tamil pages of magudadheeban 


                                     இயற்கை




நேற்று Broad Band Connexion ஒன்று கொடுக்கப் போயிருந்தேன். போன இடம் ஒரு டாக்டர் வீடு. போன நேரம் மதியம் மணி பன்னிரண்டரை. போன் இருந்த லைனில் எல்லாம் செருகி எப்படி ப்ராட் பாண்ட்டில் ப்ரவுஸ் செய்வது என்று சொல்லிக் காட்டி விட்டுக் கிளம்ப எத்தனித்த போது, டாக்டர் மனைவி ஒரே கட்டோ கட்டாயமாக நின்று விட்டது, காப்பியாவது குடித்து விட்டுப் போக வேணும் என்று.
' பழக்கம் இல்லைம்மா '- என நான் மறுத்தும் விட்டபாடில்லை.

'பாலாவது குடியுங்களேன்'

'ஏலாதம்மா என்னால், இப்போது சரியான சாப்பாட்டு நேரம். பால் குடித்தேன் என்றால் சாப்பாடு எடுக்காதம்மா ' - என்றேன்.

' சாப்பாட்டு நேரமா ?' - என ஆச்சர்யத்தோடு பார்த்த அந்த அம்மா,

' எங்களுக்கு எல்லாம் காலைச் சாப்பாடே இப்பத்தான் ஆச்சு, 12- மணிக்கு ' என்றது உடம்பெல்லாம் பெருமை கொப்பளிக்க!
டாக்டர்களைப் பொறுத்த மட்டில் இதெல்லாம் சகஜம். அவர்கள் தொழில் அப்படி. நான் பார்த்த ஒரு டாக்டர் இரவு மணி 12 வரை கேஸ் பார்ப்பார் , அப்புறம் அடுத்த ஒருமணி நேரம் ரவுண்ஸ் வருவார். அப்புறம் ஒருமணி நேரமாவது அன்றைய கணக்கு வழக்குகளைச் சரி பார்க்கும் அக்கவுண்ட் ஆகவும் ஆடிட்டராகவும் மாறிவிடுவார். கடைசி ஒரு மணி நேரம் டாக்டர் புருஷனும், டாக்டர் பொண்டாட்டியும் அன்றைய கலெக்ஷனை எண்ணோ எண் என்று எண்ணி முடிப்பார்கள். இருபத்தி மூணு மணிநேர அவஸ்தைகள் எல்லாம் போய் கடைசியில் இருக்கும் அந்த ஒரு மணி நேரம்தான் சில டாக்டர்களுக்கு மகிழ்ச்சியான தருணங்கள்.

தூங்கப் போகும் போது காலை சரியாக மணி 3.30 அல்லது 4.00 ஆகிவிடும். பணம் பணம் இது மட்டுமே அவர்கள் இலட்சியம் இலக்கு எல்லாம். அன்றைய கலக்க்ஷன சரி இல்லை என்றால் முகம் வாடி விடும். ' இன்றைக்கு என்ன இலக்கே (luck) சரியில்லை, கேஸே சரியாக வரவில்லையே' என்று கவலைப் படும் டாக்டர்களையும் எனக்குத் தெரியும். என்ன வேண்டிக் கொள்கிறார்கள் இவர்கள், ஊரில் இருப்பவர்களுக்கு எல்லாம் கால் ஒடிய வேண்டும் இல்லை ஆக்ஸிடண்ட் ஆக வேண்டும் என்றா? ஓம் சுகினோ பவந்து !

இவர்களைப் பொறுத்த மட்டில் உலகம் என்பது கிளினிக் மாட்டே! எங்கள் முகவையைப் பற்றி உங்களுக்குத் தெரியாத தா, அரசுத் துறைகளில் பெரிய பனிஷ்மென்ட் ஏரியா என வர்ணிக்கப் பட்ட போதும் இங்கு வந்த டாக்டர்கள் மட்டும் அவரவர் சொந்த ஊருக்கு மாறுதல் ஆகிச் செல்வதில்லை, இங்கேயே கிளினிக் கட்டிச் செட்டில் ஆகி விடுகிறார்கள். வேலை . .என்ன பொல்லாத வேலை, என இராஜினாமா செய்து விடுகிறார்கள். இதுவே சொந்த ஊர் என்றும் ஆகி விடுகிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றவன் பிறந்ததே எங்கள் பழைய முகவை மாவட்டம்தானே.

