காவல்
நிலைசாய்க்க வந்த
முனித்தேவன் நேர்முன்னர்
தலைசாய்க்க நின்ற
தடைநீக்கம் செய்வித்த
கலைசாய்க்கும் கற்றைச்
சடையானே காவல்
கற்பனைகள் காணாத
கற்பகமே காவல்
மலைசாய்க்க வேல்வைத்த
மைந்தன் மழலையினை
விலைசாய்க்க மாட்டாது
விகசிக்கும் அன்னையுடன்
அலைசாய்க்க மீன்விசிறும்
அம்மானே காவல்
அச்சாரச் சொல்சொன்ன
ஐயானே காவல்
ஐயாறன் ஆரூரன்
ஆனைக்கா வன் என்றுக்
கையாறக் கும்பிட்டுக்
கண்ஆரத் தேன் அள்ள
மெய்யாரச் சேர்கின்ற
மின்னானே காவல்
வித்தாரச் சொல்சொன்ன
விடையானே காவல்
செய்யாரம் நின்றாட
சிந்நூரம் கண்கூசும்
ஒய்யார வல்லியுடன்
உத்தாரம் ஈகின்ற
கையேறு தீயான்மெய்
கண்டானே காவல்
கண்ணேறு படுநெற்றிக்
கண்ணாணே காவல்
கண்ணுக் கினியாளைக்
கைகோர்த்துக் கொண்டெங்கள்
மண்ணில் மலர்ப் பாதம்
வைத்து மனைஏறிப்
பண்ணில் மொழிபேசும
பால் நீற்றன் காவல்
பாகம் பிரியாத
பரமேசன் காவல்
உண்ணும் பொழுதும்
உறங்கும் பொழுதும்யாம்
எண்ணும் பொழுதும்
இசைக்கும் பொழுதெல்லாம்
அண்ணித் திருக்கின்ற
அத்தானே காவல்
அத்தாணி மன்றேறும்
அண்ணாவே காவல்
அண்ணா மலைஉச்சி
அக்கினியான் வாய்பேச
ஒண்ணாப் பிரகாசம்
உட்கூட்டில் தான்அளித்தான
கண்ணார் அமுதாய்க்
கலந்தானே காவல்
கச்சேரி நட்டம்
களித்தானே காவல்
தண்ணார் மொழிபேசித்
தன்வழியி லேதடைகள்
நண்ணா வழிஅருளி
நன்றாய் விளையாண்டு
உண்ணா முலையாள்
உகந்தானே காவல்
உத்திர கோசமங்கை
உள்ளானே காவல்.
மன்னவனை மாணிக்க
வாசகனை மாச் சுடராய்
நின்றவனை ஓயா
நிருத்தியனை நெஞ்சாளும்
தென்னவனைத் தெண்டனிட்டோம்
செய்யானே காவல்
தென்பாண்டி நாட்டில்
திளைத்தானே காவல்.
என்னவனைத் தன்அடிகள்
ஏத்தக் கொடுத்துநலம்
சொன்னவனைச் சுந்தரனைச்
சொக்கச் சுடர்விடுக்கும்
பொன்னவனைப் போற்றிடுவோம்
புண்ணியனே காவல்
புண்கொண்டு மண்சுமந்த
போதகனே காவல்
-மகுடதீபன் 1989
