எண்ணத்தின் சக்தி
முதலிலேயே சொல்லி விடுகிறேன், சத்தியமாக , நான் ஒன்றும் திருவள்ளுவரைச் சைவ
சித்தாந்தி என்று தாபிக்க வரவில்லை . வெறும் எண்ணமும் ஆழ்ந்து நினைக்கும்
நினைப்பும் எப்படி செயலை அல்லது நிகழ்ச்சியை நடத்திக் காட்டி விடுகிறது
என்று ஆணித்தரமாக எடுத்துக் காட்டவே இது. அல்லாமல் வேறில்லை.
அன்றைக்கு அலுவலகம் விட்டு வீட்டுக்குள் நுழைந்தபோது மணி ஏழைத்
தாண்டிவிட்டது. தொலைக்காட்சித் திரையிலே விக்கிரமாதித்தனோ என்னவோ, ஒரு
நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருந்தது. ஞாயிற்றுக் கிழமை கூட அலுவலகப் பணி
அமுக்கினால் எங்கே இந்த நிகழ்ச்சி எல்லாம் பார்க்க ?
ஏதோ வாய்க்குச் சிறிது உணவு இடும் போது கண்ணுக்கும் சிறிது ஈயப்படும்,
அவ்வளவே எனது டி.வி. பார்த்தல். சரியாகக் கவனிக்க வில்லை. சிவபெருமான்
ஆனந்த தாண்டவம் ஆடக் குழை கழன்று விழக் காலிலேயே அதை மீட்டும் மாட்டினார்.
இப்போது கேமரா பூவுலகம் நோக்கித் தாழ்கிறது. கீழே பர்ண சாலை போல் ஒரு சிறு
குடில். உள்ளே முனிவர். அவருக்குத் திருக் காட்சி தெரிகிறது .
ஏதோ செப்பலோசை மாதிரிக் கேட்டது. அப்பறம்தான் புரிந்தது அது ஒரு வெண்பா.
ஒரே தடவைதான் சொன்னார் அந்த முனிவர். எனக்குச் சரியாக விளங்க வில்லையா
இல்லை கேட்கவில்லையா தெரியவில்லை. இது என்ன சினிமாப் பாட்டா,
நெஞ்சினிலே நெஞ்சினிலே நெஞ்சினிலே
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்
என்று மும்மூன்று தடவை பாட ? ஒரே தடவை விறுவிறுவென்று சொன்னாரா, காது
வாங்கினாலும் மனம் வாங்கவில்லை. கடைசி ஒன்றே முக்கால் அடி மட்டும்
கிரகித்தேன்.
இழைநக்கி நூல்நெருடும் ஏழைஅறி வேனோ
குழைகக்கும் பிஞ்ஞகன் கூத்து ?
அட, அப்புறம்தான் தெரிந்தது. இது நமது திருவள்ளுவர். காட்சியைச் சரியாகக்
கவனிக்க முடியவில்லையே என்ற ஆற்றாமையோடு ஆச்சரியப்பட்டேன். இது என்ன
புதுக்கதை ? திருவள்ளுவர் நடராஜத் தாண்டவம் பார்த்தாரா ? இதுவரை
கேள்விப்படாததாய் இருக்கிறதே ! கல்லூரிக் காலத்திலேயே எந்த எந்தக் கவிதை
எல்லாம் கரைத்துக் குடித்ததாய் இருந்த இறுமாப்பு. தலைக்கு மேலே ஒரு அடி
உயரத்துக்கு எகிறி மிதந்த ஆணவம் இறங்கியது. இந்தப்பாடல் இந்தப்பாடல் . . .
எப்படி எனக்குத் தெரியாமல் போயிற்று ?
நிகழ்ச்சி நிஜமோ பொய்யோ எதுவானாலும் இருக்கட்டும். இந்தப் பாடல் தெரியாமற்
போனதற்காய் ரெம்ப வெட்கப் பட்டேன். என்னவோ சொன்னாரே முதல் இரண்டடி, அடடா
கோட்டை விட்டு விட்டேனே ! யாரைக் கேட்டால் தெரியும் ? தமிழாசிரியர்களைக்
கேட்போமா ? அப்போதே அங்ஙனமே அன்னே அதே நொடியில் கேட்டேன் தொலைபேசியில்.
யாருக்கும் தெரியவில்லை.
எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. டி.வி.யை ரீப்பிளே போட்டா பார்க்க முடியும்
? யாருக்கு இது தெரியும். நாளை பேசாமல் ஸ்ரீப்ரியாவுக்கும்
அறிவானந்தத்துக்கும் லட்டர் போட்டு விடுவோமா ? முகவரி தெரியாதே. கேர் ஆப்
ஸன் டி.வி. என்று போட்டால் போய்ச் சேருமோ ? பதில் அனுப்பவரோ இல்லை மாட்டாரோ
? வந்தால் பதில் இல்லையேல் ஒரு ரிப்ளை கார்டு நஷ்டம் அவ்வளவே.
உணவு செல்லவில்லை படுத்தால் உறக்கம் கொள்ளவில்லை. பாவிகளா என்னய்யா தமிழ்ச்
சொல்லிக் கொடுக்கிறீர்கள் ஒருத்தனுக்கும் தெரியவில்லையே ?
ஆகா, ஒரு இரண்டடி விடுபட்டு என்னைப் படாத பாடு படுத்தியது. இரவெல்லாம் அந்த
அரைகுறைக் கவிதையை நானே பூர்த்தி பண்ணுவது போலக் கனவு இல்லை நினைவு எதோ
ஒன்று திரும்பத் திரும்ப உறுத்திக் கொண்டே இருந்தது.
பொழுது விடிந்தது, என் கேள்விக்கு மட்டும் இல்லை. அன்று நூலகத்தில் நூல்
மாற்றக் கடைசி நாள். ஒருநாளைக்கு ஒருரூபாய் அவராதம் இல்லை அவமானம். எனவே
எதோ கைக்கு வந்த புத்தகம் ஒன்றை உருவிக்கொண்டு அலுவலகம் போகும் அவசரத்தில்
பறந்தேன்.
இரவு வந்து புத்தகம் விரித்தேன். என்னவோ தெய்வத்தமிழ் என்ற புத்தகம்.
புலவர் முருகேசனோ யாரோ எழுதியது. சில அத்தியாயங்கள் பறத்தியதும் அடக்
கடவுளே அதே நிகழ்ச்சி அதே கவிதை !
பூமேல் அயனும் புரந்தரனும் பொற்பமைந்த
தாவி அளந்தானும் தாம்நிற்க - நாவில்
இழைநக்கி நூல்நெருடும் ஏழைஅறி வேனோ
குழைகக்கும் பிஞ்ஞகன் கூத்து ?
என்னைப் பொறுத்த வரை எந்த முயற்சியும் எடுக்க வில்லை. ஆனால் நினைத்தவாறே
உருப் போட்டுத் தேடல் செய்தேன். எண்ணியது பலித்தது. இது எப்படிச் சாத்தியம்
? வள்ளுவரைக் கேட்போமா ?
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியராகப் பெறின்.
ஒரே சந்தோஷமாக இருந்தது எனக்கு. இருக்காதா பின்னே, திண்ணியனாகி
விட்டேனாக்கும் ?
-மகுட தீபன் முகவை
சிந்தனைகள்
- 1 .ஆகா பாடலாம்
- 2. மெல்லத் தமிழ் - 1
- 3. மெல்லத் தமிழ் - 2
- 4. மெல்லத் தமிழ் - 3
- 5. பொற் கொடி
- 6. முக்திப் பால்
- 7. உலகப் பொது மறை
- 8. கோணல் பார்வை
- 9. மனோ சக்தி
- 10.முப் பால்
- 11.நான் யார்?
- 12.நியூஸ்
- 13.பண்-பாடு
- 14.பிப்ரவரி-14
- 15.ஐந்தாம் தமிழ்
- 16.திட்டு
- 17.இயற்கை
- 18.ஏன் மறந்தோம்
- 19. குறளில் ஏழு
- 20. பிறந்தநாள்
- 21. வையுங்கள்
- 22. கவிதை
- 23. பெரிது பெரிது
- 24. ஐந்தாம் தமிழ்
- 25 .நடராசர்
- 26. கழுதை
- 27. பேசன் ப்ளஸ்
- 28. முட்டை
- 29. முதுகு தரிசனம்
- 30. பெரிது பெரிது
- 31. 50 ரூபாய்
- 32. நாதம்
- 33. மாடக்குழி
- 34. அபிராமி கோவில்
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .