார்த்து சிறு கை அளாவி எச்சில் பண்ணும்
வரை இல்லை என்றால் உங்கள் வீட்டு நாயோ பூனையோ திருப்பிப் போட்டுக் கீறும் வரை (
அதுதானே டிவி விளம்பரம் ?)
ஹாட் டிஸ்க் என்றாலோ பேட் செக்டார் அப்புறம் வைரஸ் அது இது என்று ஒரே
அச்சுறுத்தல்.
அப்பப்பா வேறு எதில்தான் சேமிக்க எப்படித்தான் சேமிக்க என்றால் இங்கே இங்கே இந்த
மூளை என்ற ஹார்ட் டிஸ்க் இருக்கிறதே அங்கே சேமியுங்கள் என்று உங்கள்
ஒவ்வொருவரையும் கேட்டுக் கொள்கிறேன். ஒருவர் இருவர் மட்டுமல்ல தமிழ் அறிந்த
அனைவரும் இதைச் செய்ய வேண்டும்.
பிரளயம் வந்து நிலம் பூராக் கடலில் மூழ்க அதோ அந்த மலைமுகட்டில் தப்பித்த ஒரேஒரு
ஆதாம் ஏவாளாய் மனித இனம் மீண்டும் துவங்கினால் உங்கள் பிளாப்பி சிடி ஹார்ட் டிஸ்க்
எல்லாமே வேஸ்ட். அப்போது உதவிக்கு வருவது நினைவாற்றல் மட்டுமே.
தொன்று தொட்டு அப்படித்தானே நம் வேதங்கள் வாய்மொழியாக வந்தன ?
எழுத்துக்கள் எஙுகே இருந்தன ? அதனால்தானே எழுதாக் கிளவி என்றும் பேர் பெற்றன!
எழுத்துக்கள் உரு மாறும் வடிவம் பிறழும். ஓசைகள் மாறா. அப்படியே இருக்கும்.
திருக்குறள் புத்தகம் கையிலே உறைந்தால் பற்றாது, அது உங்கள் வாயிலே உறைய வேண்டும்.
அதனால்தான் அதற்கு வாயுறை வாழ்த்து என்றும் பெயர்.
என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை ?
ஆங்கிலம் போல் அன்றி இதற்கு எத்தனை ENCODING ?
அஸ்க்கி என்று அவர்கள் சொன்னதற்குப் போட்டியாக எத்தனை என்கோடிங்குகள் தமிழில்,
டிஸ்க்கிக் கோடு, இஸ்க்கிக்கோடு, டேப்கோடு, டேம்கோடு என எல்லாத் தலைசுற்றலும்
ஓய்ந்து இப்போது ஒரு வழியாக யுனிக்கோடு வந்து விட்டது.
அப்பாடா இனி என் வலைப்பக்கம் எல்லார்க்கும் மேலே உள்ள அகர முதல போல் அன்றி
நன்றாகத் தெரியும் என நம்புவேனாக.
எத்தனை கோடு வந்தாலும் கோடுக்குக் கோடு மாறத்தான் செய்யும்.
ஆனால் உச்சரிப்புக் கோடு மாறுமா ?
சப்தக் கோடு மாறுமா ?
இற்றைக்கு இந்தக் கணம் யுனிக்கோடு மூலம் உங்களைச் சந்திக்கிறேன்.
நாளை வேறு கேலக்ஸியில் இருந்து ஒரு ET வருமேயானால் இந்த யுனிக்கோடு போய் ஒரு
டெர்ராக்கோடு வந்தாலும் வரும், யார் கண்டா ?
ஓராயிரம் கோடு வந்தாலும் ஒலிக்கோடு மட்டும் மாறவே மாறாது.
எனவே தமிழைத் தமிழ் இலக்கியத்தை நினைவிருத்துவோம்
உச்சரிப்போம் ஓதுவோம்.
- மகுடதீபன் முகவை
- 1 .ஆகா பாடலாம்
- 2. மெல்லத் தமிழ் - 1
- 3. மெல்லத் தமிழ் - 2
- 4. மெல்லத் தமிழ் - 3
- 5. பொற் கொடி
- 6. முக்திப் பால்
- 7. உலகப் பொது மறை
- 8. கோணல் பார்வை
- 9. மனோ சக்தி
- 10.முப் பால்
- 11.நான் யார்?
- 12.நியூஸ்
- 13.பண்-பாடு
- 14.பிப்ரவரி-14
- 15.ஐந்தாம் தமிழ்
- 16.திட்டு
- 17.இயற்கை
- 18.ஏன் மறந்தோம்
- 19. குறளில் ஏழு
- 20. பிறந்தநாள்
- 21. வையுங்கள்
- 22. கவிதை
- 23. பெரிது பெரிது
- 24. ஐந்தாம் தமிழ்
- 25 .நடராசர்
- 26. கழுதை
- 27. பேசன் ப்ளஸ்
- 28. முட்டை
- 29. முதுகு தரிசனம்
- 30. பெரிது பெரிது
- 31. 50 ரூபாய்
- 32. நாதம்
- 33. மாடக்குழி
- 34. அபிராமி கோவில்
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .