tamil pages of magudadheeban -  
 

50 rupees

ஆன்மீகக் கட்டுரைகள் என்றதும் சிலர் அரண்டுவிடுவார்கள், எங்கே, இப்போது நாம் கோபுர வாசலில் நுழைகிறோம், முதலில் இருப்பது கொடி மரம் அதை மும்முறை வலம் வருவோம், அப்புறம் இருப்பது பலிபீடம், அதில் நம் கெட்ட நினைவுகளை எல்லாம் பலி இட்டுவிட்டு என்று ஆரம்பித்துக் குவிக்கப் போகிறேன் என்று தயவு செய்து நினைத்து விடாதீர்கள்.
இறைவனுக்கு ஆடல் பிடிக்கும்.
பக்தனுக்கு அவனைத் தேடல் பிடிக்கும்
எனக்கு அவன் பேரை வைத்துக்கொண்டு நடத்தும் சில பொய்ம்முகக் கூத்துக்களைச் சாடல் பிடிக்கும்.
கல்வியே வியாபாரம் ஆகிவிட்ட இந்தக் காலத்தில் ஆன்மீகமும் வழிபாடும் விதி விலக்கா என்ன?வேஷம். இடம்பம். புகழ் ஆசை. தேவையில்லாத சம்பிரதாயங்கள்.
இந்த மனிதர்கள் கடவுளுக்குக் கல்யாணம் மட்டுமா பண்ணி வைக்கிறார்கள்? மீனாட்சி அரசாளும் ஊரில் போஸ்டர் அடித்து ஏக அமர்க்களம்.
இன்று மணவிழாக் காணும் மீனாட்சி சொக்கநாதரை வாழ்த்தும் அனல் குரூப்ஸ் எனத் தெருவுக்குத் தெரு போஸ்டர். சிலர் போய் மொய் கூட எழுதி வந்தார்கள். செத்த பிறகு சொர்க்கம் போய் ஏன் நீ திருப்பிச் செய்யவில்லை எனக் கடவுளைக் கேட்காதிருந்தால் சரி.

இப்போதெல்லாம் கலியாணம் என்றால் வாழ்த்துவதற்கா போகிறார்கள்? ஏதோ போனோம் வீடியோவில் முகம் காட்டினோம் என attendence கொடுக்கத்தானே நிறையப்பேர் போகிறார்கள். ஒருசிலர் நிஜமாகவே வாழ்த்தத்தான் போவோம் என்றாலும் போய் வாழ்த்தவா முடிகிறது? வாழ்த்தையும் அட்சதையையும் வீடியோக்காரன் தலையிலும் போட்டோகிராபர் தலையிலும் வீசிவிட்டு வரத்தான் முடிகிறது.
அதே போலத்தான் கோவிலும் என்று ஆகிவிட்டது.காசில்லாமல் சாமிதரிசனம் இல்லை என்று ஆய்விட்டது சில பெரிய கோவில்களில். தர்ம தரிசனம் என்றால் ஏதோ ஒரு கணப்போது அவ்வளவே. அப்புறம் ஓடு ஓடு என்று நம்மை விரட்டாத குறை. கும்பிடவா முடிகிறது?
தெரியாத் தனமாய் தைப்பூசத்துக்கு முதல்வாரம் சமயபுரத்தில் மாட்டிக் கொண்டேன். கால் ஊன்ற இடம் இல்லை. மஞ்சள் சேலை கட்டியவர் ஒருவர் என்றால் அவர் கூடவே attendence கொடுக்க வந்த கூட்டம் இருபது பேர்.
பாதி யூனிபார்ம் அணிந்த கோவில் பணியாள் என்னை அணுகினான், ஏதோ எனக்குக் கடவுளைக் காட்ட வரும் தேவ தூதன் போல.
'சார் அம்பது ரூபா தான் உள்ளே கூட்டிப் போகிறேன்' என்றான்.
எப்படி, ககன மார்க்கமாகவா?
பார்த்தேன், பத்திர அலுவலகத்திலும், வட்டாட்சியர் அலுவலகத்திலும் தந்தாலாவது பத்திரம் , பட்டா எல்லாம் கிடைக்கும், இங்கே கொடுத்து என்ன கிடைக்கப் போகிறது, முன்னே போகிறான் பார், எனப் பின்னே உள்ளவர்களின் வயிற்றெரிச்சல்தான் கிடைக்கும்.
எனவே ஒரு எவ்வு எவ்விக் கும்பிடு போட்டுவிட்டுத் திரும்பிவிட்டேன்.