திருக்குறள் இப்படியும் சில பார்வைகள்
யாருக்குமே இல்லாத ஒரு சிறப்பு வள்ளுவருக்கு உண்டு. அதுதான் திரு என்ற அடைமொழி. வேறு கவிஞர்கள் யாரும் இம் அடைமொழியைப் பெறவில்லையா என்று நீங்கள் கேட்கலாம். திருஞான சம்பந்தர் இல்லையா திருநாவுக்கரசர் இல்லையா என்று கேட்கலாம். அவர்கள் எல்லாம் கவிஞர்கள் என்பதைவிட சிவனடியார்கள் என்பதே சிறப்பு. திருக் கம்பன் என்று சொல்கிறோமா இல்லையே
திரு இளங்கோவடிகள் என்கிறோமா அதுவும் இல்லை.
ஆனானப்பட்ட தமிழுக்கு இப்போது கிடைத்துள்ள நூல்களில் முதல் நூலாகிய தொல்காப்பியத்தின் ஆசிரியருக்கே கூட இந்த அடைமொழி கிட்ட வில்லை.
ஆளுக்கு ஆள் சமயம் பார்த்து திருவள்ளுவருக்குச் சமயச் சாயம் பூசி வருகிறார்கள். ஆஹா, மலர்மிசை ஏகினான் என்று பாடி இருக்கிறாரே அவர் சமணர் என்கிறார்கள். எண்குணத்தான் தாளை வணங்காத்தலை என்று சொல்லி விட்டாரே அது நிச்சயமாக சிவபெம்மானைத்தான் என்று சைவ சித்தாந்திகள் வாதிடுகிறார்கள். திருக்குறள் என்பது ஏசுநாதர் மலைமேல் செய்த சொற்பொழிவின் எதிரொலி என்றே சொல்லிவிட்டார் ஜி.யு.போப், இது பற்றாதா, பார் பார் வள்ளுவர் ஆதி பகவன் என்பது எங்கள் ஆதாம் ஏவாள்தான் என்கிறார்கள் கிறித்தவர்கள்.
மழித்தலும் நீட்டலும் வேண்டா என்று பாடினாலும் பாடினார்,விட்டார்களா அவருக்குத் தாடி மீசை எல்லாம் வைத்து ஜோடித்து உச்சியிலே ஜடா முடியும் வைத்துவிட்டார்கள். நல்ல வேளை திருவள்ளுவர் காமத்துப் பாலைப் பாடினார், இல்லாவிட்டால் அவர் ஒரு நிஜமான சமணத்துறவி என்று கையிலே குண்டிகையும் கட்கத்திலே மயிற்பீலியும் கொடுத்துக் குகைப் பாறையிலே உட்கார வைத்தாலும் வைத்திருப்பார்கள்.
மாங்கல்யத்தின் பெருமையை
மனையாள் அறிவாள்
மணவாளனும் அறிவான்
இருவரையும் விட
மார்வாடியே நன்கு அறிவான் . . .
என்ற மேத்தாவின் புதுக்கவிதையை நண்பனுடன் வாசித்துக் கொண்டிருந்த போது, காதிலே தோட்டைத் திருகிய வாறே வந்தாள் அவன் தலைவி. ஒரு குறள் ஞாபகம் வந்தது.
செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.
ஆத்திர அவசரத்துக்கு என் நண்பனின் தேவைக்குக் கைகொடுப்பது அவன் மனைவியின் காதணியாகிய செவிச் செல்வம்தான்.
வேலை வாய்ப்பு அலுவலகத்திலே நீண்டு வளைந்த பெரிய க்யூ. அகடமிக் கோர்ஸஸ் ஒரு கியூவில். புரபஷனல் கோர்ஸஸ் இன்னொரு கியூவில். பிளஸ் டூவுக்கு என்று தனி க்யூ. அதிலே இரண்டு பையன்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்..
' கற்கக் கசடற. கற்றோம். அப்போதெல்லாம் இந்தத் திருக்குறளின் பொருள் விளங்க வில்லை. நீ ஒரு டிகிரி நான் ஒரு டிகிரி எனக் கற்று வாங்கியபின் இங்கே நன்றாக விளங்குகிறது.
