tamil pages of magudadheeban 
 

 

                                   கழுதை

 

சென்ற வாரம் சிதம்பரம் போய் இருந்தேன் . இரண்டு நாட்கள் முழுக்க முழுக்க அப்பன் தரிசனமும் உள்ளமெலாம் உருகிக் கண்ணின் நீர் பெருகிக் கால் வழிந்தோடலும் . அப்புறம் அதே இரண்டு நாட்கள் அலுவலகப் பணி மற்றும் எந்திர வாழ்க்கை மறத்தலும் . இரண்டுநாட்கள் என்ன பண்ணிணாய் என்கிறார்கள் . சாமி கும்பிட இரண்டு முழு நாட்களா என்று கேட்கிறார்கள் . ஏன் கும்பிடக் கூடாதா என் கை என் மனம் என் சாமி நான் இரண்டு நிமிடம் கும்பிட்டால் இல்லை இரண்டு நாட்கள் கும்பிட்டால் இவர்களுக்கென்ன ? குழந்தைகளுக்குப் பதினைந்து நாள் விடுமுறை . உறவினர் வீட்டுக்கோ இல்லை நம் அப்பா வீட்டுக்கோ போய் வெறும் இரண்டு நிமிடம் இருந்துவிட்டுத் திரும்பி வந்துவிடுவோமா , இல்லையே . அதான் சாமி கும்பிட்டாச்சில்லே கிளம்பு கிளம்பு என்று அப்படி என்ன அவசரம் ? அப்பப்பா கோவிலுக்குப் போனாமட்டும் இந்தக் கூட்டுறவு கூடாதடா சாமி . எல்லாம் எந்திர வாழ்க்கையின் அவசரம் . சாமி கும்பிடச் செகண்ட்டுகளைக் கணக்குப் பார்க்கும் அவசரம் , பஸ்ஸுக்கு நேரமாச்சே என்ற பரபரப்பு . இதுவரை உருப்படியாக என்ன செய்திருக்கிறோம் , பிள்ளைகளைப் போட்டதையும , தூங்கியதையும் , வயிற்றில் கொட்டிக் கொண்டதையும் தவிர ? ரோட்டிலே நடந்து கொண்டிருந்த போது பைக்கிலே எவனோ ஒருவன் . விஷ் பண்ணிணான் . தெரியாத முகம் . இருந்தாலும் நானும் பண்ணிணேன் . அசடு வழிந்தேன் . அவனோ என்னைக் கடந்து நேரே போயே விட்டான் . அப்புறம்தான் தெரிந்தது எனக்குப் பின்னே ஒரு நடைபாதைக் கோவில் இருப்பது . எனக்கோ ஒரு விஷ் வேஸ்ட் அவ்வளவுதான் . சாமியைக் கும்பிட பைக்கை விட்டுக்கூட இறங்காமல் அப்படிஒரு அவசரம் . ரோட்டிலே நண்பரைப்பார்த்தால் ஹாய் சொல்லி , நின்று உசாவி , ஒரு காபி சாப்பிடச் செலவழிக்கும் நேர மரியாதை கூட இல்லை . என்ன செய்ய , சாமிதானே ! அதற்குக் கும்பிடாமலேயே போகவேண்டியதுதானே . இந்த மக்கள் ஏன் ஓடுகிறார்கள் எங்கே எதற்கு ஓடுகிறார்கள் ? இருக்கிறது பத்தாமல் இன்னோரு கால் முளைத்தாற் போல . மக்களுக்குக் கால் முளைத்தால் மாக்கள்தானே ? சிதம்பரம் இரயில்வே ஸ்டேஷன் . மாலை மீண்டும் ஊர் செல்ல வண்டிக்குக் காத்திருந்தேன் வாழைப் பழம் தின்றவாறு . எதிரே ஒரு மாடு பிளாட்பாரத்தில் கிடந்த காகிதத்தைத் தின்று கொண்டிருந்தது . வாழைத்தோலை விட்டு எறிந்தேன் . அது முகர்ந்து பார்த்துவிட்டு சாப்பிடாமல் அப்பால் கிடந்த அடுத்த காகிதத்தை நாடிச் சென்று விட்டது . சரி மாடுகள் எல்லாம் எப்பொழுது முதல் கழுதைகள் ஆயின ? மக்கள் எல்லாம் மாடுகள் ஆகிவிட்டதனாலா ? எதிரே கறுப்புக் கைலி அணிந்தபடி ஒருவன் வர மாடு அவனைப் பார்த்து மிரண்டுபோய் முட்ட எத்தனித்தது . அவனுக்கு வந்ததே கோபம் ! நாலடி சென்றவன் திரும்பி வந்து அந்த மாட்டை தான் காலால் பலங்கொண்ட மட்டும் ஓங்கி உதைத்தான் . இப்போது மனிதர்கள் எல்லாம் மாடுகள் ஆகிவிட்டனர் என்று நான் எழுதியது தவறு என்று வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் .

- மகுடதீபன் முகவை 9486102034