கிளினிக் உலகம். வெளியே இருந்து எல்லாம் உள்ளே போகும். உள்ளிருந்து மட்டும் வேறு எதுவும் வெளியே வராது பிணம் தவிர. மட்டுமா, எங்கள் முகவையில் கடந்த 26 ஆண்டுகளாய் வேலை பார்க்கிறேன், இத்தனை காலமாகவும் சில டாக்டர்களின் பேர் தெரியும் அவர்கள் கிளினிக் தெரியும் அல்லாமல் அவர்களை நேரில் பார்த்தது கூட இல்லை. ஒருசில டாக்டர்களைப் பத்திரிக்கைகளில் மட்டுமே போட்டோக்களில் பார்த்திருக்கிறேன். பார்த்த தில்லை என்றால் நான் ஒன்றும் Rotarian இல்லை. பெரும் பாலான டாக்டர்களை அங்குதான் உலகத்தையே சந்திக்கிறார்கள். கிளினிக்கை விட்டு வெளியே வருவதே இல்லை. வீடு நாடு லோகம் எல்லாம் உள்ளேதான்.

எங்காவது பலசரக்குக் கடையில் மளிகைச் சாமான் வாங்கும் டாக்டர், மார்க்கெட்டில் காய்கறி வாங்கும் டாக்டர், தன் பையனை ஸ்கூல் விட்டுக் கூட்டிச் செல்லும் டாக்டர், அரிசி மூட்டை வாங்கும் டாக்டர் என யாரையாவது பார்த்திருக்கிறீர்களா? நீங்களும் நானும் நிற்கும் ஏதாவது ஒரு கியூவில் யாராவது ஒரு டாக்டர் நிற்க க் கண்டிருக்கிறீர்களா ? யாராவது ஒரு டாக்டர் ஹாய்யாக ரோட்டில் சைக்கிளில் போவதுதான் உண்டா? போனாலும் வெளி உலகு தெரியாமல் கறுப்புக் கண்ணாடி மூடிய காரில் முகம் காட்டாமல்தானே போகிறார்கள்? அவர்களைப் பொறுத்த மட்டில் திரும்பவும் சொல்கிறேன் கிளினிக்கே உலகம். பளபள என எங்கு பார்த்தாலும் வெள்ளை வெளேர் என பளிங்குக் கற்கள். வழவழெனச் சலவைக் கற்கள். மாடிமாடியாகச் சலவைக் கல் அறைகள்! (சேர்த்தும் வாசிக்கலாம்). இன்னும் ஒரு கொசுறு சேதி. என்ன, இந்தச் சலவைக் கற்கள் இருக்கின்றனவே, அதன் பயன்பாடு குறித்து இன்று மக்களைப் பாடாய்ப் படுத்தும் வாத்து சாத்திரம் (!) சொல்வது என்ன என்றால், இக் கற்கள் அதில் குடியிருக்கும் மனிதனின் உயிர்ச் சக்தியை உறிஞ்சி அவனைச் சவமாக ஆக்கி விடும், ஆக உள்ளே வாழ்பவர்கள் எல்லாம் சடங்கள், அழுத்தமாய்ச் சொல்லிடின் சவங்கள் (எனவேதான் கல்லறைகள் சலவைக் கற்களால் அலங்கரிக்கப் படுகின்றனவோ என்னவோ? யோசியுங்கள், ஒரு தாஜ் மகால்) எனவே நோயாளிகள் கல்லறை செல்லுமுன் ஒரு தடவை தீர்க்கமாக ப் பண்ணுங்கள் ஒரு யோசனை.

மனிதனுக்கு மொத்தம் 72000 நாடிகள் . நாடிகள் என்றால், இதைப் போல் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்ட தமிழ் வார்த்தை வேறு இருக்க முடியாது என நினைக்கிறேன். நாடி என்பதற்கு சரியான English Equivalant இல்லவே இல்லை . அல்லோப்பதி இதை எல்லாம் ஆராய்ச்சி செய்யவும் இல்லை . இந்த நாடி என்பது வெளியே உள்ள பிராண சக்தியை உறிஞ்சி உடல்பூரா கொடுக்கும் கண்ணுக்குப் புலனாக நுண்சிறு குழல்கள். இந்த நாடி என்பது நரம்பைக் குறிப்பது அல்ல, கையில் துடிக்கிறதே பல்ஸ் அதுவும் அல்ல. ஆனால் சிறப்பான சித்த மருத்துவர்கள் இந்த நாடித் துடிப்பை வாத நாடி, பித்த நாடி, சிலேட்டும நாடி என மூன்று வகைக்குள் அடக்கி நோய்களைக் கண்டறிகிறார்கள்.
' கை பிடித்து நாடி பார்க்கிறீர்களே, என்ன தெரிகிறதாம் அதில் ?' என எகத்தாளம் அடித்தது ஒரு அல்லோபதி .
சித்தம் பதில் சொன்னது ' உங்களுக்கு, ஸ்டெத் வைத்துப் பார்க்கும் போது என்ன தெரிகிறதோ அது எனக்கும் தெரிகிறது'
எல்லாம் எப்படியோ, எல்லா நாடிகளையும் கடந்து பண நாடி என்ற ஒன்று நோயாளிக்கு எந்த அளவில் துடிக்கும் என்பது மட்டும் ஒருசில டாக்டர்களுக்குப் பல்ஸ் பார்க்காமலேயே தெரியும். அதைப் பொறுத்துத்தான் அவசரக் கேஸ்களை அட்மிட் செய்வதும் இல்லை அரசாங்க ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போ' எனபதும். வள்ளுவர் கூட ரெம்பத்தான் நக்கலாகப் பாடிவிட்டாரோ என்றுகூட தோன்றுகிறது எனக்கு.

' நோய் நாடி நோய் முதல் நாடி அதுசொல்லும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் '
என்ற பாட்டில் முதல் என்பதற்குப் பொருள் பணமோ ஒருவேளை. இப்படிப் பொருள் சொல்லும் என்னை மன்னிக்கக் கடவாராக வள்ளுவப் பெருந்தகை

டாக்டர்களுக்கு எல்லாம் சூர்ய உதயம் என்பது மதியம் பதினோரு இல்லை பன்னிரண்டு மணிக்குத்தான் நிகழ்கிறது. நமது தர்ம ம் என்ன சொல்கிறது, வெளி நாட்டானுக்கு வேண்டுமானால் வேறுவிதமாக இருக்கலாம் ஆனால் நமக்கு நாள் என்பது காலை சற்றேறக் குறைய 6.00 மணிக்குப் பிறக்கிறது. ஆங்கில முறையில் பார்த்தால் நாள் என்பது இரவு 12.00 மணிக்குப் பிறக்கிறது. நமது மோகம்தான் உங்களுத் தெரியுமே.
நம் பழக்க வழ க்கம் எல்லாம் மாறிப் போனது ஆங்கிலேயன் வந்த பிறகா, இல்லை, மின்சார விளக்குகள் வந்த பிறகா என்ற சர்ச்சைகள் கிடக்கட்டும், நாம் செய்வது எல்லாமே இயற்கைக்கு விரோதம். இயற்கைக்கு விரோதம் என்றால் உடலுக்குக் கேடு.

இறைவன் இரவைப் படைத்ததே உறங்கத்தான். இரவு வந்த உடன் உறக்கம் வந்து விட வேண்டும் என்பதே இயற்கை நியதி. இரவுச் சாப்பாடு என்பது சூரியன் மறைவதற்குள் சாப்பிட்டு விட வேண்டும் என்று சொன்னால் சிரிக்கிறீர்கள். உறங்கும் போது இரைப் பை காலியாக இருக்க வேண்டும் என்றால் சாத்தியமா என்கிறீர்கள்.

இரவு வந்தவுடன் உறங்கித்தான் ஆக வேண்டும் . பட்டப் பகல் மாதிரி ஜொலி ஜொலிக்க வெளிச்சம் போட்டு ஆட்டம் போட்டால் உடலுக்குக் கெடுதி. மற்ற சீவ ராசிகளைப் பாருங்கள் பறவைகளைப் பாருங்கள் சாயந்தரம் ஆனதும் ஒடுங்கி விடுகின்றன , ஒருசில ஆந்தை முதலியன தவிர. பிரம்ம முகூர்த்தம் வந்ததும் எழுந்நு விடுகின்றன. அதென்ன பிரம்ம முகூர்த்தம் என்றால், அதுதான் வைகறை, காலை 3.30 மணிக்கு மேல். அதற்கு அப்பறம் தூங்கக் கூடாது. தூங்கினால் பிராண நஷ்டம் என்கிறது யோக சாஸ்த்திரம்.

இது என்னடா வம்பாப் போச்சு அப்பத்தான் தூக்கமே வருகிறது என்கிறீர்களா, அந்தப் பழக்கத்தைத்தான் இயற்கைக்கு விரோதம் என்று நான் வர்ணிக்கிறேன். பிரம்ம முகூர்த்தத்தில்தான் காற்றில் பிராண சக்தி உச்சத்தில் இருக்கிறது. அதைத்தான் நம் நாடிகள் உறிகின்றன. இதன் தாத்பரியம் தெரிந்தோ இல்லை தெரியாமலோதான் டாக்டர்கள் விட்ட விடியற்காலம் வாக்கிங் போவது நல்லது என்கிறார்கள்.

