tamil pages of magudadheeban 

ஆகா பாடலாம்


ஆபீஸ் விட்டு அசந்து போய் வீடு நுழையும் போது பொதிகை தொலைக் காட்சியில் இராகுலும் மஹதியும் கலக்கிக் கொண்டிருந்தனர். தூள் டீம் என்றும் சூப்பர் டீம் என்றும் இரண்டிரண்டு பேராகத் தூள் கிளப்பிக் கொண்டிருந்தனர். சாப்பிட்டுக் கொண்டே பார்த்த போது சில விஷயங்கள் நெருடின.

முதலில் இராகுலும் மஹதியும். ‘கொடியிலே மல்லிகைப்பூ . . . ‘என்று சத்யராஜுவும் ரேகாவுமாக மாறிப் பாடி முடித்தனர். அடுத்து தூள் டீம். அவர்கள் எதோ ஜோடி மாற்றம் நிகழ்ச்சி மாதிரி சத்யராஜ் சுகன்யா காம்பினேஷனில் இன்னொரு பாட்டுப் பாட, அடுத்த டீம் என்ன சளைத்ததா,

சுகன்யா—பிரபு என காதோரம் லோலாக்கு ஆட்டினர். கொஞ்சம் கூட யோசிக்காமல் டக் டக் என்று அடுத்த அடுத்த ஜோடி மாற்றப் பாடல்கள் அந்த இளைய தலைமுறைகளின் மூளை முகட்டிலே இருந்து வாய் வழியே அருவியாய்ப் பொழிந்தது இருக்கிறதே, அதிசயம் போங்கள்.

மனித மூளை என்பது ஒரு அற்புதமான ஹார்ட் டிஸ்க். இதில் எவ்வளவு வேண்டுமானாலும் சேமித்து வைக்கலாம். எர்த் சரியில்லை என்று கர்ரப்ட் ஆகாது. பேட் செக்டார் பார்ம் ஆகாது. அடுத்தவர் மூளையில் இருந்து வைரஸ் டவுன்லோடு ஆகாது. முக்கியமாக அடிக்கடி ஹேங்க் ஆகாது. வாரண்ட்டி என்றால் தைரியமாக ஒரு அறுபது வருடம் வரை சொல்லலாம். இதிலே இன்னொரு அதிசயம் பாருங்கள், மூளையின் ஆற்றலிலே நாம் பயன் படுத்துவது பத்தில் ஒருபாகம்தானாம். மீதி 9\10 என்னாயிற்று ? இன்னும் பார்மட் செய்யப்படவில்லையோ என்னவோ ?

எனது ஆச்சரியம் எல்லாம் என்ன என்றால் இந்த இளைய தலைமுறை இந்தக் காது மோடத்தின் வழியாக எப்படி அவ்வளவு சினிமாப் பாடல்களையும் டவுன்லோட் பண்ணி சேமித்து வைத்திருக்கிறது, அதுவும் அரைகுறையான எம்பித்ரீ பார்மேட்டில் அல்ல், அட்சர சுத்தமான ரியல் ஆடியோ பார்மேட்டில் . .? அதுவும் உடனுக்குடன் பாடல்களைத் தேடிப் பிடித்துச் சொல்லும் இலாவகம் இருக்கிறதே சிம்ப்ளி இன் ஜீரோ அக்ஸ்ஸ் டைம் !

ஆரக்கள் மைஎஸ்க்யுவல் சைபேஸ் முதலிய எல்லா டேட்டா பேஸ்களும் இவர்கள் மூளையில் பதியப் பட்டுள்ள அந்த ரிலேஷனல் டேட்டா பேஸின் வேகம் கண்டு சீக்கிரமே அப்கிரேட் செய்து கொண்டால் ஆயிற்று இல்லையேல் அவுட் ஆப் பீல்டு ஆகிவிடும்.

போதும் போதும் உங்கள் கம்ப்யூட்டர் மேதாவிலாசம் எனச் சொல்லி இந்தப் பக்கத்தை நீங்கள் மூட யத்தனிக்க வேண்டாம். இனி மேலே படியுங்கள்.

என் முதலாவது நெருடல். இந்த மூளையின் ஏதோ ஒரு டிராக்கில் ஏதோ ஒரு செக்டாரில் ( ஆரம்பிச்சுட்டான்யா மறுபடி—என்று சொல்வது நீங்கள்) எழுதப்பட்டுள்ள இந்தப் பாடல்கள் அனைத்தும் நிரந்தரமானவையா, மானவை என்றால் பள்ளியிலே படித்துக் கொண்டிருந்த போது நாங்கள் சப்பிக் கொண்டிருந்த எலந்த பயம் என்னவானது ?அப்புறம் அந்த அன்னக்கிளி உன்னைத் தேடுதே . அப்படித் தேடிக் கொண்டிருந்த கொஞ்ச காலத்தில் ருக்குமணி வண்டி வந்ததே அது எந்த ஓரம் போனது ? ஏன், மூணு வருடம் முந்தி, சோப் போட்ட காலையில் இருந்து தாழ்ப்போட்ட இராத்திரி வரைக்கும் ஓப்போட்ட பாடல் எங்கே ஓடி ஒளிந்தது ?

