செந்திலாண்டவன் கோலிலில் அன்று எக்கச் சக்கக் கூட்டம். மேலே எக்கிப் பார்க்க
நெரிசலில் சக்கையானேன்.முனிவர்கள் மட்டுந்தான் கால் பெருவிரலில் நின்று தவம்
செய்வார்கள் என்று யார் சொன்னது ? நானும் செய்தேன். வரிசையில் நின்று கொண்டு,
முன்னே நின்றவர்கள் தலை மறைத்ததால் கால் பெருவிரலை மட்டும் ஊன்றி எக்கி எக்கி ப்
பார்த்துக் கொண்டே ஊர்ந்தேன்.
இந்தச் சிறப்பு தரிசன முறையை யார் கொண்டு வந்தது, கொஞ்சம் கண்டு பிடித்துச்
சொல்லுங்களேள், அவர்களை நான் சபிக்க வேண்டும். அவர்கள் புத் என்ற கொடு நரகில்
எண்ணெய்க் கொப்பரையின் மேல் ஆயிரம் வருடம் தலைகீழாகத் தொங்கித்
திக்குமுக்காடுவார்களாக ! பின்னே என்னவாம் ? கடவுள் முன்னால் அது என்ன அவர்களுக்கு
மட்டும் பெரிய சலுகை ? பணம் மட்டும் கொடுத்துவிட்டால் போதுமா ? செந்திலாண்டவன் வேல்
அதற்கு வளைந்து விடுமா ? நாங்கள் செய்வது தர்ம தரிசனம் என்றால் அவர்கள் செய்வது
அதர்ம தரிசனம்.
அன்று அற்புதம் போங்கள். எதிரே செந்திலோன் சன்னிதியில் ஆகா திவ்ய தரிசனம். வேல்
காணேன். வி.ஐ.பி.களின் முதுகு கண்டேன். சேவற் கொடி காணேன். பதிலாக வி.ஐ.பி.களிள்
சிரமும் சிரமேல் கூப்பிய கரங்களும் கண்டேன்..
பிரகலாதனுக்கும் இரணியனுக்கும் வேண்டுமானால் தூணிலும், துரும்பிலும்
தோன்றியிருக்கலாம் கடவுள். ஆனால் எனக்கோ அன்று வி.ஐ.பி. முதுகுகளிலும் , பின்னந்
தலைகளிலும் தோன்றினார் கடவுள்.
‘கேளப்பா சீடனே கழுதை ஒன்றைக் கீழான பன்றிதனைத் தேளைக் கண்டு தாளைப் பார்த்து இரு
கரமும் சிரமேற் கூப்பி சங்கர சங்கர என்றே பணிதல் வேண்டும் . . ‘
என்றான் மகாக்கவி பாரதி.
அருமையான அத்துவித தத்துவம் சொன்ன பாரதியின் வாக்கு பொய் ஆகலாமோ, நானும் அவ்வாறே
பணிந்தேன். அவசரம். அவசரம். அப்படி என்ன அவசரம் இந்த வி.ஐ.பி.களுக்கு. நின்று
நிதானமாகப் பார்க்க நேரமில்லையா இல்லை எண்ணம் இல்லையா ? சமத்துவம் சமத்துவம் என
வாய் கிழியப் பேசும் அரசியல்வாதிகள் என்னைக் கேட்டால், தங்கள் சமத்துவக் கொள்கைகளை
எல்லாம் ஆலயங்களில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்வேன்.
சமத்துவபுரம் என்பது ஊர்க்கோடியிலே இருந்தால் பற்றாது, கோவிலுள் இருக்க வேண்டும்.
ஆரம்பித்துப் பாருங்கள், சுடுகாடு வரை சமத்துவம் வந்துவிடும். ( மதம் என்பது
மனிதர்களுக்கு மட்டுமல்ல, சுடுகாட்டுக்கும் உண்டு என்பது வேறு கதை )
தர்ம தரிசனத்தில் நின்று நின்று கால் மரத்துப் போன என்போன்ற அன்பர்களே, உங்களுக்கு
ஒரு ஆறுதலான வார்த்தை. சாத்திரங்கள் சொல்வது என்ன தெரியுமா? ஒரு கோவில் தலத்திற்கு
இறைவனைத் தொழச் சென்றால் குறைந்த பட்சம் மூன்று நாட்களாவது அத் தலத்தில்
இருப்பிடமாகத் தங்க வேண்டுமாம்.
நம்மவர்களுக்குக் காலம் சுருங்கி விட்டது. இதனால்தான் கோவிலுக்குப் போனால் கடவுளை
வணங்கி விட்டு ஒரு மூன்று நிமிடம் தூண் அருகே அல்லது படியில் அமர்ந்து இருந்து
விட்டு வந்து விடுகிறார்கள். ஒரு வகையில் பார்க்கும் போது இந்த தர்ம தரிசனம்
செய்பவர்கள் அதர்ம தரிசனம் செய்பவர்களை விட அதிக நேரம் சந்நிதிக்குள் அதாவது இறைச்
சூழலில் இருக்கிறார்கள். என்றால் அவர்களுக்கு அதர்மர்களை விடப் பலன் அதிகம்.
சிறப்பு தரிசனமாவது கட்டணம் கட்டிவிட்டு வருகிறார்கள் அந்தக் கட்டணம் கோவிலுக்காவது
போகிறது அது ஆறுதலான விஷயம் என்று கொண்டாலும் கட்டணமே கட்டாத வி.வி.ஐ.பி. தரிசனம்
என்றும் உண்டு. உண்மையில் இதுதான் மகா மகா அதர்ம தரிசனம் என்று சொல்ல வேண்டும்.
கட்டணமும் கட்ட மாட்டார்கள். தட்டில் காசும் போட மாட்டார்கள். காணிக்கை கூட மூச்.
தேங்காய்த் தட்டு கூட அவரது கையாளோ இல்லை கலாசியோதான் வாங்கி அழுக
வேண்டும்.(தேங்காய்த் தட்டைச் சொன்னேன்). பந்தா பந்தா ஒரே பந்தா. வரிசை பூரா ஒரே
வணக்கமும் நமஸ்காரமும் கடவுளுக்கு அல்ல இவர்களுக்கே. கடவுளைப் பார்க்க வருவதே பாவம்
தொலைக்கத்தான். இவர்களோ முன்னே மாடாக ( நந்தியாக என்றால் அது நந்திக்கு அவமானம்)
நின்று மறைத்துக் கொண்டு பின்னே இருப்பவர்களின் வயிற்றெரிச்சல்களையும் கொட்டிக்
கொண்டு தேங்காய் மூடியோடு பாவத்தையும் கட்டி எடுத்துச் சொல்வார்கள்.
உள்ளன்புடன் உருகி அழும் பக்தன் கியூவின் கடைசியிலே நின்றாலும் எங்கள் செந்தில்
சிறுகுழந்தை ஓடோடி வந்து அவர்தம் தோள்மிசை தொற்றிக் கொண்டு திரு நீறு அணிவிப்பான்.
இடைத்தட்டில் புகுந்தவன் கையில் எத்தனைத் தட்டு இருந்தாலும், கல்லில் இருந்து
அவர்முன் நில்லாமல் காணாமல் போய் விடுவான் இது சத்தியம்.
சமய புரத்திலே இதைவிட இன்னொரு கொடுமை. சிறப்புக் கட்டணக் கவுண்டர் பக்கத்திலேயே
இரண்டு பேர்கள் நின்று கொண்டிருப்பார்கள். பக்தர்கள் கட்டணம் கட்டாமல் இலேசாகப்
பலித்த மட்டும் தடுக்கப் பார்ப்பார்கள்.
