tamil pages of magudadheeban

FEB-14




இன்னும் பத்து நாட்கள் இருக்கிறது, இருந்தாலும் களை கட்டி விட்டது. டி.வி. விளம்பரம், நிகழ்ச்சிகள், நியூஸ்கள், வாழ்த்து மடல்கள் விற்பனை எல்லாம். இளைஞர் பட்டாளத்திற்கு உற்சாகம் ஒரே பிரம்ம்புத்திராப் பிரவாகம். பொத்துக் கொண்டு வழிகிறது போங்கள். காதலர் தினத்திற்கு கட்டியம் கூறாதவர்கள் இனிச் சுத்த ஜடம் என்று சொல்லத் தக்கவர்கள்.

பதினாலு என்ற எண்ணின் சிறப்புகளைப் பட்டியல் இடுக என்று யாரேனும் பரீட்சையில் கேள்வி கேட்டால், எனக்கு நிச்சயமாகத் தெரியும், இன்றைய இளைஞர் சமுதாயம் முதலில் குறிப்பிடுவது பிப்,14 என்று. பாவம் , இந்தக் குதூகலத் திருவிழாக் கொண்டாட்டத்தில் நவ.14 குழந்தை வருங்காலங்களில் காணாமல் போவது உறுதி.
தீபாவளி இந்தியப் பண்டிகை என்பது போல ஒவ்வொரு தேசத்திற்கும் பண்டிகைகள் நிச்சயம் இருக்கும். ஆனால் மனித சமுதாயத்தின் ஒட்டு மொத்த பண்டிகை, உலகளாவிய பண்டிகை எது என்றால் இந்தக் காதலர் தினம் மட்டுமே என்றெல்லாம் பாசிட்டிவாக மனித ஒருமைப்பாடு மனத்தில் கொப்பளிக்க எண்ணிப் பார்த்து இறும்பூது கொள்ளேன் என்றால், என்னால் முடியாது, சாமி.

நான் ஒன்றும் இளைஞர்களின் கோலாகலக் கொண்டாட்டங்களுக்கு எதிரி அல்ல, சந்தோஷங்களுக்குப் பகைவனும் அல்ல. தாராளமாக க் கொண்டாடி விட்டுப் போகட்டும், ஆனால் எதை, எப்பொழுது, எப்படி என்பதுதான் கேள்வி. நான் சின்னஞ் சிறுவனாய் பள்ளி படித்த போது வருஷாவருஷம் பிப்ரவரி மாதம் வரத்தான் வந்தது, கூடவே தவறாமல் பதினாலாம் தேதி கூட வந்தது என்றால் இந்த வாக்கியத்தில் எந்த த் தப்பும் இல்லை என நினைக்கிறேன். பிப்ரவரி 29-ம் தேதி வேண்டுமானால் ஒரு மூன்று வருடங்கள் இடைஇடையே காணாமல் போய் இருக்கலாம், ஆனால் பிப் 14 ஏதாவது ஒரு வருடம் காணாமல் போனதாய் எனக்கு நினைவில் இல்லை.

அப்போது எல்லாம் வராத காதலர் தினம் இப்போது திடீர்என்று எங்கிருந்து வந்து குதித்தது?. அன்றைக்கு வராத பிப்-14 கொண்டாட்டங்கள் இன்று மட்டும் மந்திரக் கூடைக்குள் மாங்காய்ச் செடியாய் திடுதிப் என்று எப்படி முளைத்துக் கிளைவிட்டது?வாய்ப்பில்லையே, வாலண்டைன் பாதிரியாரின் காலம் நிச்சயமாக என் சிறு பிள்ளைப் பிராயத்திற்கு முன்புதான் என்றால், எந்த வரலாற்று ஆசிரியர்களும் என்னோடு சண்டைக்கு வர மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

நான் சின்ன வயதாக இருந்த போது இருந்த அந்தக் கால இளைஞர்களே,
இந்தக் காலத்தின் எனக்கும் மூத்த முதிய தலைமுறையே ! தெரியாமல்தான் கேட்கிறேன், நீங்கள் எல்லாம் ஏன் அப்போது காதலர் தினம் கொண்டாட வில்லை, ஒருவேளை உங்களுக்குக் காதலி யாரும் கிடைக்க வில்லையா, இல்லை, காதலே உதயமாக வில்லையா? அதுவும் இல்லை என்னில் வேறு என்ன, அந்தக் காலத் தலைமுறை என்ன அவ்வளவு கட்டுப் பெட்டியா, காதலே அரும்பாச் சடமா, ஹார்மோன் குறைபாடா, புத்தர் மாதிரி இருந்தார்களா, எதற்குமே வாய்ப்பில்லையே. அவ்வாறு எல்லாம் இருந்தால் இந்த மாமக்கள் தொகை எப்படி, இப்படிப் பல்கிப் பெருகி இருக்கும்? வேறு என்ன காரணம்?

மீடியா, மீடியா, அதுதான் காரணம். அது கிளப்பி வுடுறதுதான் எல்லாம்.
நட்டநடு நிசிக் கொண்டாட்டம், ஜாலி பைக் சவாரி, பீச்சி யடிக்கும் பீர் பாட்டில் ஊற்றுக்கள் என ஒரு கலாச்சார சீர் இழிவுக்கு வழிவகை செய்த தே இந்த மீடியாதான். இதில் தலையாய பங்கு டி.வி.க்கு உண்டு.

காதலர் தினம் அன்றும் இருந்தது, ஆனால் நம் நாட்டில் அதன் தாக்கம் ஏற்பட்டது இப்போதுதான். வெளி நாட்டில் இருந்து இறக்குமதி நம்நாட்டுக்கு அதிகம் உள்ளது எது என்றால், அது காரோ, பைக்கோ இல்லை, இந்தக் காதலர் தினக் கலாச்சாரம்தான்.

அடேய், நம் தமிழர்கள் பார்க்காத காதலையா இந்த வாலண்டைன் பாதிரி பார்த்துவிட்டார். ? நம் தமிழ்நாட்டில் இல்லாத அகத்துறை இலக்கியமா? நம் பண்பாட்டில் இல்லாத அனபும் அறமும் வேறு எங்கு இருக்க முடியும்?

வள்ளுவர் வாசுகி காதல் கதை வேண்டுமானால் உங்களுக்குக் கிடைக்காமல் போய் இருக்கலாம், ஆனால் காமத்துப் பாலின் நிஜக் காதல் தலைவன் வள்ளுவனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?

நம் மூதாதைகள் பண்ணாத காதலா?

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே . . அவர்
கன்னியராகி நிலவினில் ஆடிக்
களித்ததும் இந்நாடே . . தங்கள்
பொன்னுடல் இன்புற நீர் விளையாடிப்
போந்ததும் இந்நாடே !

ஆட்டன் அத்தி, ஆதி மந்தி காதல் பற்றி உங்களுக்குத் தெரியுமா, ஒரு அம்பிகாபதி - அமராவதி பற்றியாவது கேள்விப் பட்டதுண்டா, அகநானூறு, குறுந்தொகை என்பது பற்றி வட்டிக் கடைக் காரனிடம் கேட்டால் அவன் வேறு அர்த்தம் சொல்வான், நீ என்ன அர்த்தம் சொல்லப் போகிறாய்?

உடல் சார்ந்த காமத்தில் வெளிநாட்டான் மயங்கிப் பிதற்றிய இலக்கியங்கள் ஆகா ஓகோ எனப்பட, உளம் சார்ந்த காதலை வெளிப் படுத்தும் நம் தமிழ் இலக்கியங்களில் எத்தனை பேருக்கு எத்தனை பாடல் தெரியும் எனக் கேள்வி கேட்டு யாரையும் சங்கடப் படுத்த விரும்பவில்லை, ஒரு பாடலாவது தெரிந்தால் போதும் நீங்கள் நிச்சயம் தமிழன். உளம் சார்ந்த காதலையே ஓரம் கட்டி, ஆன்மா சார்ந்த காதலைச் சொன்ன (நாயகன் நாயகி பாவம்) இலக்கியங்கள் வேறெங்கும் இது வரை உதயமாகவே இல்லை, அவை இம் மண்ணுக்கு மட்டுமே சொந்தம் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா?

மதுர பாவத்தை divine love என்று மட்டுமே மொழிபெயர்க்கலாம், அதை சிருஷ்டித்து, உள்வாங்கி, உருகிப் பாட வேறு எந்த வெளிநாட்டு மொழியிலும் முடியாது, அப்படி அங்கே இலக்கியமும் கிடையாது. ஆனால் இங்கே உண்டு.

ஊனிடை ஆழிசங்கு உத்தமருக்கு என்று
உன்னித்து எழுந்த என் தடமுலைகள்
மானிட வர்கென்று பேச்சுப்படின்
வாழுகில் லேன் கண்டாய் மன்மதனே

- என்றெல்லாம் எங்கள் ஆண்டாள் மன்மதனை நோக்கி முறையிட்டதுபோல், வீனஸ் தேவதையிடம் யாராவது சொல்லி இருக்கிறார்களா?

அந்தக் காலத்திலே ஒரு பாலச் சந்தர் படம் ( நூற்றுக்கு நூறு என நினைக்கிறேன், சரியா?) தலைவன் அடித்துவிட்டுச் சென்ற டைப் ரைட்டர் கீ போர்டைத் தலைவி தாபத்தோடு வருடிக் கொடுப்பாள். அதில் எனக்கு விரசம் தெரியவில்லை, மாறாக க்
காதலின் பாவம் மட்டுமே தெரிந்தது.

இப்போது ஏதோ ஒரு ஞாயிற்றுக் கிழமை தொலைக் காட்சியில் ஏதோ ஒரு அஜித்-கிரண் படம் ஓடிக் கொண்டிருக்கச் சாப்பிடும் போது கொஞ்சநேரம் வேடிக்கை பார்த்தேன். பஸ் கண்டக்டராக நாயகன் அஜித். விசிலை ஊதி விட்டு, கையிலே வைத்துக் கல்லூரி மாணவிகள் முன் அவர்களின் உதட்டுக்கு நேரே ஆட்டுவார். அவ்வளவு மாணவியரும் ஓரு அஞ்சு நொடி பணால். இதில் எனக்குச் சத்தியமாக க் காதல் தெரியவில்லை. அசிங்கம் தெரிந்த து. பெண்மையைப் படுத்தும் இழிவு தெரிந்த து. கீழ்மை தெரிந்த து.

நான் கூட 'சோப்புக் குமிழிகள்' என்ற ஒரு புதுக் கவிதைத் தொகுதி ஒன்று எழுதிக் கூரிச் சாத்தா கண்மாயில் ஜலசமாதி செய்வித்தேன். எனவே இப்போது அது இல்லாவிட்டாலும், நினைவுன் இடுக்குகளில் இருந்து ஒன்று இதோ . . .(கெமிஸ்ட்ரி படித்தவர்களிடம் பிப்பெட் என்றால் என்ன என்று கேட்டுவிட்டுக் கவிதை படிக்கவும்)

'வேதியியல் சோதனைச்சாலையில்
நீ பயன் படுத்திய பிப்பெட்
திருடி எடுத்து வந்தேன்
என் அறைக்கு . . .
அப்போதைக்கு அப்போது
உன் நினைவு வரும் போதெல்லாம்
நாயனம் போல்
வாசித்து மகிழ்வேன்
ஊதி அல்ல,
உறிஞ்சி . . . '

இதில் தெரிவது விரசமா, காதலா என நீங்கள்தான் சொல்ல வேண்டும். பாலச் சந்தர் படம் ஆகட்டும், அல்லது மேலே சொன்ன என் கவிதையே ஆகட்டும் எதுவாயினும் எடுத்த இடம் ஒன்றே ஒன்றுதான். basic conceptஐக் கடன் வாங்கிய இடம் இதோ இங்கே இருந்துதான். . .

'கருப்பூரம் நாறுமோ
கமலப்பூ நாறுமோ
திருப் பவளச் செவ்வாய்தான்
தித்தித் திருக்குமோ
மருப் பொசித்த மாதவன்தன்
வாய்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கிறேன்
சொல் ஆழி வெண் சங்கே . . !'

-என்பது போல ஆங்கிலத்தில் ஏதாவது பாடல் கிடைத்திருந்தால், ஒரு ஷேக்ஸ்பியருக்கே இப்படித் தலைகால் புரியாமல் குதிக்கும் ஆங்கிலேயன், எம்மி எம்பிக் குதித்திருக்க மாட்டானா, என்ன? ஷேக்ஸ்பியர் என்றதும் இன்னொரு செய்தி, சொல்லாமல் இருக்க முடியவில்லை.

கல்லூரி நாட்களில் கவிஞர் மீராவின் கனவுகள்+கற்பனைகள்= காகிதங்கள் என்ற கவிதைத் தொகுதி கிடைத்தது. அதில் ஒரு கவிதை . . .

' நேற்று என்னை
நீ ஓரக்கண்ணால்
பார்த்த போது என் நெஞ்சில்
ஒரு முள் தைத்த து . . .
முள்ளை
முள்ளால்தானே எடுக்க வேண்டும்
எங்கே,
இன்னொரு முறை பார் . . '

முப்பத்துஐந்து வருடம் முன்பு படித்ததை மேலே எடுத்துக் காட்டி இருக்கிறேன் நினைவில் இருந்து. எனவே . வார்த்தைப் பிழை கவிதையில் இருப்பின் மன்னிக்க.

இந்தக் கவிதையைக் கல்லூரியில் படித்து விட்டு சூப்பரோ சூப்பர் எனப் புகழ்ந்தேன் என்றாலும், கொஞ்ச நாளில் அது vapaouro vapour என்று ஆகிவிட்டது, காரணம் ஹாம்லட். ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் தன் காதலியை இதே போன்று வர்ணிக்கிறான். அதே பார்வை. அதே முள். அதே மீண்டும் . . . மொழிதான் வேறு. தமிழ்க் கவிதை நினைவில் நின்றது. மேற்கோள் காட்டினேன். ஆங்கிலக் கவிதை வரிகள் நினைவில் இருத்த முடியவில்லையே என்செய்வேன்.?

ஆகா, மீராவின் கவி வரிகளுக்கு மூலம் ஷேக்ஸ்பியர் எனத் தெரிந்த போது புஸ் என்று ஆகிவிட்டது என் தமிழ்ப் பிரதாபம். கவலை எல்லாம் கொஞ்ச நாள்தான். காகித வாக்கில் ஏதோ புரட்டிய போது, கவலேல் மனம் என ஆறுதல் சொன்னது எனக்கு எது தெரியுமா, ஒரு திருக் குறள். இதோ அது . . .

இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு
நோய் நோக்கு, ஒன்று அந் நோய்க்கு மருந்து.

மூலம் ஷேக்ஸ்பியர் என்று சொல்லிய நான் இப்போது உச்சமாய் நிமிர்கிறேன். அதற்கும் அந்த மூலத்திற்கும் ஒரு ஆதி மூலம் உள்ளது, எது, அது நம் திருக்குறள்.


நம்மிடம் எல்லாம் இருக்கிறது. சகலமும் இருக்கிறது. இருக்கும் இடம்தான் நமக்குத் தெரியவில்லை. தமிழ்மொழிபற்றி, பண்பாடு பற்றி, நமக்கு சார்ட் சைட், லாங் சைட், குளுக்கோமா, ட்ரைக்கோமா முதலிய அனைத்துக் குறைபாடுகளும் உள்ளன என்பது அப்பட்டமான உண்மை. பாரதி வார்த்தையில் சொன்னால் குருடர்களாய் வாழ்கின்றோம். தடவிப் பார்த்தாவது தெரிந்து கொள்வான் பார்வையற்றவன். நாம்தான் அதைக்கூடச் செய்வதில்லை.

ஏன் இப்படிக் கோணற் பார்வை பார்க்கிறாய். காதலர் தினம் என்றால் ஏன் தப்பர்த்தம் எடுக்கிறாய், குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்காதே, அது அன்பை எல்லோர்க்கும் வெளிப்படுத்தும் தினம் என்றேல்லாம் சால்ஜாப்பு சொன்னால் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள் என்பேன், அவ்வளவுதான்.

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
மாதா பிதா குரு தெய்வம் . . .

என்றெல்லாம் நிதம் நிதம் பாடம் பயின்று வழிவழி வந்த நம் பாரத நாட்டில் வருஷம் ஒரு தடவை மட்டும் ஒரே ஒரு தடவை மட்டும் என Mothers day கொண்டாடுவது , வாழ்த்துச் சொல்வது எல்லாம் இன்னும் வேடிக்கை.

தங்கத் தமிழர்களே, காலண்டரைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு தயாராக இருங்கள், கூடிய சீக்கிரம் ஏதாவது ஒவ்வொரு இறக்குமதித் திருநாளில் இன்னும் நிறைய Father's day, auntys day, brothers day, sisters day, cousins day , grandpa day என்றெல்லாம் ஏகமாக க் கொண்டாட வேண்டி இருக்கிறதாக்கும்.

ஆறாக் கடுப்புடன்,

மகுடதீபன் முகவை 9486102034