Tamil Pages of Magudadheeban

 காட்டுவிப்பது எந்நாள்



பொல்லாத பூமியிலே
வாழ்ந்ததெலாம் போதுமடா
சொல்லாதே வேறொன்றும்
சோதிவள நாட்டுக்குள்
செல்லாமல் இப்படிநாம்
சிக்குவதா வாவாவா
வல்லானே நின்னுடைய
மாநிலத்தைக் காட்டு
வானோர்க்கும் கிட்டா
மலர்க்கையை நீட்டு

நீட்டி முழக்கும்
நிலத்தில் இனிக்காலம்
ஓட்ட முடியாமல்
உன்னைச் சரண் புகுந்தோம்
வாட்டி வதையாமல்
வாவாவா உன்தேசம்
காட்டி முடித்துக்
கரம் பற்றித் தூக்கு
கங்கணத்தைக் கட்டிக்
கனக உடல் ஆக்கு

ஆக்கிப் படைக்கும்
அதிகாரி அப்புறமேல்
போக்கி அழிப்பிக்கும்
போராளி மத்தியிலே
காத்துப் புரக்கின்ற
காப்பாளி என்றெல்லாம்
தீக்குளு சுடர்ஆகிச்
சேர்வதுனை என்று
தேயம் அழைப்பாயோ
தில்லை மணி மன்று ?

மன்றாடி உந்தன்
மகிமை அறியாமல்
நின்றாடி மாயும்இந்
நீசரை என்சொல்கேன்
அன்றாடம் எண்ணி
அலைபாயும்
என்றாட வருகின்றாய்
இப்போதே ஆடு
ஈர்த்துக் கொள் ஈர்த்துக்கொள்
என்னைஉன் நாடு

நாடாது வேறொன்றை
நண்ணாது உனதடிக்கே
ஈடாக ஒன்றும்
இலைஎன்ற தொழுதோம்கண்
கூடாகக கண்டு
கரம்சேர்த்தக் கொண்டுந்தன்
நாடேகு இல்லையேல்
நக்கல்எலாம் தாங்க
நம்மாலே முடியாது
நம்பன்அடி நீங்க

நம்பன்அடி மட்டும்தான்
நம்பினேன் மற்றவரை
இம்மியும் நம்பிலேன்
எல்லோரும் வாய்நீட்டி
வம்புகள் பேசுவார்
வார்த்தையால் ஏசுவார்
அம்புவியில் வாழ்ந்ததெலாம்
அம்மாடி போதும்
ஆணிப்பொன் பூமிக்கு
அனுப்பிவிடு போதும்

போதார் மலர்ப்பாதம்
போற்றி சிவபுரத்து
நாதா நடத்தரையா
ஞான சிதம்பரத்து
வேதா எனப் பலவாய்
வீறிட்டு அலறிடினும்
சாதா ரணம்போல்நீ
தாழ்த்துவதும் என்னே
தடைஎல்லாம் நீக்காய்
தலம் சேரும் முன்னே

முன்னே வரவழைத்து
முத்துச் சரம் பூக்கும்
அன்னை அவள்முன்
அறிமுகமே செய்வித்து
மின்னார் தேயத்தில்
மேவி உடன்இருக்கப்
பொன்னார் திருமேனி
புளகிப்பது எந்நாள்
புரியாத ஐந்தொழில்யாம்
பூணுவதும் எந்நாள்

பூணும் படிக்கமனம்
பூரிக்க வந்துஇறங்கிப்
பேணும் படிக்குவாய்
பேசி மகிழ்ந்தசிவம்
வேணும் படிக்குஅருளின்
வெள்ளத்தில் மூழ்கடிக்கக்
காணும் படுக்குஎன்னைக்
கைகோர்ப்ப தெந்நாள்
காணாத காட்சிஎலாம்
காட்டுவிப்ப தெந்நாள்

காட்டில் மலையில்
கடுந்தவத்தில் கிட்டாத
தேட்டைத் திரவியத்தைச்
சீரை இடக் கரத்தால்
காட்டும் கலைஞானப்
பூமியிலே கண்டிடலாம்
பூட்டைத் திறப்பித்துப்
பொன்னுலகம் சேர்ப்பி
புறப்பட்டோம் எம்முடைய
பூங்கரத்தைக் கூப்பி.



- மகுடதீபன் 1989

 

best viewed in opera browser or firefox