படித்த படிப்புக்குத் தகுந்தவாறு அந்த அந்தக் கியூவிலே நிற்க அதற்குத் தக ...'
செய்தித் தாளிலே படித்திருப்பீர்கள், காரில் விபச்சாரம் செய்ததாக அழகி கைது.
படங்களுடன் வெளியிட்டிருப்பார்கள். எனக்கு ரெம்ப நாளாக ஒரு அற்ப ஆசை, அந்தத் திருமுகங்கள் குறைந்த பட்சம் எப்படி இருக்கும் ? நிஜமாகவே அழகியா ? பேப்பர்க்காரனைப் பொருத்தமட்டில் கிழவி கைதானாலும் அழகி கைது என்றுதான் போடுவார்கள். அகோர மூதேவி கொலையுண்டாலும் அழகி கொலை என்றுதானே போடுகிறார்கள். ஒருவேளை தற்கொலை செய்பவர்கள், கொலையுண்டவர்கள், கைது செய்யப் படுபவர்கள் எல்லாமே அழகிகளோ இல்லை உலகத்திலே அழகானவர்கள் எல்லாம் அந்த கதிக்கு ஆளாகிறார்களா '
என் கண்ணிலேதான் கோளாறோ, உலகில் எல்லாருமே அழகிகள்தான் போலிருக்கிறது.
அது கிடக்கட்டும், செய்தித்தாளிலே, இந்த அழகிகள் எல்லாம் ரெம்பத்தான் வெட்கப்படுவார்கள போலிருக்கிறது எல்லாப் படங்களிலும் கைக்குட்டையால் முகம்மூடி வருகிறார்கள் அல்லது கையால் முகம்பொத்தி வருகிறார்கள். முகம் அழகா இல்லையா என்று பார்க்கவே முடியவில்லை.
ஆனால் இந்த ஊழல் பேர்வழிகள் இருக்கிறார்களே, கொள்ளை கொள்ளையாய்ச் சுருட்டியவர்கள் இருக்கிறார்களே இவர்கள்மட்டும் காவல்துறையில் மாட்டிக் கொண்டு கைதாகும்போது முகம்பொத்தி வருவதில்லை. என்னதான் ஊழல் புரிந்தாலும் திருவள்ளுவர் சொன்னதை அப்படியே கடைப்பிடிக்கிறார்கள். நான்கூட நினைத்ததுண்டு நம்மால் திருக்குறளைச் சரியாகக் கடைப்பிடிக்க முடியவில்லையே என்று. என்ன செய்ய ?
போலீஸ் வேனில் இருந்து அவர்கள் இறங்கும் போது கொஞ்சமாவது கவலை கிவலை எதுவும் முகத்திலே இல்லாமல் அப்படி ஒருசிரிப்பு. இதுவல்லோ,
' இடுக்கண் வருங்கால் நகுக . . . '
- magudadheeban Ramanathapuram cell-94861 02034
சிந்தனைகள்
- 1 .ஆகா பாடலாம்
- 2. மெல்லத் தமிழ் - 1
- 3. மெல்லத் தமிழ் - 2
- 4. மெல்லத் தமிழ் - 3
- 5. பொற் கொடி
- 6. முக்திப் பால்
- 7. உலகப் பொது மறை
- 8. கோணல் பார்வை
- 9. மனோ சக்தி
- 10.முப் பால்
- 11.நான் யார்?
- 12.நியூஸ்
- 13.பண்-பாடு
- 14.பிப்ரவரி-14
- 15.ஐந்தாம் தமிழ்
- 16.திட்டு
- 17.இயற்கை
- 18.ஏன் மறந்தோம்
- 19. குறளில் ஏழு
- 20. பிறந்தநாள்
- 21. வையுங்கள்
- 22. கவிதை
- 23. பெரிது பெரிது
- 24. ஐந்தாம் தமிழ்
- 25 .நடராசர்
- 26. கழுதை
- 27. பேசன் ப்ளஸ்
- 28. முட்டை
- 29. முதுகு தரிசனம்
- 30. பெரிது பெரிது
- 31. 50 ரூபாய்
- 32. நாதம்
- 33. மாடக்குழி
- 34. அபிராமி கோவில்
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .