Tamil Pages of Magudadheeban

 சங்கம்



அன்பாலே தான்கட்டி
ஆண்டானை ஆண்டேமுன்
தென்பாண்டி உத்தர
கோசத் திரு மங்கை
நின்றானை எங்கள்
நிமலானை ஐந்துகரக்
கன்றானை தன்னைக்
களித்துப் பயந்தானை
ஒன்றானை ஒன்றாதார்க்கு
ஒன்றானை ஆணிப்பொன்
மன்றானைச் சேர்ந்து மகிழாயோ சங்கம்
மன்னானின் பேர்பாடி ஊதாயோ சங்கம்

ஆச்சரியம் என்றார்
அவல்மென்றார் ஓர்சிலரோ
மூச்செறிய நின்றார்
முடியா தெனப் பகர்ந்தார்
பூச்சொரியும் கார்குழல்ப்
பொற்பாவை தன்னோடு
நாய்சிறியேன் தன்னையும்ஓர்
ஆளாய் நயந்தெடுத்து
ஓச்சியசீர் உத்தர
கோச உயர்மங்கைத்
தீச்சொரியும் கையானைச் சேராயோ சங்கம்
சேவடிக் கேபணிந்து ஊதாயோ சங்கம்

ஈசன் எனைப்பெற்ற
ஏந்திழையா ளோடேபொன்
ஊசல் விளையாடும்
உத்தர கோச மங்கைத்
தேசன் சிவலோகன்
தில்லைத் திருத் தலத்து
வாசன் பதம்எடுத்து
வாசற் படியேறி
வாசம் கமழ மணி
வாசகத்தை வாசித்த
நேசன் உடன் ஒன்றி நில்லேடா சங்கம்
நிர்த்தனத்தில் ஒன்றாகி ஊதேடா சங்கம்

உங்கட்கு ஒருவார்த்தை
ஓதும் கடப்பாட்டில்
இங்கு பிறந்தோம்
இமையோர்கள் ஏத்துதற்குத்
தெங்கில் கிளிசொல்
திருஉத் திர கோச
மங்கை அமர்ந்தாலும்
மாணிக்கச் சொல்லுக்காய்
எங்கே எவர்அழைத்தார்
என்றே வருகின்றான்
சங்கரனின் மூச்சோடு சாராயோ சங்கம்
சங்கீத நகையோடு ஊதாயோ சங்கம்

ஊரார் வெடிச் சிரிப்பும்
உற்றார் கிசுகிசுப்பும்
ஆர்ஆர் தெரியாது
அவர்பேச்சும் கேட்டிலையோ
சீர்ஆர் திரு உத்
திரகோச மங்கையிலே
வாரா வகையில்
வலிய வரம் எடுத்த
ஆரா அமுதன்
அனைத்தும் மடுக்கின்றான்
சாரா வணம்வந்து சாராயோ சங்கம்
சாவா நிலைஅடைந்தோம் ஊதாயோ சங்கம்

எற்றி உதைத்தும்
எமன்படவே யாம்நிற்க
ஒற்றி எடுத்தான் காண்
உத்திர கோச மங்கை
உற்ற பெருமான்
உயிர் ஆனான் இவ்வள நாள்
கற்ற பலகல்வி
காணாம லேபோக
அற்று விடவே
அருட் கல்வி ஈந்தானைக்
கொற்றக் குடையானைக் கொள்ளாயோ சங்கம்
கோதிற் குலத்தார்க்கு ஊதாயோ சங்கம்

ஏனைத் தலம் எல்லாம்
ஏதும் தலம்அல்ல
ஞான சிதம்பர
நற்றலமே நாடென்று
மோன மொழித் தேவன்
முன் மொழிந்தான் கேட்டிலையோ
கோனாய் திரு உத்
திர கோச மங்கையிலே
தேனாய் இனித் தாண்டான்
செல்லம் கொடுத்த தனால்
நானே அவனாக நல்காயோ சங்கம்
நமனைப் புறம்கண்டே ஊதாயோ சங்கம்

ஐயாற்றில் நின்றார்க்கும்
ஆரார்க்கும் ஏலார்க்கும்
பொய்ஆர்க்கும் நெஞ்சார்க்குப்
புத்தியில்எட் டார்க்கும் தத்
தை ஆர்க்கும் உத்திர
கோசத் திரு மங்கை
செய்யார்க்கும் எங்கள்
சிவனார்க்கும் தீஏந்தும்
கையார்க்கும் எம்நம்பிக்
கையார்க்கும் நாள் என்று
மெய்ஆர்க்கும் என்றேநீ மேவாயோ சங்கம்
மின்னார்க்கும் பொன்னார்க்கே ஊதாயோ சங்கம்

அவ்வளவும் சொன்னோம்
அவனே வலியவந்து
இவ்வளவும் தந்தால்
இதுபோதா தா நெஞ்சே
செவ்வாய்க் கிளிபேசும்
சீர்உத் திரகோசன்
நவ்வியொடு தீஏந்தி
நட்டம் புரிகின்ற
செவ்வியினைக் கண்குளிரக்
கண்டும் சிலிர்க்கிலையோ
கவ்வி அவனோடு கலவாயோ சங்கம்
கங்கன் திறம்பாடி ஊதாயோ சங்கம்

- ம கு ட தீ ப ன் 1989
 

best viewed in opera browser or firefox