‘ ‘ஏன் சார் வீணா இருவது ரூவா கட்றீங்க. பத்து ரூவா மட்டும் கொடுங்க போதும்.
அர்ச்சனை டிக்கட் மட்டும் போதும். உள்ளே கூட்டிக் கொண்டு போகிறேன். . !’
என்பார்கள்.
சில அவசர பக்தர்களின் கண்களுக்கு இந்தப் புரோக்கர்கள் அந்தக்கணப் போதில்
தேவதூதர்கள் போல் காட்சி அளிப்பார்கள்.
மற்ற நேரங்களில் கவுண்டருக்கு இரு புறமும் துவார பாலகர்களாக நின்று
கொண்டிருப்பார்கள். நீக்கமற எங்கும் நிறைந்திருப்பவர் கடவுள் மட்டும் அல்ல
இலஞ்சமும்தான் என்று காட்ட அவதாரம் எடுத்த அவதூதர்கள் போன்றும் இருப்பார்கள்.
என்போலக் கடுப்பாகிப் போனவர்களின் கவனத்துக்கு. என்ன முடிவு கட்டி விட்டீர்களா இனி
தர்ம தரிசனம்தான் என்று. அப்படிப் போகும் போது மதியம் இரண்டரை மணிக்குப் போங்கள்.
கூட்டம் இராது. அப்படி இருந்த போதும் வேகமாக நம்மை காக்கிச் சட்டை அணைந்த ஒருவர்
விரட்டோ விரட்டு என்று விரட்டுகிறார் வேகமாய்.
எனக்கு வந்த கடுப்பில் பேசாமல் எதிரே கொடிக் கம்பத்தடி சென்று சப்பணமிட்டுக்
கொண்டு, ‘ அடே முருகா வாடா’ என்றேன். இரண்டுமணிப்போது கழித்தேன். அவனும் என்
மடிமீது வந்து அமர்திருக்க வேண்டும். ஏன் என்றால் என் மனத்தில் அன்று உன்னித்து
வேண்டியது அடுத்தநாள் அப்படியே நடந்துவிட்டது.
ஆமாம் எட்டு வருடமாய் நடவாதிருந்த ஒன்றை நடத்திக் காட்டி விட்டான் என் நடத்தரையன்
பிள்ளை.
‘ வாரா திருக்க வழி உண்டோ வடிவேல் முருகா வருகவே வளரும் களப மார்பிலங்கு வள்ளி கணவா
வருகவே . . .’ என்று கூப்பிட்டுத்தான் பாருங்களேன்.
- மகுடதீபன்
சிந்தனைகள்
- 1 .ஆகா பாடலாம்
- 2. மெல்லத் தமிழ் - 1
- 3. மெல்லத் தமிழ் - 2
- 4. மெல்லத் தமிழ் - 3
- 5. பொற் கொடி
- 6. முக்திப் பால்
- 7. உலகப் பொது மறை
- 8. கோணல் பார்வை
- 9. மனோ சக்தி
- 10.முப் பால்
- 11.நான் யார்?
- 12.நியூஸ்
- 13.பண்-பாடு
- 14.பிப்ரவரி-14
- 15.ஐந்தாம் தமிழ்
- 16.திட்டு
- 17.இயற்கை
- 18.ஏன் மறந்தோம்
- 19. குறளில் ஏழு
- 20. பிறந்தநாள்
- 21. வையுங்கள்
- 22. கவிதை
- 23. பெரிது பெரிது
- 24. ஐந்தாம் தமிழ்
- 25 .நடராசர்
- 26. கழுதை
- 27. பேசன் ப்ளஸ்
- 28. முட்டை
- 29. முதுகு தரிசனம்
- 30. பெரிது பெரிது
- 31. 50 ரூபாய்
- 32. நாதம்
- 33. மாடக்குழி
- 34. அபிராமி கோவில்
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .