tamil pages of magudadheeban -  
 

மெல்லத் தமிழ் இனிச் . . .


அலுவலகப் பணி நிமித்தம் யாரையாவது சந்திப்பேன். யாராவது என்னை யாருக்காவது அறிமுகம் செய்து வைக்கும் போது அவர்கள் (அதாவது நம் தங்கத் தமிழர்கள்) என்னிடம் கேட்கும் முதற் கேள்வி.
' சார், உங்க நேட்டிவ் . . .? '

எனக்கு இரண்டுமட்டும் விளங்க வில்லை. ஒன்று என் சொந்த ஊர் எதுவாக இருந்தால் இவர்களுக்கு என்ன ? சுற்றுலாச் செல்வதில் சோம்பேறிகள் யார் ? தமிழர்கள்தான். சொந்த ஊர் சொந்த ஊர் அதிலே என்னதான் அப்படி வாழ்கிறதோ தெரியவில்லை. எது எனக்குச் சொந்த ஊர் ? என் தாய் ஒரு ஊ.ர். தந்தை இன்னொரு ஊர். அவர்கள் பிழைப்புத் தேடிச் சென்றது மற்றொரு ஊர். பாட்டி தாத்தா இருந்ததோ இன்னொரு இன்னொரு ஊர்.

சனித்த ஊரில் படித்ததோடு சரி, முதல் இரண்டு எழுத்துக்கள் என்னைப்பிடித்தோடு சரி. கடைசி வரை வாடகை வீட்டிலேயே கழித்தோம். ஐந்து வெவ்வேறு ஊர்களில் வேறு வேறு வேலை பார்த்து விட்டேன். பிறந்த ஊர் என் அப்பாவுக்கு பிழைக்க வந்த ஊர் மட்டும் அல்ல, இறந்த ஊரும் அதுதான். செத்த உடலுக்கும் பிணத்துக்கும் ஜாதி பார்க்கும் ஒரு ஊர் எப்படி என் சொந்த ஊர் ஆகமுடியும் ? தந்தை செத்த போது வேற்று ஜாதிப் பிணம் என்று தூக்க வராத ஊர் எப்படி எனக்குச் சொந்தம் ஆக முடியும் ? ஏதோ காலம் போன கடைசியில் இங்கே வேலை பார்த்த ஊரில் வீடு கட்டினால், ' சார் உங்க நேட்டிவ். . .?'

'யாதும் ஊரே யாவரும் கேளிர் . . .!' என்று விடை சொன்னாலும் யாரும் விட்ட பாடில்லை. பிறந்த ஊரில் சொத்தும் இல்லை பத்தும் இல்லை. பத்து என்றது பற்று என்பதன் மரூஉ. எப்படிச் சொல்லி விளக்கினாலும், சமாளித்தாலும் ' எதுதான் சார் உங்க நேட்டிவ் . . .?'

சரியான விடை சொல்லாவிட்டால் கேள்வி கேட்ட வர்களுக்கே சுக்குநூறாகத் தலை வெடிக்கும் என்பது நவீன வேதாள சாபம் போல் இருக்கிறது. எனவே மீண்டும் ஒருமுறை ' சார் உங்க நேட்டிவ் . . .?'

' பையூரி லேபிறந்து பாழூரி லேயிருந்து
மெய்ஊரை அடைவதற்கு வேதாந்த ஊர்அறியேன் '

என்று ஆர் பாடியது ? எதுவுமே சொந்த ஊர் இல்லை என்று எப்படி இவர்களுக்கு விளங்க வைப்பேன் ?

இரண்டு மட்டும் எனக்கு விளங்கவில்லை என்று ஒன்றைச் சொல்லி முடித்துவிட்டேன். இப்போது இரண்டாவது.

கேள்வி கேட்டவனும் தமிழன். நானும் தமிழன். அப்புறம் எங்கிருந்து வந்தது இந்த ' நேட்டிவ் ?'
ஒருவேளை, கேட்டவனின் நேட்டிவ் இலண்டனோ ?

தெருவிலே ஏதோ சத்தம். எட்டிப் பார்த்தால் ஒரு இரவுடி ஆங்கிலம் பேசிக் கொண்டிருக்கிறான்.
' இன்னா மேட்டரு. . . ?'
மேட்டர் சூப்பர் முதலியன தமிழ் வார்த்தைகளாகி எவ்வளவோ நாட்கள் ஆகிவிட்டது தெரியாதா என நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது.

இருந்த தமிழ் வார்த்தைகள் எங்கு போய் ஒழிந்தன என்பதுதான் என் ஆதங்கம். படிப்பறிவில்லாத கிழவி பேசும் ஆங்கிலம் தாள முடியவில்லை.

' டேய், அவ பண்ற திருக்குசு வேலையைப் பார்ரா . . . '

என்றதும் யோசித்தேன், TRICKS என்பதா இந்த திருக்குசு.
இங்கிருந்து அங்கு சென்றதா இல்லை அங்கிருந்து இங்கு வந்ததா ?
ஆராய்வது என் வேலை அல்லை.

சமர்த்து என்பதே SMART . புருவம் என்பதா BROW ?
நாசி என்பதுதான் NOSE ஆக மாறி விட்டதோ ?
வாகனம்தான் WAGON என்று திரிந்து விட்டதோ ?
TREE-யின் உண்மையான வேர் எது ? தரு.

இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் முகவை வந்தபோது இங்கே அவ்வளவாக ஆங்கிலம் பழக்கத்தில் இல்லை. எந்த மாவட்டத்திலும் கேட்டறியாத ஒரு சொல் இங்கே கேட்டேன்.

உடன் பணிபுரியும் அன்பர்கள், ' சார் ஒன் அவர் பெர்மிஷன் வேணும். ஒரு கேதம்.' என்று கேட்ட போது விளங்கவில்லை. நான் திருப்பிக் கேட்டிருக்கிறேன்.

' அது என்ன கேதம் ? '

இப்போதெல்லாம் 2005. யாரும் அந்த வார்த்தையை பயன் படுத்துவதில்லை. பதிலாக

' சார் ஒரு டெத் . . ! ஒன் அவர் பெர்மிஷன் வேணும் .'

ஹிந்தியிலே கேத் என்றால் துக்கம் என்று பொருள். அந்த வார்த்தை எப்படி இங்கே என் தென்பாண்டி நாட்டில் சென்னைமுதல் மதுரை எல்லாம் விட்டு விட்டு முகவைக்குள் வந்து புகுந்தது ? யோசித்தேன். விடை கிட்டவில்லை.

கிட்டியது இன்னொரு நாள், நான் திருவாசகம் புரட்டிக் கொண்டிருந்தபோது. ஆகா, மணிவாசகர் நம்ம பகுதிக்காரர் ஆயிற்றே,

திரு உத்தர கோச மங்கையே கதியாகக் கிடந்தவர் ஆயிற்றே, திருவாசகத்தில் ஒரு இடத்தில் கூட வையை நதியைப் பாடாமல், அதே சமயம் எங்கள முகவைப் பக்கக் கண்மாய்களைப் பற்றிப் பாடியவர் ஆயிற்றே, என்று வியந்தவாறே கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன் கேதம் எனும் சொல்.

'கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை
வேதங்கள் தொழுதேத்தும் விளங்கு தில்லை கண்டேனே !'

என்பது மணிவாசகரின் கண்டப் பத்து. மணிவாசகம் தோன்றிய காலம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டு.

ஆக இற்றைக்குச் சற்றேறக் குறைய 1800 ஆண்டுகளுக்கு முன்பு தொட்டே இந்தப் பகுதியில் புழங்கி வந்த நல்ல தமிழ்ச் சொல் கேதம், கேவலம் ஒரு 25 ஆண்டிற்குள் முகவை என்ற பெரிய கிராமம், நகரம் (எழுத்துக்களைக் குழப்பியும் வாசிக்கலாம்) ஆகிவிட்ட ஒரே காரணத்தால் 'டெத்' ஆகிவிட்டது.

மாணிக்க வாசகர் தில்லைக்குச் சென்று பார்த்தாலும் அங்கே கூட எங்கள் முகவையின் திரு உத்திர கோச மங்கை மரகத நடராசரையே கண்டார் என்தற்குச் சான்று இந்த இரண்டு வரிகள்.

இப்பொழுதோ எங்கள் மக்கள் முகவையிலே இருந்து கொண்டு தம் சொந்தச் சொல்லைத் தொலைத்துவிட்டு இலண்டனைப் பார்க்கிறார்கள்,
பேசுகிறார்கள்.

என்ன செய்ய. மணிவாசகர் வார்த்தையிலேயே சொல்லுகிறேன். இவர்கள்,

' தம் பெருமை தான்றியாத் தன்மையர் காண் சாழலோ . . .! '

- ம கு ட தீ ப ன்