நவீன கால கட்டத்தில் இரவு ஒன்பது மணிக்கெல்லாம் உறங்கி காலை 3.30க்கு எழுந்து பாருங்கள், பாதி நோய் உங்களை அண்டாது. ஆயுளும் நீளும். இந்தக் கலியுகததில் மனிதனின் ஆயுள் என்பது 120 வருடங்கள். நியம்ப்படி, நியதிப் படி வாழ்ந்தால் 120 வருடம் வாழலாம். இராமாநுஜர் அப்படித்தானே வாழ்ந்தார். அவர்தான் மனுஷன். நாம் தான் நம் நியமங்களையும் நியதிகளையும் மறந்தோம். ஆங்கிலேயனைப் பார்த்துச் சூடு போட்டுக் கொண்டோம். எல்லா வற்றும் நியதி இருக்கிறது. எப்படித் தூங்க வேண்டும், எப்போது தூங்க வேண்டும் , எப்படித் தண்ணீர் குடிக்க வேண்டும், எவ்வளவு குடிக்க வேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும், எப்படி மூச்சு விட வேண்டும், ஏன் எப்படி உட்கார வேண்டும் என்பதில் கூட நியதி இருக்கிறது.

நமக்கும் நமது பிள்ளைகளுக்கும் சரியாக உட்காரக் கூடத் தெரியவில்லை. சம்மணம் போட்டால் கால் வலிக்கிறது என்கிறார்கள். டைனிங் டேபிளில் சாப்பிடுவதுதான் அந்தஸ்தாம், அது நோக்காடு என்றால் கேலி செய்கிறார்கள். இது ஒன்றும் ஆரோக்கியம் பற்றிய கட்டுரை அல்ல, அதிகம் விவரிக்க.

தொலைக் காட்சி விளம்பரம் பார்த்தேன். Finolux Switch 60000 operations வரும் என்று. சாதாரண சுவிட்சுக்குக் கூட நியதி இருக்கிறது. இந்த 60000 ஆப்பரேசன்களையும் நாம் பயன் படுத்தும் முறைகளைப் பொறுத்து டப் டப் என ஒரு வருடத்திலும் தீர்க்கலாம் ஒன்பது வருடமும் வைத்திருக்கலாம். இதே போல்தான் நம் இதயமும். ஒரு ஆயுளுக்கு இத்தனை துடிப்புக்கள் என நியமித்திருக்கிறான் இறைவன். ஒரு ஆயுளுக்கு இத்தனை மூச்சுக்கள் என வகுத்திருக்கிறான் கடவுள்.சாதாரண மனிதன் ஒரு நாளைக்கு விடும் மூச்சுக்கள் 21600. அதிகம்ஆயின் ஆயுள் குறையும், நமது சுவிட்சு போல, அவ்வளவுதான்.

இயற்கையைப் பாருங்களேன். துருவப் பிரதேசத்தில் பகல் என்து 6 மாதம் இரு என்பது 6 மாதம். எனவேதான் அங்குள்ள துருவப் பனிக் கரடிகள் 6 மாதம் தூங்குகின்றன. ஆங்கிலத்தில் இதை suspended animation என்கிறார்கள். நமது மாமனிதன் அங்கே போய் வசித்தால் இராத்திரி பூரா வெளிச்சம் போட்டு விழித்திருப்பான் என்று நினைக்கிறேன்.

இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும் அதை எதிர்த்து அல்ல. இந்தக் கட்டுரையை நேற்று இரு ஆரம்பித்து பாதி வரும் போது மணி 9.30 படுத்து விட்டேன் காலையில் தொடர்ந்நபோது இப்போது மணி 3.30. படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் வேகமாக எங்கே போகிறீர்கள், சீக்கிரம் தூங்கவா? ஆடு மாடு மான் யானை எல்லாம் Hebivorus animals. சிங்கம் புலி எல்லாம Cornivorus அதாவது மாமிச பட்சிணிகள். நமது உடலுக்குக் கடவுள் போட்ட டிசைன் எப்படி என்றால் குடல் மிக மிக நீளமாக, அதாவது 21 அடி, herbivorus போன்று. மாமிச உணவு உடல் ஏற்றுக் கொகொள்ளாது உடனே வெளியேற்றப் பட வேண்டும். அதுதான் cornivorusக்குக் குடல் நீளம் குட்டை. உணவைத் தீர்மானிப்பது இனி உங்கள் சித்தம்.

தண்ணீர், சாப்பாடு பற்றிச் சொல்லப் போனால் இந்தக் கட்டுரைக்கு வால் மாதிரி ஒரு பெரிய attachment தர நேரிடும் என்பதால் just gistஆக சில வார்த்தை.

தண்ணீரைக் குடிக்காதீர்கள் சாப்பிடுங்கள்
சாப்பாட்டை விழுங்காதீர்கள் குடியுங்கள்.

எல்லாம் முறைப் படி செய்தால் நீங்கள் டாக்டரைப் போய் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. மனதாரச் சபிக்கிறேன் எல்லா டாக்டர்களுக்கும் வருமானம் இல்லாது போக க் கடவதாகுக. ஓம் சுகினோ பவந்த்து . . .



- மகுடதீபன் 25-01-2007