tamil pages of magudadheeban 
 

உலகப்பொதுமறை



முத்தமிழ் முத்தமிழ் என முழங்கியது போய் இப்போது நாலாம் தமிழாகிய கணித் தமிழ் வந்து விட்டது இப்போது ஆராய்ச்சியாளர்களுக்கு எல்லாம்மிகவும் எளிமையாகப் போய் விட்டது. என்ன, வரிவரி யாக இனிக் குறிப்பு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லாமே பெரும்பாலும் வலைத் தளத்துக்குள் வந்து விட்டது.

ஞானசம்பந்தரின் தேவாரமா, நேரிடையாக பதிவு இறக்கம் செய்ய வேண்டியது, உங்களுக்கு என்ன வேண்டும் ?
சம்பந்தன் தன்னைப் பாடினான்.

எத்தனை முறை என்று வேண்டுமா, சரி, சம்பந்தன் என அடிக்க வேண்டியது, தேடு என்ற விருப்பத்தில் போய் ஒவ்வொன்றாய் அடுத்து அடுத்து தேடிக்கொண்டே போக வேண்டியது, தேவைப்பட்டால் எத்தனை தடவை என்பதற்குக் கூட மென்பொருள்கள் எழுதப் படலாம்.

எடுத்துக் காட்டாய்த் தமிழ் என்ற வார்த்தையை எடுத்துக் கொண்டேன். தேவாரத்திலே ஏகப்பட்ட இடத்திலே வருகிறது. எங்கே எங்கே எனப் பட்டியல் இட்டால் கட்டுரை என்ற பேரைக் கட்டுக்கடங்காஉரை என மாற்ற வேண்டியிருக்கும். தமிழ் இல்லாத தேவாரம இல்லைத் தேவாரம் இல்லாத தமிழா ?

ஆழ்வார்களை எடுத்துக் கொண்டால் கேட்கவே வேண்டாம், பாட்டுக்குப் பாட்டு தமிழ்த்தேன் கசியும்.
உதாரணமாய் திருமங்கை ஆழ்வார்.
இறைவன் நாதமயமானவன் என்று காட்டுவதற்காக, அவனை மொழியாகவே வர்ணிக்கிறார்,
"தென்னன் தமிழாய் வடமொழியாய் . . . " என்பது எம்மான் திருப் புல்லணைப் பெம்மான் மேல் சாற்றிய பாசுரம்.

வள்ளல்பிரானிடம் வந்தார் ஒரு வடமொழிப் பண்டிதர். வந்தவர் சமஸ்கிருதம்தான் எல்லா மொழிகட்கும் தாய் மொழி எனத் தாபிக்க முயன்றார். வள்ளலார் பிடித்துக் கொண்டார்.
' அப்படியா, ரெம்பச் சரி, ஆனால் தமிழ் என்பது எல்லாவற்றுக்கும் தந்தை மொழியாக்கும் " என்றார்.

அதனால்தான் நடராசப் பெம்மான் தன்னை வளர்த்ததைப் பாடும் போது,

"செந்தமிழின் வளர்க்கின்றாய்
சிற்சபையில் நடிக்கின்றாய் - என்று பாடுகிறார்.

பாரதி - பாரதி தாசர்களைப் பற்றிச் சொல்லப் போனால் அது உங்களுக்கே தெரியும் அவர்கள் எத்தனை இடத்தில் தமிழைப் பாடி உள்ளார்கள் என்று.

இப்படித் தொல்காப்பியர் காலம் தொட்டு இற்றைய புதுக்கவிஞர் காலம் வரைத் தமிழைப் பாடாத அல்லது பேசாத கவிஞர்களும் இல்ல நூல்களும் இல்லை.

இப்போது விஷயத்துக்கு வருவோம். நான் சும்மா இருக்க மாட்டாமல திருக்குறளை விளையாட்டாக டவுன்லோட் செய்து தேடினேன்.

அதே தமிழ் என்ற வார்த்தையை அடித்துத் தேடினேன் தேடினேன் தேடிக்கொண்டே இருத்தேன். அட நிஜமாலுமே திருக்குறளில் தமிழ் என்ற வார்த்தையைக் காணோம்.

விஸ்வ நாதனின் அழகி மென் பொருள் என்னை ஒருவேளை மயக்கத்தில் ஆழ்த்தி விட்டதோ, என திரும்பவும் ,

அகர முதலவில் இருந்துக் கூடி முயங்கப் பெறின் வரை தேடித் தேடிப் பார்க்க, இல்லை இல்லை இல்லையோ இல்லை, அழகி என்ன செய்வாள், இருந்தால் தானே கண்டுபிடித்துத் தருவாள் ?

எப்படி முடியும், எப்படி இது சாத்தியம், தமிழைப் பாடாத வள்ளுவர், தமிழ் என்ற வார்த்தையையே பயன் படுத்தாத திருக்குறள்- கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை எனக்கு !

சோர்வோடு யோசித்த எனக்குப் பொறி ஒன்று தட்டியது. படபடவென எழுந்து கணிணியை உசுப்பித் திருக்குறளைத் திறந்தேன். இப்போது - உலகு - என்ற வார்த்தையைத் தேட -உல- என்று அடித்தேன். அடேங்கப்பா மொத்தம் 46 இடங்களிலே வருகிறது. இதைத் தவிர ஞாலம் என்ற உலகைக் குறிக்கும் சொல் ஆறுக்கு மேற்பட்ட இடங்களில. சும்மா ஆரம்பித்துதான் வைத்தேன், நிலம் நிலன் பூமி அகிலம் முதலிய வார்த்தைகளைச் சாவகாசமாக நீங்களும் தேடிப்பார்த்துக் கொள்ளுங்கள்

இப்போது எனக்கு நன்றாக உறைத்து விட்டது, திருக்குறள் தமிழுக்கு மட்டும் உரிய நூல் அல்ல அது இந்த உலகுக்கே உரிமையானது என்று காட்டவே தமிழ் என்ற சொல்லை ஒருமுறை கூடப் பயன் படுத்தாது உலகு ஞாலம் முதலிய சொற்களைத்

திரும்பத் திரும்ப அவர் சொன்னதன் காரணம்.

எனவே வாமனனுக்குப் பின் உலகை அளந்தது யார் என்று யாராவது கேட்டால் நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுங்கள் அம்பது முறைக்கு மேல் அளந்த வள்ளுவன் என்று.

பாரதி சரியாகத்தானே பாடி இருக்கிறான்,

"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு."