பொற்கொடி
சத்தியமாக இது சுயபுராணம் இல்லை. ஆட்டோபயாகிரபி எழுதும் எண்ணமும் எனக்கில்லை,
சொல்ல வந்த விஷயமே வேறு, அது மனம் பற்றி, மனோ சக்தி பற்றி, எண்ணங்களின் வலிமை
பற்றி, எழுத்தின் வலிமை பற்றி, சொல்லின் சக்தி பற்றி. அல்லாமல் வேறு எதுவும் இல்லை.
இது நடந்து இருபத்தி ஆறு வருடம் ஓடிவிட்டது. 1980-81. இளநிலைத் தொலைபேசிப்
பொறியாளராகச் சென்னையில் நான் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த சமயம் . வெறும் 210
ரூபாய் ஸ்டைபெண்ட்டில் நாங்கள் மூன்று வேளையும் உண்டு வாரம் ஒரு சினிமாவும்
பார்த்தோம் அதுவும் சென்னையில் என்றால், நீங்கள் நம்புவீர்களோ என்னவோ, அது நிஜம்.
பயிற்சி பயிற்சி கடுமையான பயிற்சி. தினமும் ஏதாவது ஒரு பாடத்தில் ஏதாவது ஒரு
டெஸ்ட்.
என்னையும் சேர்த்து எங்கள் பேட்ச்சில் 32 பேர். எல்லாரும் குறைந்த பட்சம் அவரவர்
காலேஜில்
First Rank First என்றால் எங்களுக்குள் போட்டி எப்படி இருக்கும் என்று பார்த்துக்
கொள்ளுங்களேன்.
படிப்பு படிப்பு என்று என்றும் எப்பவும். நானும் அய்யாச்சாமியும் மட்டும்
விதிவிலக்கு. நாளைக்கு டெஸ்ட் என்றாலும் முதல்நாள் சினிமா நிச்சயம். பாடம்..?
விடியற்காலம் நாலுமணி வேறு எதற்கு இருக்கிறது?
இதில் ஞாயிற்றுக் கிழமை மட்டும் நான் அய்யாச்சாமியைக் கழற்றிவிட்டு விடுவேன்.
காரணம்,
ஏதாவது கன்னிமாரா நூலகம், மயிலை இராம கிருஷ்ணா நூலகம், பிரிட்டிஷ் கவுன்சில்
லைப்ரரி பல்கலைக்கழக நூலகம் என நுங்கம்பாக்கத்தில் இருந்து நடந்ந்ந்தே போய் நாள்
பூராப் போதுபோக்கி நடந்ந்ந்தே மீள்வேன். டவுன் பஸ் என்னாச்சு என்று கேட்டால, நான்
சொல்வது எல்லாம் ஸ்டைபண்ட். கட்டாது சாமி.
இப்படி எல்லாம் நடக்கும் போதும் சரி, இல்லை ஹோட்டல் கார்டனில் (அப்போது மதிய
சாப்பாடே ரூபாய் 1.50 தான்) அல்லது வெல்கம்மில் சாப்பிடும் போதும் சரி, இவை
இரண்டும்தான் எனக்குக் கவிதைக் கரு உருப் பெறும் நேரங்கள். அசை போட்ட படியே நடந்து
விடுதி வந்து படபடவென எழுதித் தள்ளுவேன். எழுதிய மறுநாளே அதை எங்கள் வகுப்பில்
இரண்டு பீரியட்களுக்கு இடையே கிடைக்கும்
அவகாசத்தில் ( வாழ்க லேட்டாய் வரும் வாத்தியார்) எல்லோர் கையிலும் சுழல விடுவேன்.
வகுப்பு முடிவதற்குள் ஒரு சுற்று சுற்றி என் கைக்குக் கவிதை மீண்டு வரும்.
பிராக்டிகல் வகுப்புகளின் முற்பகுதியில் வாத்தியார் வருவதற்குமுன் என் கவிதைகள்
விமர்சிக்கப் படும், வியக்கப் படும், சிலசமயம் அர்ச்சிக்கவும் படும்.
என் விமர்சகர்களில் தலையாய பெண் ஹேமலதா. என் கவிதைகளின் பரம இசிகையும் கூட.
இப்பொழுது ஹேமலதா பற்றிக் கொஞ்சம். ஹேமலதா ஒரு versatle genius. எங்கள் ஆண்
நண்பர்கள் வட்டத்துள் நான் ஹேமலதாவுக்கு இட்ட பட்டப் பேர் அறிவு ஜீவி. எல்லோரும்
விழுந்நு விழுந்து படிக்கும் போது பாடங்களை மிகவும் லைட்டாக எடுத்துக் கொள்வது இவள்
பழக்கம். குங்குமம் தரிக்கும் பெண்கள் மத்தியில் இவள் மட்டும் விரல்களில் அல்லாமல்
கைகளில் தரிப்பது கணையாழி
நாங்கள் பேசிக் கொண்டேஇருப்போம், இராமாயணம் மாபாரதத்தில் இருந்து, நா.பார்த்தசாரதி
வரை. சங்க இலக்கியம் தொட்டு மேத்தாவின் கண்ணீர்ப் பூக்கள் வரை. சமயம், த த்துவம்,
இலக்கியம் என என க்கு எல்லாவற்றிலும் ஈடு கொடுக்க ஹேமா எப்பவுமே ரெடி. கணியன்
பூங்குன்றனில் இருந்து, அன்றைக்கு ஜனரஞ்சக எழுத்தாளராக இருந்த இந்துமதி வரை
அனைவரையும் அலசுவோம். மாலன், பாப்ரியா ஞானக்கூத்தன் மனுஷ்ய புத்திரன் என எங்கள்
வாயில் மாட்டிக் கொள்ளாத பேர்கள் யாருமே இல்லை.
அப்போது சில ஆங்கிலக் கவிதைகள் கூட எழுதினேன்,
man the magnum opus among the great poems that God has composed -
I am very much proud to be a poet among Men, for my words are not words, they
are swords என்ற மாதிரி ஏதோ எழுதியதாக ஞாபகம், இப்போது சரியாக நினைவில் இல்லை,
தொலைந்து விட்டது, சரியாகச் சொல்லப் போனால் தொலைக்கப் பட்டு விட்டது, ஏன், obsolete
ஆகியதால் காணாது போய் விட்டது, எங்கள் இன்ஸ்ட்ரக்டர் சுந்தரம் சார் கொடுத்த
நேர்த்தியான லைன்ஸ் அண்ட் கேபிள்ஸ் நோட்ஸ் போல என வைத்துக் கொள்ளுங்களேன்!
ஆங்கில மொழியும் ஆங்கில இலக்கியமும் கூட ஹேமாவுக்கு அத்துப் படி. ஆங்கிலத்தைப்
பொறுத்த மட்டில் ஹேமா என் கட்சி. அது என்ன, ஆங்கிலம் தெரிய வேணும் என்றால், அந்தக்
காலத்தில் சொல்வார்கள், ஹிந்துப் பேப்பர் படி என. நான் இதை ஏற்றுக் கொள்வதில்லை.
என்னைப் பொறுத்த வரை நியூஸ் பேப்பர் சுத்த போர். படிக்க ப் பொறுமை வேண்டும்.
அதுவும் ஹிந்துப் பேப்பர் ரெம்பப் போர்.
இப்படிப் பேப்பர் படித்துத்தான் ஆங்கில அறிவு வளர வேண்டும் என்றால் நான் ஓடியே போய்
விடுவேன். என்னைப் பொறுத்த வரை எனக்கு அந்த மொழி அறிவை ஓரளவு அளிந்த நூல்கள் சுவாமி
விவே கானந்தரின் complete works, சுவாமி சிவானந்தரின் நூல்கள், Lopsung Rampaவின்
புத்தகங்கள், கிருஷ்ணமூர்த்தியின் த த்துவங்கள், இரஜனீஷின் குதர்க்க வாதங்கள்,தயை
கூர்ந்து சிரிந்து விடாதீர்கள், டார்ஜானின் நாவல்களில் இருந்து பெர்ட்ன்ன்ட்
ரஸ்ஸலின் தர்க்கம் வரை கண்டது கற்றேன். தமிழர் வரலாறு, இலக்கியம், ஆங்கிலம் என
என்னோடு சகலத்திலும் ஈடு பாடு காட்டி உற்சாகப் படுத்தி ஊக்குவிப்பதில் ஹேமாவுக்கு
நிகர் வேறு யார்?
ஹேமலதாவுக்கு அடுத்த படி என் பாடல்களை இரசித்தவர்கள உடன் பயின்ற மெய்கண்ட மாணிக்கம்
, பயிற்சி முடியும் தருவாயில் Indian Bank-ல் வேலை கிடைத்துச் சென்று விட்ட
குமுதினி, ஆர்ப்பாட்ட மில்லாமல் சிரித்த மகிழ்ந்த மாலதி சேகரன், அமைதியாக இரசித்த
உஷா, எல்லோருக்கும் கவிதை காட்டுகிறீர்களே, எனக்கில்லையா, எனக் கேட்டுப் பிடுங்கி
இரசித்ததாக பாவ்லா காட்டும் லலிதா
எனப் பட்டியல் இட ஆரம்பித்தால் நீளும், எனவே வேண்டாம்.
சாதனை சாதனை என ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற வெறி ஹேமலதாவுக்கு. கண்ணின்
கருமணிக்குள் குவியத்தூரம் எங்கே என்றால் கனவுகள். வார்த்தைகள் எல்லாம் ஒரே இலட்சிய
வேகம். சகலத்தையும் படித்துக் கரைத்து உறிஞ்சி விட வேணும் என்கிற துடிப்பு. இதுதான்
ஹேமா.
பாரதி கண்ட புதுமைப் பெண்.
சாதம் படைக்கவும் செய்திடுவோம் - ஒரு
சாதி படைக்கவும் செய்திடுவோம்.
இதில் சாதி என்பது, சாதனை என்பதின் வினைச் சொல். என்னுடன் பயின்றவர்களுக்கு
இலட்சியம் என்பதும் சாதனை என்பதும் சின்னச் சிறு வட்டங்களுக்குள் அடங்கி விட்டன.
காலேஜ் பஸ்ட்டுகளும், யுனிவர்சிட்டி ரேங்குகளும் இப்படிச் சின்னச் சின்ன
வட்டத்துக்குள் சிறைப் படுவதில் இஷ்டமில்லை எனக்கு.
மிஞ்சி மிஞ்சிப் போனால் பெண்ணின் கனவுகள் கலியாணத்தோடு அஸ்தமனம். அவள் சாதனை
எல்லாம் குழந்தை பெறுவதிலும் வளர்ப்பதிலும். அப்புறம் . அப்புறம் என்ன மிஞ்சி
மிஞ்சிப் போனால் சென்னையில் ஏதாவது ஒரு பாக்கத்தில் ஒரு வீடு கட்டுவதோடு
நிறைவடைந்து விடுகிறது. வேலையில் சேர்ந்து என்ன பெரிதாகச் சாதித்தோம் என்றால் பலன்
பூஜ்யம். ஏதோ எங்கள் Batch-ல் ஒரு மெய் கண்ட மாணிக்கமும், ஒரு சுசீலாவும் மட்டும் ,
DGM ஆனார்கள் என்றால், ப்பூ, இவ்வளவுதானா சாதனை என்பது?
என்னைப் பொறுத்த வரை பதவி என்பது ஒரு பெரிய சாதனை அல்ல, அது வெறும் மதிப்பு, ஒரு
பவர் அவ்வளவே! செய்ய வேண்டியதும், அடைய வேண்டியதும் எவ்வளவோ இருக்கிறது. என்ன
விட்டுச் சென்றாய் இந்த உலகத்துக்கு என்று யாராவது நாளை கேட்டால் பேர் சொல்வது போல்
ஏதாவது வேண்டும், இன்றுள்ள மக்களுக்குப் பேர் சொல்வது போல என்றால் பேரன்
பேத்திகளோடு வாழ்வு நிறைவு அடைந்ததாக ஆகிவிடுகிறது. வாழ்க்கை என்பது அறுபதுக்குப்
பின் வாய்ப்பே இல்லை, பேப்பே என்று ஆகிவிடுகிறது, வெறும் வெற்றிடமாய்ப் போய்
விடுகிறது.
