tamil pages of magudadheeban

நடராசர் - தெரியாத சில சேதிகள்

 



நடராஜர் வழிபாடு கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலதான் முதன்முதலாகத் தமிழகத்தில் தோன்றியது என்று சொன்னால் நிச்சயம் ஆன்மீக அன்பர்கள் என்னை அடிக்க வந்துவிடுவார்கள்.

மாணிக்க வாசகர் காலத்தில் நடராஜ வழிபாடு இருந்திருக்கிறது. இதிலே மாணிக்க வாசகர் காலம் பற்றிய குழப்பமோ தூக்கணாங்குருவிக் கூட்டுச் சிக்கல். எத்தனை தமிழ் அறிஞர்கள் உண்டோ அத்தனை கருத்து வேறுபாடு.

அது சரி, இப்போது இன்னொன்று சொல்கிறேன், மணி வாசகர் காலமும் கி.பி. 2-ஆம் நூற்றாண்டே என்று நான் எழுதி முடிப்பதற்குள் ஒரு தமிழறிஞர் திருக்கூட்டமே தடி எடுத்தபடி என்னைத் தேடுவதை நிச்சயமாக என்னால் தீர்க்க தரிசனமாகச் சொல்லி விட முடியும்.

இன்னொரு இடத்தில் மணிவாசகர் காலம் பற்றிச் சொல்லுகிறேன். இப்பொழுது மீண்டும் நடராஜர். ஆரம்பத்தில், அதாவது ஹரப்பா மொகஞ் -சோதார காலத்தில் என்று வைத்துக் கொள்ளுங்களேன், சிவ வழிபாடு மட்டுமே ( இலிங்க வடிவம்) இருந்தது. முதன்முதலில் நடராஜ வடிவங்கள் ஸ்தாபிக்கப் பட்டஇடங்கள் இரண்டு. ஒன்று தில்லை. இன்னொன்று உத்திர கோசமங்கை. முன்னது சிதம்பரம். இது அம்பலத்தில் ஆடியது. பின்னது ஆதி சிதம்பரம். அறையில் ஆடியது.

இதிலே ஒரு அற்புதமான விஷயம் என்ன என்றால் இரண்டு விக்கிரங்களுமே பூவுலகத்தில் உள்ள பொருள்களால் பண்ணப்படவில்லை. சற்று குழப்பமாக இருக்கிறது என்று சொல்பவர்களுக்குச் சொல்கிறேன். அதாவது இரண்டு படிமங்களுமே வெளி கிரகத்துப் பொருட்களால் செய்யப்பட்டவை என்று நான் சொன்னால், அடபோங்கய்யா, தலையிலே அள்ளி முடிந்தவரைப் பார்த்து இதெல்லாம் சுத்துங்கப்பா என்று என்று நீங்கள் கேலி செய்தாலும் சரி, நான் என்னமோ அள்ளி முடிந்தவரைப் (சிவனை) பற்றித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

இதிலே ஒரு சிறு விஷயம் நீங்கள் யோசிக்க வேண்டியது உண்டு. என்ன ? உத்திர கோச மங்கைக் கோவிலின் ஆள் உயர நடராஜர் சிலை, நம்பினால் நம்புங்கள், திருவாச்சி உட்பட முழுக்க முழுக்க மரகதம். ஆமய்யா ஆமா, சுத்தமான பச்சை மரகதக் கல். நீங்கள் உங்கள் ஆயுட்காலத்தில் அதிக பட்சம் எவ்வளவு பெரிய மரகதக் கல்லைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லது பார்ப்பீர்கள் ? மிஞ்சி மிஞ்சிப் போனால் தொலைக்காட்சிப் பெட்டியிலே விட்ட விடியற்காலம் வருகிறானே இராசிக்கல் மோதிர வியாபாரி, அவன் காட்டும் கல் அளவு பார்த்திருப்பீர்களா ? ஏன் அவனையேகூடக் கேட்டுப் பாருங்கள், அவன் சொல்வான், கற்களிலேயே மிகவும் மிருதுவானது மரகதக் கல் என்று. மத்தளம் கொட்ட மரகதம் உதிரும் . . . இது ஒரு முதுமொழி. என்றால் மத்தளச் சத்தம் கேட்டாலே மரகதம் பொடிந்து விடுமாம்.

ஆமாம் இன்னொரு சந்தேகம், அப்படி மத்தள ஓசைக்கே உடைந்து விடும் மரகதக் கல்லில் நுண்ணிய சிற்ப வேலைப்பாடு எப்படிச் சாத்தியம் என்பது சரியான கேள்வி. இவ்வளவு பெரிய மரகதக் கல் பூமியிலே அதுவும் நொறுங்காமல் கிடைப்பது எங்ஙனம் எப்படி எவ்விதம் எவ்விடம் நடக்கும்? இதிலே மூன்றாவது ஆச்சரியம் ஒன்று என்ன என்றால் இரண்டு சிலைகளையும் நிறுவியவர் ஒரு அரசரோ இல்லை சிற்பியோ அல்ல, அவர் ஒரு வெண்தாடிப் பெரியவர். அவர் பூவுலகில் பிறந்து வளரவும் இல்லை, இறக்கவும் இல்லை. சண்முக வடிவேலர் . அவர் அவராகவே வந்தார்.

அடுத்த அடுத்த தினங்களில் இரண்டு இடங்களிலும் நடராஜர் சிலைகளை எண்ணம்செயல் உருப் பெறக் கையிலே பிடித்து நிறுவினார். ஒரு பாபா வந்தார் கைகளைச் சுழற்றினார் "மேட் இன் சுவர்க்கம்" எனப் பொறிக்கப் பட்ட கைக்கடிகாரம் வந்தது _ என்றெல்லாம் நம்பும் மாந்தர்களுக்கு இது எல்லாம் நடக்க இயலாத காரியம் என்று எப்படித்தான் எண்ணத் தோன்றுகிறதோ தெரியவில்லை.

அந்தச் சண்முக வடிவேலர் நிறுவியதுதான் இந்த இரண்டு சிலைகளும். இரண்டு ஆலயங்களுக்கும் செல்பவர்கள் சற்றே உற்றுப் பாருங்கள், இரண்டு சிலைகளிலும் பாம்பு இருக்காது. இரண்டிலும் புலித்தோல் உடுத்தி இருக்காது, தலையிலும் கங்கை இராது. இந்த இன்னபிற ஜோடனைகள் எல்லாம் பின்னால் வந்தவர்கள் செய்த கைங்கரியம். இந்த இரண்டு சிலைகளையும் பார்த்தே மற்ற மற்றஆலயங்களில் நடராஜர் சிலைகள் வடிவமைக்கப் பட்டன.

ஆக மற்றமற்ற சிலைகளில் சிற்பிகள் தங்கள் கை வேலைகளையும், கதைகளில் கேட்டவாறு கங்கை என்றும், பாம்புஎன்றும், புலித்தோல் எனறெல்லாம் தங்கள் கை வரிசையைக் காட்டினார்கள். அப்படி என்றால் அதெல்லாம் பொய்யா என்றால் இல்லை.

ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன், ஒண்ணாங் கிளாஸ் படித்த போது நிச்சயமாக நினைவிருக்கிறது, டிரவுசர் அணிந்திருந்தேன் நான். அது எப்படி , அன்று நீதானே டிரவுசர் போட்டிருந்தாய் , இப்போது போடுவதற்கு என்ன என்று கேட்டால் எவ்வளவு அபத்தம் ? ஒரு வகையில் பார்த்தால் இரண்டுமே நான்தான். இன்னோரு கோணத்தில் அது பழைய நான் , இது புதிய நான் , இரண்டும் வெவ்வேறு. இப்போது புரிந்திருக்கும் சிவன் -நடராஜர் சம்பந்தப்பட்ட பாம்பு , கங்கை , புலித்தோல் சமாச்சாரம். சிவன் ஆரம்ப நிலை நமது L.K.G. போல. நடராஜர் வளர்ந்த நிலை P.Hd. போல. சிவன் ஆண்டிக்கோலம் . நடத்தரையன் ராஜ கோலம். அரசனுக்கு நகையும், பட்டு உத்தரியமும்தானே சிறப்பு , ஆதி வாசி போலப் புலித் தோலும் , பாம்பும் அணிவிப்பது எந்த ஊர்ஞாயம் சாமி ? ஒருவேளை , தில்லை மற்றும் திருஉத்திரகோசமங்கை தவிர வேற ஊர் ஞாயமோ என்னவோ ? ஒரு கலைப்படைப்பு ஒருவனை அப்படியே கட்டிப் போடுகிறது என்றால் அதற்குக் காரணம் அந்தக் கலைஞன். சிற்பி ஒரு சிலையை வடிக்கும் போது கல்லில் தேவையில்லாத பகுதிகளையெல்லாம் நீக்குவது

உங்களுக்குத் தெரியும். தெரியாததும் ஒன்று உண்டு , அது கல்லைக் கொத்திக்கொத்தித் தன் சீவனை உள்ளே செலுத்துவது, தன் உயிரையே உள்ளே பாய்ச்சுவது . உயிரைக் கொடுத்து இந்தப் பணியைச் செய்துமுடித்திருக்கிறேன் என்று சொல்வதில்லையா, அது போல . சித்திரமாகட்டும் , இல்லை ,சிலையாகவே ஆகட்டும் , ஏன் கவிதைக்குக் கூட இது பொருந்தும் .எந்த ஒரு படைப்பு உன்னதமான கலைஞனால் இந்த உயிரொளியைப் பாய்ச்சிப் படைக்கப் படுகிறதோ அது காலத்தை வெல்லுகிறது , காலா காலமாய் மக்களைத் தன்வசம் இழுத்துக் கொண்டு இருக்கிறது , எல்லோர் பாலும் ஒரு ஈர்ப்பைத் தன்பால் ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.

கலைஞனும், கவிஞனும் மறையலாம் ஆனால் அவர்தம் படைப்புகள் ஒளி வீசிக் கொண்டே இருக்கும். சாதாரணச் சிற்பிக்கே இப்படி என்றால் நடத்தரையர் சிலையை வடிவமைத்த சண்முக வடிவேலரைப் பற்றிச்சொல்லவா வேண்டும் ? இப்போது தெரிகிறதா நடராஜர் சிலை எல்லோரையும் இழ்ழ்ழ்ழ்ழுப்பதன் காரணம் ? இப்போது புரிகிறதா வெறும் இரசிகனைக் கூட அது ஈர்ப்பதன் காரணம் ?

இப்போது விளங்குகிறதா வெளிநாட்டினரையும் அதுகவர்வதன் காரணம்? மாதா மாதம் சேதி நிறைய்ய்ய்ய . . . . .

அன்பு வணக்கம் சொல்லி அமையும் ம கு ட தீ ப ன்