Tamil Pages of Magudadheeban

  பிரவேசம்



இன்னார்என் றேஅறிந்து
எமைஎடுத்தான் குழந்தை என
மின்னார்செஞ் சடையானின் பிரதேசம் - இதில்
மேவாதோ அடியேங்கள் பிரவேசம் ?

மூவாத உடல்அடைய
மொழிகொடுத்தான் கீழ்விழுந்து
சாவாத கலைபயிலும் பிரதேசம் - இதில்
சாராதோ அடியேங்கள் பிரவேசம்

சுவடிகளோ இதுவரையக்கும்
சொல்லவிலை என்றாலும்
தவமுனிவர் குழுமுகிற பிரதேசம் = இதில்
தான்செய்ய மாட்டோமோ பிரவேசம்

சொல்லாத மொழிஉரைக்கும்
சுடர்உடலைக் காட்டுவிக்கும்
எல்லாளன் கோல்ஓச்சும் பிரதேசம் - இதில்
என்றுவரும் எம்முடைய பிரவேசம்

தேவிசிவ காமியுடன்
சிறுகுடிலில் நுழைந்தெனது
ஆவிபுகுந் தாடிடுவான் பிரதேசம் - இதில்
ஆவதுதான் என்றெமது பிரவேசம்

மாமலையின் மூலிகையால்
மருந்துமணி மகத்துவத்தால்
ஏமுடல் கொள்ளுகிற பிரதேசம் - இதில்
என்றுவரும் எம்முடைய பிரவேசம்

வள்ளல்அவர் இருக்கமணி
வாசகனும் அறம்உரைக்கும்
வெள்ளிமணி அம்பலத்தான் பிரதேசம் - இதில்
விளைவதுஎன் றோஎமது பிரவேசம்

மீனாட்சி முதலாக
வருங் குலத்தில் எமைஎடுத்த
கோன்ஆட்சி புரிகின்ற பிரதேசம் - இதில்
கொள்ளுவமோ எம்முடைய பிரவேசம்

- மகுட தீபன் 1989

best viewed in opera browser or firefox