இவ்வளவு நீட்டுகிறாயே, நீ என்ன பெரிதாய்க் கிழித்தாய், என்றால், கிழிக்க நிறைய
இருக்கிறது. நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை, ஆரம்பம் என்பதே எனக்கு அறுபதுக்குப்
பின்தான். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்,
மனிதன் என்றால் எல்லார் மாதிரியும் போல் இலலாமல் மா- திரியாக இருந்து வெளிச்சம்
தரவேண்டும். நூறு தலைமுறை தாண்டினாலும் அங்கு அவனது அடையாளம் தெரிய வேணும், பேர்
சொல்லப் பட வேணும், அவன்தான் மனிதன்.
போதும். இப்போது மீண்டும் ஹேமா. இவள் ஒரு அறிவுஜீவி இரகம் என்றேன். அறிவு ஜீவி
என்றால் அந்தக் காலத்தில் கண்டிப்பாக ஒரு ஜோல்னாப் பை இருக்கும். அவளுக்கும்
இருந்தது, அந்தப் பை நிறையப் புத்தகக் கனம் , தலை நிறைய. மல்லிகைப் பூக்களுக்குப்
பதிலாக, அகந்தை இல்லாத அறிவுக் கனம்.
அந்தச் சங்க காலப் பாடல் படித்திருக்கிறீர்களா, நினைவில் இருந்து எழுதுகிறேன், பிழை
இருப்பின், தமிழ்புலவோர் பொறுத்தருள்க.
சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டுள னோ என வினவுதி, என்மகன்
யாண்டுள னாயினும் அறியேன் ஓரும்
புலி சேர்ந்து போகிய கல்லளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே.
வீரம் பொருந்திய பையன் எங்கே என்றால் சங்க காலத் தாய் சொல்வாளாம், போய் எங்காவது
ஓரு போர்க்களத்தில் பாருங்கள் என்று.
அதே போல்தான் எங்கள் ஹேமாவும். எங்கே காண வில்லை என்றால் சென்னைக்குள் எதாவது ஒரு
நூலகத்தில் இருப்பாள். ஞாயிற்றுக் கிழமைகளிலும், விடுமுறை நாட்களிலும் நிச்சயமாக
அவளை நான் எங்காவது ஒரு நூலகத்தில சந்திப்பேன் அல்லது நூலகம் போகும் போது அண்ணா
சாலைப் பக்கம் பார்ப்பேன். மற்றபடி புத்தகம் எடுக்கும் போது புத்தக அடுக்கின் மறு
புறம் அவள் முகம் தெரிந்த து என யாரும் சினிமாத் தனமாக க் கற்பனை செய வேண்டாம்.
என்னமோ தெரிய வில்லை, அந்தக் கால கட்டம் வரை நான் எழுதிய கவிதைகளில் எல்லாம் ஒரே
சோகம் இழையோடும். பிராக்டிகல் வகுப்பின் இடைப் பட்ட நேரங்களில் ஹேமா என்னைச் சொல்
வில் கொண்டு சீண்டுவாள்.
' என்ன சார் இது, உங்களுக்கு இதை விட்டால் வேறு சப்ஜக்டே கிடையாதா, ஒரே சோகம், ஒரே
தேடல் இல்லை சாடல், த த்துவம், மாயை, சமயம் மரணம், இரணம் இதை எல்லாம் விட்டு எழுதவே
தெரியாதா?'
நிமிர்வேன் நான். மேலும் உசுப்பி விடுவாள். பற்றி எரியும் கவிக் கனலுக்கு நன்கு
விசிறியும் விடுவாள். வேறு என்ன, என் விசிறி ஆயிற்றே!
' வேறு சப்ஜக்ட் என்றால் என்ன, சொல்லுங்களேன் ' என எம்பிக் குதிப்பேன் நான்.
' ஆமாம் சார், உங்களுக்கு அகத்துறைப் பாடல்கள் என்றால் வரவே வராது, சுட்டுப்
போட்டாலும் . . .!' எனமீட்டும் மீட்டும் சுடுவாள்.
என்னால் எழுத முடியாதா என்ன? எனக்கு இது ஒரு சவாலாகப் போய் விட்டது. என் கவிகளின்
கட்டு மானத்திற்கு மானப் பிரச்சினையாகவும் போய் விட்டது. என்னைவிட ஆறு வயது சிறிய
பெண், போன வருஷம்தான் கல்லூரி முடித்து எல்லாவற்றிலும் எனக்குச் சமதையாகச்
சமர்த்தாகப் பேசி ஈடுகொடுத்துக் கேள்விகள் கேட்கிறது. குத்தி விடுகிறது . துச்சமாக
மதித்த எனக்கே என் ஈகோ மெல்ல அடிபட்டது. இப்படிச் சிந்திப்பது தெரிந்தால் இவள்
பார்வையில் நான் ஒரு Malchavanist ஆய்விடுவேன்.
' உங்கள் கவிதைகள் எல்லாமே ஒரே மாதிரி proto type வாழ்க்கை நிலையாமை, மாயா
தத்துவம், அழுகை என அதுவும் மரபுக் கவிதைகள்! கொஞ்சம் மாடர்ன் யுகத்துக்கு வந்து
புதுக் கவிதை என
எழுதவே தெரியாது சார் உங்களுக்கு . . !'
பாசிட்டிவாக இல்லை நெகட்டிவாக - இரண்டு வித த்திலும் ஒருவரைத் தூண்டி விடலாம்,
இதில் ஹேமா இரண்டாவது இரகம் . எதிர்மறை எப்பவும் எனக்குப் பலன் அளிக்கும்.
உசுப்பி விடப் பட்டேன் நான். அகத்துறைப் பாடல்கள் After all Love poems, முடியாதா
என்ன? சவாலை ஏற்றுக் கொண்டேன்.
' ஓகே எழுதி முடிக்கிறேன் அதுவும் இரண்டே நாட்களில் . . . ! '
கற்பனையாக ஒரு காதலியைச் சிருஷ்டித்தேன். எனக்கு எப்பவுமே சோகம் என்பது கை வந்த கலை
ஆயிற்றே. எனவே அவளைப் பிரிந்தேன். பிரிந்த விரகத்தைத் தாபத்தை வடித்தேன் புதுக்
கவிதைகளில்.
மொத்தம் 64 கவிதைகள். பரபரக்கும் பாடம் பரீட்சைகளுக்கு மத்தியில் இராப் பகலாய்
கற்பனைக் குமிழ்களை ஊதித் தள்ளினேன்.
விளைவு. . ?
சோப்புக் குமிழிகள்.
அந்த 64 கவிதைகளுக்கும் யான் இட்ட தலைப்பு இது. வண்ண வண்ணமாய் மாயா ஜாலம் காட்டிப்
பட்டென்று வெடித்துச் சிதறி ஒன்றுமே இல்லாமல் காற்றில் கரைந்து போன குமிழிகள் அவை.
சிவ இராத்திரி முழுக்க விடுதியின் உள்ளே விளக்கு எரிந்தால் மற்றைய என் உடன்
உறைபவர்களுக்குத் தொந்தரவு என்று, வெளி வராண்டாவில் விளக்கெரித்து விடிய விடியத்
':தேவை இன்னொரு திரிபுர தகனம்' என்ற தலைப்பில் சிவபெருமானைத் தொழுது ஏத்தி
கவிப்பூக்களை மலர்த்திய என் காற்று விரல்கள் இப்போது சோப்புக் குமிழிகளையும் ஊத த்
தொடங்கி விட்டன என்றால் இவை யாருக்காகவும் அல்ல வெறும் சவாலை ஏற்று மட்டுமே என்பது
மட்டும் அப்பட்டமான நிஜம்.
ஆனால் நம்பத் தயாராக இல்லை யாரும். இது மட்டும் எனக்கு விளங்க வில்லை. த த்துவக்
கவிதைகளைப் பார்த்து இரசித்த கூட்டம், காதற் கவிதைகள் என்றால் படித்து இரசிக்கிறது.
போக்கிடமே அற்ற இந்தப்
பூவுலகில் தினம் விளையும்
போதிமரத் தோப்புக்களோ கோடி - எனில்
புத்தனைத்தான் காண வில்லை தேடி.
தாக்கும் வழி தான் உணர்ந்தும்
தப்பும்வழி அறியாமல்
தவிக்கும்வழி அர்ச்சுனர்கள் கோடி - இதில்
சாரதியைக் காணவில்லை தேடி
என்று அப்போது எழுதிய போது அற்புதம் என்று ஹேமலதாவால் சிலாகிக்கப்பட்டு, மெய்கண்ட
மாணிக்கத்தாலும், மாலதி சேகரன், குமுதினி முதலியவர்களால் மட்டுமே பாராட்டப் பட்ட
என்கவிதை சோப்புக் குமிழ்களாகப் பரிணமித்த போது மட்டும் எல்லாரும் ஏதோ வாங்கி
வாங்கி மாற்றி மாற்றிப் படித்து வகுப்பே ஆஹா ஓஹோ போட் டதுதான் ஆச்சர்யம்.
சோப்புக் குமிழ்களில் எத்தனையோ, மறந்து விட்டேன், நினைவில் நின்ற மாதிரிக் கவிதை
ஒன்று இதோ.
பிரிந்த போது
நீ எனக்குப் பரிசாகத்
தந்த பேனா
இன்று வரை எழுதப் படாமல்
உறங்குகிறது பெட்டியில்
என் பேனாவோடு.
பாவம்
அவைகளாவது சேர்ந்திருக்கட்டும் . . .
படித்துப் பாராட்டிய இலக்கிய வட்டம், வாசகர் வட்டம் ( குறிப்பாகச் சொல்ல வேணும்
என்னில், உமா உஷாக்கள், சுசீலாக்கள், இராஜேஸ்வரிக்கள் எல்லாம்) என்னைப் பார்த்துச்
சிரித்தபடியே கேட்ட ஒரே கேள்வி,
' என்ன சார், இது, உங்க சொந்தச் சோக க் கதையா?'
நான் இல்லை என்றாலும் நம்புவார் இல்லை.
' கிடையவே கிடையாது சார். நிச்சயம் ஏதும் ஒரு லவ் பெயிலியர் இருக்கும். இல்லாமல்
இப்படி உருக்கமாக எழுதவே முடியாது...!'
என்று எல்லோரும் சொல்லி வைத்தாற் போல் முரண்டு பிடித்தால் நான் என்ன சொல்ல?
' ஓகே, அப்படி என் கவிதைகள் உங்களை நினைக்கத் தூண்டியிருக்கும் பட்சத்தில் நான் அதை
என் கவித்துவத்திற்குக் கிடைத்த வெற்றியாக க் கருதிக் கொள்கிறேன் அவ்வளவே' என்றேன்.
சோப்புக் குமிழிகளை மரபுப் படுத்த நான் முயன்ற போது உருவானவைதாம் என் கண்ணன் -
இராதை பாடல்கள். அகத்துறைப் பாடல்கள் என்றாலும் சோப்புக் குமிழிகள் ஏற்படுத்திய
தாக்கத்தை இவை ஏற்படுத்த தது என்னவோ நிஜம்.
அத்தோடு நிறுத்திக் கொண்டேன் என் அகத்துறைப் பாடல்களை. அப்புறம்?
அப்புறம் என்ன வழக்கம் போலத் த த்துவப் பாடல்கள்தாம். உருகி உருகி எழுத்து எழுத்தாக
இரசிக்க இந்த ஹேமலதாவால் மட்டும் எப்படி முடிகிறது ? 1969 தொட்டு எழுதுகிறேன்
என்றாலும் இந்தக் கால கட்டத்திலதான் அதிகப் பாடல்கள் எழுதினேன். ஆனால் அவை எல்லாம்
இன்று இருக்கிறதா என்றால் கொஞ்சம் மட்டும் உண்டு நிறைய இல்லை.
பயிற்சிக் காலம் பத்து மாதங்கள் பறந்தோடியது தெரியவே இல்லை. அடுத்து அவரவர் ஊரில்
இரண்டு மாதம் பிராக்டிகல் ட்ரைனிங அப்புறம் போஸ்ட்டிங் . கடைசி நாள். ஹேமலதாப் பெண்
என்னை நிறையவே கேட்டுக் கொண்டாள்.
' சார் ஒன்று கேட்பேன் செய்வீர்களா? நீங்கள் எப்போது எங்கு எந்தக் கவிதை அல்லது கதை
எழுதினாலும் அதை உடனே எனக்கு அனுப்பி வையுங்கள். முதலில் வாசிப்பது நானாகத்தான்
இருக்க வேண்டும்'
என்று வரம் கேட்டாள் என் முதல் வாசகி.
அப்படியே ஆகுக - என்றேன் நான்.
என் கூடப் படித்தவர்களில் பெரும்பாலோர் சென்னைவாசிகள். ஹேமாப் பெண்ணுக்குத்
தாம்பரம் எனவே சென்னையிலேயே பிராக்டிகல் டிரைனிங். நானும் பிறந்த ஊர் பக்கம்
போனேன். அடுத்த இரண்டு மாதங்களில் மூன்று தடவை எனக்கு அவளிடம் இருந்து கடிதம்
வந்தது. குண்டு குண்டாகத் தனித் தனி எழுத்துக்கள் அவளுக்குப் பிடித்தமான நீலப்
பச்சை மையில். நானும் மூன்று தடவை பதில் போட்டேன், ஒவ்வொரு தடவையும் புதிய புதிய
கவிதைகளோடு, அதுவும் என் வழக்கமான பாணியில், அதாவது தத்துவக் குப்பைகளாக
அன்று நான் அனுப்பிய கவிதைகள் இப்போது எங்கு போயின எனத் தெரியவில்லை. இருந்த போதும்
மிச்சம் சொச்சமாக என் நினைவில் இருந்து ஒருசில வரிகள்.
மத்தாப்பூக் கற்பனைகள்
மனசெல்லாம் பூத்திருக்க
முத்தாய்ப்பு வைத்ததுபோல்
முந்நூறு யோசனைகள்
முந்நூறு யோசனைகள்
முயன்றுவழி நடந்தாலும்
முள்வேலி தாண்டலியே - நான்
முடிசூடக் காணலியே
முத்துஇரதம் ஏறிமனம்
மூளைசொலும் பாதைஎல்லாம்
எத்திக்கும் போய்வரவே
ஏற்பட்ட தோரணங்கள்
ஏற்பட்டதோ ரணங்கள்
இதயத்து வலிமறக்க
நேர்ப்பட்ட நிம்மதிகள் - எலாம்
நீர்க்குமிழி மாயமடா
தலைக்குள்ளே பட்டாசுச்
சரவெடிகள் வெடிக்கின்ற
நிலைக்குள்ளே நம்மவர்க்கு
நி மி ட நிலைத் தேன்துளியா?
நிமிடத்தில் நிலைத்தேனாய்
நின்றிருக்கப் பிழைத்தேனாய்
எமதருமன் வருமுன்னர் - ஓர்
ஏலேலாப் பாடேனா ?
இப்படியாக அந்தப் பாடல் நீளும். வேண்டுமென்றே மற மற என்று அந்தப் பாடலை நான் மறக்க
முயன்றாலும், சில வரிகள் இன்றும் வந்து நிழலாடத்தானே செய்கின்றன ?. பாடல் கிடைத்த
அடுத்த கணமே அதை இரசித்து ருசித்து அட டே அட டே அட்டகாசம் எனக் கடிதம் எழுதினாள்
அந்தப் பெண். அந்தக் கவிதையை எத்தனையோ முறை படித்து விட்டாளாம். மீண்டும் மீண்டும்
படித்துக் கொண்டே இருப்பாளாம். அடிப் பெண்ணே, இத்தனைக் கவிஞானக் கிறுக்கு ஆகாதடி
உனக்கு!
அந்த இரண்டு மாதங்களும் முடிந்து விட நான் இராமநாத புரத்தில் ஜூனியர் எஞ்சினியராக
வேலை ஒப்புக் கொண்ட போது அந்தப் பெண் சென்னை VFT ஸ்டேஷனில் அதே வேலையில்
சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் விதி வேறு இடத்தில் அவளைக் கொண்டுபோய்ச்
சேர்த்துவிட்டது.
தாம்பரம் இரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பார்ம் நுனி ஓரம் அவள் நின்றிருந்த போது
எலக்ட்ரிக் டிரெயின் வந்ததை அவள் கவனியாது விட மண்டையில் மோதி முகம் உருக்குலைய
அநியாயமாகச் செத்துப் போனாள். மெய்கண்ட மாணிக்கம் அடுத்தநாள் இதை எனக்குச் சொன்ன
போது கலர்கலராய் வண்ணமிட்ட சோப்புக் குமிழிகள் வெறும் நீர்குமிழிகளாய் வெடித்துச்
சிதறின. அவளை இன்னார் என அடையாளம் காட்டியவை அவளது லைப்ர ரிப் புத்தகங்களும்
அட்டைகளும் மட்டுமே.