அது சரி, முதலில் ஓப்போட்டது யார் தெரியுமா ? மாணிக்க வாசகர். நிஜமாத்தான் சொல்கிறேன் திருவாசகம் பாடிய அதே மாணிக்க வாசகர். திருக்குறள் சைஸை விடச் சின்னதான திருவாசகக் கையடக்கப் பதிப்பு வாங்கி எல்லா வற்றையும் புரட்டிப் பாருங்கள் என்று நான் சொல்லமாட்டேன். திறந்தவுடன் இருக்கும் முதற்பாடல் சிவபுராணம். அதிலே ஒருதடவை அல்ல இரண்டு தடவை ஓப்போடுகிறார் மணிவாசகர்.

’வேற்று விகார வினைக்குரம்பின் உட்கிடப்ப
ஆற்றேன் அய்யா அரனே ஓ என்றென்று . . .


இது முதல் தடவை

இனி இரண்டாவது

’ தில்லையிற் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்ல ல் பிறவி அறுப்பானே ஒ என்று
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவ புரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்
பல்லோரும் ஏத்தப் பணிந்து . . .’


அந்த ஆயிரத்து எண்ணூற்று ஆண்டுகளுக்கு முன்பு போட்ட ஓ இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் எந்தப் பாடல் நிரந்தரம் ? வள்ளுவரிடம் போய் இதுபற்றிப் புலம்பிப் பார்த்தேன். அவரோ விட்டுத் தள், இது வெறும்

கனி இருப்பக் காய் கவர்ந்தற்று என்கிறார். எது காய் , எது கனி ?

நம் இளைய தலைமுறை ஏன் காயை விரும்புகிறது , குறை யாரிடம் ? குறை நம் மூத்த தலைமுறையிடம் என்று நினைக்கிறேன். கனி இருப்பது அவர்களுக்குத் தெரிய வில்லை அல்லது கொடுக்கப் பட வில்லை.

கிடைத்தது என்னவோ முட்கள்தான். அதைத் தின்று வாயையும் கிழித்துக்கொண்டு அந்த இரத்த ருசியில் வெறி கொண்டு அலைகிறது. தெரிந்து கொண்டு எனக்கு என்ன கிடைக்கப் போகிறது என்கிறது. வயிற்றில் கொட்டக் கிடைத்தால், வாய் முட்டக் கிடைத்தால், எந்தக் குறுக்கு வழியிலேனும் கை முட்டக் காசு காசு சம்பாதித்தால் அதுவே பிறவிப் பயன் என்கிறது. நிஜமான மூத்த தலைமுறை செத்துப் போய்விட இப்போதைய மூ.த. அவர்களை நெறிப் படுத்த ஏலாமல் விழிக்கிறது. தனக்கும் தெரியாமல் பிறர்க்கும் சொல்ல வழி இல்லாமல் சடமாய் பிணமாய் கட்டையாய் வாழ்ந்து போய்ச்சேரப் போகிறது.

இவர்களிடம் போய் கேட்டுப் பாருங்கள், பறம்பு மலை எங்கே இருக்கிறது என்று. நிச்சயமாகத் தெரியாது. ஆனால் ஆல்ப்ஸ் மலை எங்கே என்று கேட்டால் டக் என்று சொல்லி விடுவார்கள்.

‘ யாதும் ஊரே யாவரும் கேளிர் ‘ பாடிய புலவரின் ஊர் பூங்குன்றம் அது வேறு எங்கும் இல்லை எங்கள் பழைய முகவை மாவட்டம் ஆன சிவகங்கைக்குப் பக்கம் உள்ளது என்பது இவர்களுக்குப் புதிய விஷயம். ஆனால் வேல்ஸ் எங்கே உள்ளது என்பதெல்லாம் இவர்களுக்குத் அத்துப் படியானவிஷயம். ‘ யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றால் எல்லாம் ஊர்தான் எல்லாரும் கேளுங்கள் என்கிறார்கள் எங்கள் இந்த இனிய கேளிர்கள்.

பாரதீய வித்யா பவனில் ஒரு இலக்கியக் கூட்டம். நண்பனோடு அமர்ந்திருந்த போது எதிரே மகான் அரவிந்தர் படம். ‘ வாட் எ நைஸ் பெய்ண்டிங்க் ? ‘ என்று கண்கள் விரிய இரசித்தான் நண்பன். ஆகா, இந்த இரசனை எல்லாம் இருக்கிறதே இவனுக்கு, பரவாயில்லையே என்று நான் சிலாகித்த போது,

‘ இரவீந்திர நாத் தாகூர் . . . ? ‘ என்று கேட்க , நொந்தேன்.

போச்சுடா எல்லாம் போச் ! இவனுக்குத் தாகூரும் தெரியாது அரவிந்தரும் தெரியாது.

‘ கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும்
காளிதாசன் கவிதை புனைந்ததும்
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்
ஓர்ந்து அளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும் . . .
‘ சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்
தெய்வ வள்ளுவன் வான் மறை தந்ததும் . . . ‘



இவர்களுக்கு எதுவும் தெரியாது என்று அந்தக் காலத்திலேயே அங்கலாய்ந்நு கொண்டான் எங்கள் பாரதி. இந்தக் காலம் பற்றிக் கேட்கவா வேண்டும்.

இவர்களைப் பற்றி என்ன சொல்ல, திரு அருட்பா தெரியாத தமிழ் M.A.க்கள்

இருக்கிறார்கள் இன்னமும் என்றால் யாரையும் குறை சொல்வதாகக் கருதல் வேண்டாம். வள்ளலாரைப் பற்றிச் சொன்ன போது நிஜமாகவே ஒரு தமிழ் M.A.க்குத் தெரியவில்லை. ஒருவேளை தமிழ் இலக்கியத்தின் சங்கப் பலகை திரு அருட்பாவைத் தள்ளி விட்டதோ, கொடுமைடா சாமி.

முகவை வீதியில் அன்று ஒருநாள். சன்மார்க்க சங்கத்தார் வள்ளலார் உருவப் படம் வைத்து ஊர்வலம் செல்ல டீக் கடையோரம் இரண்டு லோடு மேன்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

‘ டேய் யார்ரா அது ?’

‘ அதுவா, ஏதோ ஒரு ஆத்மா ‘ இன்னொரு லோடு விளக்கியது.

உடலையே ஒளிமயம் ஆக்கி கற்பூரமாய் கரைந்த இராமலிங்கசாமி அன்று வெறும் ஆத்மா ஆகிப் போனார். பரவாயில்லை லோடுக்குத் தெரிந்திருந்ததது இந்த ஆத்மாவே அதிகம். ஆனால் தமிழ் M.A.க்குத் தெரியாமல் போகலாமா?

இனி இரண்டாவது நெருடல். இவ்வளவு அற்புதமான மூளையில் எவ்வளவோ நல்ல நல்ல விஷயங்களைச் சேமிக்காமல், மக்கிய குப்பை என்றால்கூட உரமாகிப் போகும், ஆனால் பாலிதீன் குப்பையை அல்லவா இவர்கள் சேமிக்கின்றார்கள்? பாரதி சொன்னது போல்,

‘ தேடிச் சோறு நிதம் தின்று—பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி
வாடித் துன்பம் மிக உழன்று—பிறர்
வாடச் செயல்கள்பல செய்து
கூடிக் கிழப் பருவம எய்தி—பின்
கூற்றுக்கு இரைஎனப் பின் மாயும்
வேடிக்கை மனிதர் ‘ களை

எங்கே போய் முட்டிக் கொள்ள ? யார் தப்பு யார் தப்பு ? சொல்லித் தராதது யார் தப்பு ? வீட்டுக்கொரு பாரதி கவிதைகளாவது வாங்கிக் கொண்டு வாருங்கள். படியுங்கள். உங்களுக்காக அல்ல, உங்கள் செல்லப் பேரனுக்காக, உங்கள் செல்லப் பேத்தி நாளை ராஜ் டீவியின் இராஜகீதம் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு இரண்டு கேசட் பரிசு பெறாமல் இருப்பதற்காக. படுக்கும் போது குழந்தைகளைத் தனி அறைக்குள் பணக்காரத் தனமாக அடைக்காமல் பக்கத்திலே கைச்சிறகால் போர்வையாகப் போர்த்திக் கொண்டு அல்ல, பொத்திக் கொள்ளுங்கள்.

பொத்திக்கொண்டு குழந்தைகளோடு வரிசையாகப் பாடுங்கள்.

’ வெற்றி வடி வேலன்—அவனது
வீரத்தினைப் புகழ்வோம்
சுற்றி நில்லா தே போ—பகையே
துள்ளி வருகுது வேல் . .!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்—பராசக்தி
ஓம் சத்தி ஓம் சக்தி ஓம்.’

இன்றைக்கு இது போதும். மெதுவாக அப்புறம் திருக்குறள், திருவாசகம், நா.தி.பி. எல்லாம் ( இது என்ன அப்ரிவியேசன் என்று முழித்தால் உங்களுக்கு இரண்டு உதை படவாஸ், யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள், இல்லை என்றால் நீங்கள் பெயில்) பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.

அடுத்த பக்கத்தில் சந்திக்கும் முன் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன், பாரதி படியுங்கள், உங்களுக்காக அல்ல, உங்கள் குழந்தைகள் குழந்தேள்களாக மாறி விடாமல் இருப்பதற்காக.

வணக்கமுடன்

மகுடதீபன்.
30