வானுறு மதியை அடைந்தது உன் வதனம்
மறிகடல் புகுந்தது உன் கீர்த்தி
கானுறு புலியை அடைந்தது உன் வீரம்
கற்பகம் அடைந்தது உன் கரங்கள் . . .
இது ஒரு அறம் வைத்துப் பாடிய கவிதை. எழுதிய புலவர் பேர் தெரிய வில்லை. பாடி
முடித்தவுடன் மூன்றாம் ந ந்தி வர்ம பல்லவன் இறந்தான் என்பது மெய்யோ பொய்யோ எனக்குத்
தெரியாது. நான் பாடிய கவியில் இந்தப் பாழாய்ப் போன அறம் ஏன் வந்து தொலைத்தது?
கணப் பொழுதில் கனவுகள் கருக, இலட்சியங்கள் பொடியாக, குறிக் கோள்கள் தீய, சாதனைகள்
நொறுங்க ஏன் பிறந்தாள் இந்த ஹேமா? எதற்கு இவ்வளவு அவசரமாய் இறந்தாள்? அடுத்த நாளே
என் மரண ஓலக் கவிதைகளை, சோகப் பாடல்களை, எல்லாம் ஒன்று சேர்த்துப் பக்கத்து
ஊருணியில் கடாசி எறிந்தேன். எறிந்து அன்றைக்கு முடிவெடுத்தேன், இனிமேல் அமங்கலப்
பாடல்களே இயற்றக் கூடாது என.
பி.கு - இது நடந்து இருபத்து ஆறு வருடம் கழித்து எங்களோடு அந்க் காலம் பயிற்சி
எடுத்த சுதாவைச்
சென்னையில் ஒரு செமினார் பங்கேற்ற போது சந்தித்தேன். நேரில் பத்து நிமிஷம் பேசிய
சுதா ஆகட்டும், இல்லை, போனில் பேசிய இராஜேஸ்வரி ஆகட்டும் பூரா நேரமும் எங்களுடன்
பயின்ற
எல்லாரையும் பற்றி, மெய் டெல்லி போனது பற்றி, பழநி அம்மாள் ஸ்கேன்டலில் மாட்டிக்
கொண்டது பற்றி, மாலதி சேகரன் பாட்டி ஆனது பற்றி, உஷா இன்னும் அப்படியே ஒல்லியாக
இருப்பது பற்றி, அய்யாச்சாமி ரிட்டயர்ட் ஆனது பற்றி, இராதா கிருஷ்ணன் பால
சுப்ரமணியம் இறந்து போனது பற்றி, சுசீலா DGM ஆனது பற்றி , வேறு யாருக்கோ குழந்தை
சரியில்லாதது பற்றி, சங்கரை இன்னும் பெண்கள் சைட் அடிப்பது பற்றி, ஊர்கதை உலகக் கதை
எல்லாம் பேசினோம் என்றாலும் யாருமே ஹேமாவை நினைவு கூறாத துதான் எனக்கு கொஞ்சம் மன
வருத்தம்.
- மகுட தீபன் முகவை 24-01-2007
- 1 .ஆகா பாடலாம்
- 2. மெல்லத் தமிழ் - 1
- 3. மெல்லத் தமிழ் - 2
- 4. மெல்லத் தமிழ் - 3
- 5. பொற் கொடி
- 6. முக்திப் பால்
- 7. உலகப் பொது மறை
- 8. கோணல் பார்வை
- 9. மனோ சக்தி
- 10.முப் பால்
- 11.நான் யார்?
- 12.நியூஸ்
- 13.பண்-பாடு
- 14.பிப்ரவரி-14
- 15.ஐந்தாம் தமிழ்
- 16.திட்டு
- 17.இயற்கை
- 18.ஏன் மறந்தோம்
- 19. குறளில் ஏழு
- 20. பிறந்தநாள்
- 21. வையுங்கள்
- 22. கவிதை
- 23. பெரிது பெரிது
- 24. ஐந்தாம் தமிழ்
- 25 .நடராசர்
- 26. கழுதை
- 27. பேசன் ப்ளஸ்
- 28. முட்டை
- 29. முதுகு தரிசனம்
- 30. பெரிது பெரிது
- 31. 50 ரூபாய்
- 32. நாதம்
- 33. மாடக்குழி
- 34. அபிராமி கோவில்
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .